இரண்டாவது T20I இல் மிச்சல் ஸ்டார்க்கிற்கு ஓய்வு

298

பாதணி முள் (Shoe Spike) ஏற்படுத்திய விரல் உபாதையினை அடுத்து, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மிச்சல் ஸ்டார்க் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> சகலதுறைகளிலும் பிரகாசித்த அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

மிச்சல் ஸ்டார்க்கிற்கு இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான முதல் T20I போட்டியின் முதல் ஓவரினை வீசும் போது, வினோதமான முறையில் பாதணி முள் மூலம் விரலில் உபாதை உருவாகியிருந்ததோடு, இந்த உபாதையே அவர் இரண்டாவது போட்டியில் விளையாடாமல் போவதற்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

இந்த உபாதை குறித்து கருத்து வெளியிட்ட  அவுஸ்திரேலிய பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட், மிச்சல் ஸ்டார்க்கிற்கு பந்துவீசும் கையில் உள்ள சுட்டு விரலில் பாதணி மூலமான உபாதை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

மிச்சல் ஸ்டார்க் இல்லாத நிலையில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டியில், அவுஸ்திரேலிய அணி அவரின் பிரதியீடாக வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்ஸன் அல்லது சுழல்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்வெப்ஸன் ஆகிய இருவரில் ஒருவரினை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> டிக்கெட் வருமானத்தை நன்கொடையாக வழங்கும் இலங்கை கிரிக்கெட்

இதேநேரம் அவுஸ்திரேலிய – இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில், முதல் போட்டியில் 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருக்க, தொடரின் இரண்டாவது T20I போட்டி இன்று (08) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<