சமதானத்திற்கான கால்பந்து அமைப்பு – இலங்கை மற்றும் முத்துவெல முதிய வீரர்கள் கழகம் ஆகியவை இணைந்து நடாத்திய 2017ஆம் ஆண்டிற்கான, சமாதானம் மற்றும் அறக்கட்டளைக்கான சர்வதேச முதியவர்கள் கால்பந்து தொடரை சுப்பர் ஸ்டார் முதியோர் கால்பந்து கழகம் வென்றுள்ளது.
கொழும்பு சிட்டி கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், சுப்பர் ஸ்டார் கால்பந்து கழகம் வென்றிருப்பினும், இலங்கைத் தீவில் உள்ள விஷேட தேவையுடைய குழந்தைகளின் நலன் கருதி இத்தொடரில் பங்கேற்ற 9 அணிகளுமே உண்மையான வெற்றியாளர்களாகக் கணிக்கப்படுகின்றனர்.
றோயல் – தோமியர் கல்லூரிகளுக்கிடையிலான வருடாந்த சமர் தயார் நிலையில்
இத்தொடரின் இறுதிப் போட்டியின்போது வெல்லம்பிட்டிய அஷ்–ஷிபாவின் விசேட தேவையுடைய குழந்தைகள் மற்றும் பிரிதிபுர சிறுவர் இல்ல குழந்தைகள் தங்களது ஆற்றல்களை வெளிக்காட்டியமை, போட்டியினை காண வந்திருந்த கூட்டத்தின் உள்ளங்களை நெகிழ்ச்சி அடையச் செய்ய வைத்த சம்வமாய் இருந்தது.
விஷேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவும் விதமாக இத்தொடரினை ஏற்பாடு செய்திருந்த சமானத்திற்கான கால்பந்து அமைப்பு – இலங்கையின் தலைவர் முஹீத் ஜீரானின் முயற்சிகளுக்கு நன்றி பாராட்டி செயற்படும் விதமாகவே இறுதி நிகழ்வில் விசேட தேவையுடையவர்களின் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
FC லண்டன், Red and White (இங்கிலாந்து), கொல்கத்தா யூனைடட் முதியவர்கள் கழகம் (இந்தியா), சுப்பர் ஸ்டார் முதியவர்கள் கழகம், மாளிகாவத்தை முதியவர்கள் கழகம், ஜாவா லேன் முதியவர்கள் கழகம், அளுத்கடை முதியவர்கள் கழகம், ஓல்ட் பீட்டர்சன்ஸ் கழகம் மற்றும் முத்துவெல முதியவர்கள் கழகம் ஆகியவற்றில் இருந்து 200 வீரர்கள் வரையில் இத்தொடரில் பங்கெடுத்தனர்.
இத்தொடரில், பங்கெடுக்க ஒவ்வொரு அணியும் செலுத்திய அனுமதிக் கட்டணங்களின் மூலமும் மேலதிக அணிகளின் நன்கொடைகள் மூலமும் கிடைக்கப் பெற்ற ரூபா 220,000 பணம் மகரகம புற்று நோய் வைத்தியசாலை (ரூபா. 100,000), The Ceylon School – ரத்மலான, விழிப்புலன் மற்றம் செவிப்புலன் அற்றோர் பாடசாலை (ரூபா. 40,000), அஷ்–ஷிபா விசேட தேவையுடையோர் சிறுவர் அமைப்பு (ரூபா. 40,000) மற்றும் பிரிதிபுர சிறுவர் இல்லம் ஆகியவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இறுதிப் போட்டியில் கொல்கத்தா யுனைடட் முதியவர்கள் கழத்தினை, சுப்பர் ஸ்டார் முதியவர்கள் கழகம் 5-1 என வீழ்த்தியிருந்தது. எனினும், இத்தொடர் அறக்கட்டளைக்கான நல்ல நோக்கத்தில் நடாத்தப்பட்ட காரணத்தில் போட்டி முடிவினை இரு அணிகளும் மனதார ஏற்றுக் கொண்டன.
சுப்பர் ஸ்டார் அணியில், தேசிய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் இடம்பெற்றதோடு, தற்போதைய சம்பியன்ஸ் லீக் மற்றும் FA கிண்ணம் ஆகியவற்றில் விளையாடிய வீரர்களும் இடம்பெற்றனர்.
இத்தொடரில் வென்ற அணிக்கு, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆணையத்தின் பணிப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சக்கீல் ஹூசைன் கிண்ணத்தினை வழங்கி வைத்தார். இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு இங்கிலாந்தின் West Ham United FC கழகத்தின் விசேட தூதுவர் ஷாகிர் கான் கிண்ணத்தினை வழங்கினார். அத்துடன், இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளும் வருகை தந்ததோடு, அதிகளால் நன்கொடைகளும் வழங்கப்பட்டிருந்தன.
இப்போட்டித்தொடரின், ஏற்பாட்டாளர் முஹீத் இறுதி நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில்,
“இந்நிகழ்விற்கு முக்கியமான அனுசரணையாளர் ஒருவரைப் பெறுவது கடினமாய் இருந்தது. எனினும், நாம் சாதித்து காட்டி விட்டோம். வரும் காலங்களில் இவ்வாறான நல்ல காரியத்திற்காக சர்வதேச அளவிலான முதியவர்கள் தொடருக்கு மேலும் பல நாடுகளை அழைப்போம். விசேடமாக ஐரோப்ப நாடுகளில் இருந்து ஆதரவினை பெற்று சிறப்பாக நடாத்த எத்தனித்துள்ளோம் “ என்றார்.
இத்தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட, கொல்கத்தா யுனைடட் முதியவர்கள் அணி, தாம் இலங்கையை விட்டு புறப்படும் முன்னர் The Ceylon School – ரத்மலான, விழிப்புலன் மற்றும் செவிப்புலன் அற்றோர் பாடசாலையைப் பார்வையிட்டதோடு, தனிப்பட்ட ரீதியிலான நன்கொடை ஒன்றினையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.