இலங்கையில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 4ஆவது பருவகாலத்துக்கான ஒளிபரப்பு உரிமத்தை இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வாங்கியுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதுடன், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைத்தீவுகள், மத்தியக்கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆபிரிக்க நாடுகளில் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து அணித் தலைமையில் அதிரடி மாற்றம்
இந்தியாவின் முன்னணி விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனமாக திகழும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐசிசி, இந்தியன் பிரீமியர் லீக், இந்தியன் சுபர் லீக், அவுஸ்திரேலிய கிரிக்கெட், பிரீமியர் லீக் மற்றும் விம்பில்டன் போன்ற உலகின் முதற்தர விளையாட்டு நிகழ்வுகளின் உரிமத்தை பெற்று அதனை ஒளிபரப்பி வருகின்றது.
LPL தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள விடயத்தினை, தொடரை நடத்தும் IPG நிறுவனம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை என்பவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியுள்ளமை தொடர்பில் LPL பணிப்பாளர் சமந்த தொடான்வெல குறிப்பிடுகையில்,
“இந்த ஆண்டு நடைபெறவுள்ள LPL தொடர் சர்வதேச ரீதியில் ரசிகர்களை ஈர்த்து புதிய உயரத்தை அடையும் என எதிர்பார்க்கிறேன். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற பிரபலமான நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ள நிலையில், மேலும் பரந்த பார்வையாளர்களை வரவேற்க கூடியதாக இருக்கும்” என்றார்.
ஐந்து அணிகள் மோதும் இந்த LPL தொடர் இம்மாதம் 31ம் திகதி முதல் அடுத்த மாதம் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<