மூன்றாவது T20I போட்டியிலிருந்தும் நீக்கப்படும் ஸ்டார்க்!

Australia tour of Sri Lanka 2022

258

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது T20I போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் நீக்கப்பட்டுள்ளார்.

மிச்சல் ஸ்டார்க் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் T20I போட்டியின் போது உபாதைக்குள்ளாகியிருந்த நிலையில், இரண்டாவது T20I போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இரண்டாவது T20I போட்டியில் போராடி வென்ற அவுஸ்திரேலியா!

முதல் T20I போட்டியில் பந்துவீசிய போது ஸ்டார்க்கின் இடதுகையின் ஆள்காட்டி விரல், அவருடைய பாதணியின் அடிப்பகுதியில் உள்ள கூர்மையான பகுதியில் பட்டு காயத்துக்குள்ளாகியது. குறித்த போட்டியை முழுமையாக ஸ்டார்க் விளையாடிய போதும், பின்னர் காயம் ஏற்பட்ட பகுதியில் 6 தையல்கள் போடப்பட்டிருந்தது.

இதன்காரணமாக இரண்டாவது T20I போட்டியிலிருந்து நீக்கப்பட்ட இவர், தற்போது மூன்றாவது T20I போட்டியிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மிச்சல் ஸ்டார்க்கின் காயம் குணமடைவதற்கு சுமார் 7 நாட்கள் வரை எடுக்கும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டியிலும் இவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இதன் காரணமாக T20I தொடரில் ஸ்டார்க்கிற்கு பதிலாக விளையாடிய ஜெய் ரிச்சட்சன் ஒருநாள் தொடருக்கான குழாத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான முக்கிய வீரர்களில் ஒருவராக மிச்சல் ஸ்டார்க் உள்ளார். எனவே, இவருடைய உபாதை தொடர்பில் அவதானம் செலுத்திவருவதுடன், டெஸ்ட் அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட இலங்கை வந்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற T20I  தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளதுடன், மூன்றாவது T20I போட்டி எதிர்வரும் 11ம் திகதி கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<