புனித பேதுரு கல்லூரிக்கு எதிராக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மைலோ ஜனாதிபதி கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியியில் கடைசி சில நிமிடங்களில் போடப்பட்ட பெனால்டியின் உதவியுடன் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நடப்பு சம்பியனான இசிபதன கல்லூரி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
ஆரம்பம் முதல் இறுதிவரை மிக்க பரபரப்பை ஏற்படுத்திய இந்த அரை இறுதிப் போட்டியின் முழு நேரத்தின் போது இசிபதன கல்லூரி 22 புள்ளிகளையும் புனித பேதுரு கல்லூரி 20 புள்ளிகளையும் பெற்றன.
நடுவர்களின் சில சர்ச்சைக்குரிய தீர்ப்புகளும், கடைசி நிமிடங்களில் கிடைத்த பெனால்டி மற்றும் இசிபதன அணியின் 30 மீற்றருக்கு அருகில் கிடைத்த லைன் அவுட்டை புனித பேதுரு அணியினர் முறையாகப் பயன்படுத்தத் தவறியமையும் அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
போட்டியின் 7ஆவது நிமிடத்தில் இசிபதன கல்லூரியின் 8ஆம் இலக்க வீரர் டெவின் குணரட்ன ட்ரை ஒன்றை வைத்தார். அதற்கான கொன்வெர்சன் மூலம் மேலதிக 2 புள்ளிகளை எம். எஸ். ருபேறு இலகுவாக பெற்றுக்கொடுத்தார். (இசிபதன கல்லூரி 7 – 0 புனித பேதுரு கல்லூரி)
சற்று நேரத்தின் பின் கிடைத்த மற்றொரு ட்ரை வாய்ப்பை நொக் ஒன் காரணமாக இசிபதன கல்லூரி தவறவிட்டது. எனினும் 15ஆவது நிமிடத்தில் ரெண்டி சில்வா ட்ரை வைக்க அதற்கான கொன்வெர்சனை ருபேறு புள்ளிகளாக மாற்றினார். (இசிபதன கல்லூரி 14 – 0 புனித பேதுரு கல்லூரி)
போட்டியின் 26ஆவது நிமிடத்தில் புனித பேதுரு அணி வீரர்கள் திறமையாக பந்து பரிமாற்றம் செய்து சமித் பெர்னாண்டோவுக்கு வழங்க அவர் புனித பேதுரு கல்லூரி சார்பாக முதலாவது ட்ரையை வைத்தார். ஆனால் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற கொன்வெர்சன் தவறவிடப்பட்டமையால் மேலதிக புள்ளிகள் பெறப்படவில்லை. (இசிபதன கல்லூரி 14 – 5 புனித பேதுரு கல்லூரி)
சற்று நேரத்தின் பின் புனித பேதுரு அணி வீரர் உதைத்த பந்தைப் பிடித்த இசிபதன அணி வீரர் பந்துடன் கோட்டுக்கு வெளியே உருண்டபோதிலும் மத்தியஸ்தரினால் இசிபதன கல்லூரிக்கு லைன் அவுட் வழங்கப்பட்டமை பெரும் ஆச்சரியத்தைத் தோற்றுவித்தது. இதனைத் தொடர்ந்து புனித பேதுரு அணி வீரர் ருக்ஷான் மதுஷங்க, மத்தியஸ்தரால் மஞ்சள் அட்டை காட்டி அனுப்பப்பட புனித பேதுரு கல்லூரிக்கு 14 வீரர்களுடன் விளையாட நேர்ந்தது.
சில நிமிட இடைவெளியில் இசிபதன கல்லூரிக்கு கிடைக்கப்பெற்ற பெனல்டி வாய்ப்பை ருபேறு தவறவிட்டார். எனினும் 36ஆவது நிமிடத்தில் சிறப்பான பந்து பரிமாற்றத்தில் ஈடுபட்ட இசிபதன கல்லூரி சார்பாக எம். என். அசௌவ் ட்ரை ஒன்றை வலது மூலையில் வைத்தார். அதற்கான கொன்வெர்சன் இலக்கு தவறியதால் மேலதிக புள்ளிகள் பெறப்படவில்லை. (இசிபதன கல்லூரி 19 – 5 புனித பேதுரு கல்லூரி)
39ஆவது நிமிடத்தில் ட்ரை வைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பைத் தவறவிட்ட புனித பேதுரு கல்லூரி சற்று நேரத்தில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஜூலியன் சார்ள்ஸ் மூலம் ட்ரை வைத்தது. அதற்கான கொன்வெர்சனை டி. ரீ. ஈ. தசநாயக்க இலக்கு தவறாமல் உதைத்தார். (இசிபதன கல்லூரி 19 – 12 புனித பேதுரு கல்லூரி)
முதல் பாதி: இசிபதன கல்லூரி 19 – 12 புனித பேதுரு கல்லூரி
இடைவேளையின் பின்னர் திறமையாக விளையாடிய புனித பேதுரு கல்லூரி அணியினர் 55ஆவது நிமிடத்தில் தசநாயக்கவின் பெனால்டி மூலம் 3 புள்ளிகளைப் பெற்றது. (இசிபதன கல்லூரி 19 – 15 புனித பேதுரு கல்லூரி)
அதனைத் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக விளையாடியமையால் இசிபதன கல்லூரி அணியின் யூ. ஜீ. ஜயமான்ன மத்தியஸ்தரினால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட புனித பேதுரு கல்லூரி அணியினர் 69ஆவது நிமிடத்தில் தசநாயக்க மூலம் ட்ரை ஒன்றை வைத்தது. அதற்கான கொன்வெர்சன் கைகூடாத போதிலும் முதல் தடவையாக போட்டியில் புனித பேதுரு கல்லூரி 20 – 19 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது. (இசிபதன கல்லூரி 19 – 20 புனித பேதுரு கல்லூரி)
சற்று நேரத்தின் பின் புனித பேதுரு கல்லூரி அணியினர் இரண்டாவது தடவையாகவும் கிடைக்கப்பெற்ற மஞ்சள் அட்டை காரணமாக 14 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டனர்.
இது இசிபதன அணிக்கு சாதகமாக அமைந்ததுடன் 76ஆவது நிமிடத்தில் பெனால்டி ஒன்று முதன்மை நடுவர் டின்கா பீரிஸினால் வழங்கப்பட்டது. இதனை சி. பெர்னாண்டோ இலக்கு தவறாமல் உதைக்க இசிபதன கல்லூரி மீண்டும் 22 – 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது. (இசிபதன கல்லூரி 22 – 20 புனித பேதுரு கல்லூரி)
தொடர்ந்து புனித பேதுரு கல்லூரி அணிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அவ்வணி வீரர்கள் முறையாகப் பயன்படுத்தத் தவறியதால் இசிபதன கல்லூரி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஜனாதிபதி கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முழு நேரம் : இசிபதன கல்லூரி 22 – 20 புனித பேதுரு கல்லூரி
புள்ளிகள் பெறப்பட்ட விதம்
இசிபதன கல்லூரி – ட்ரை 3, கொன்வெர்சன் 2, பெனால்டி 1
புனித பேதுரு கல்லூரி – ட்ரை 3, கொன்வெர்சன் 1, பெனால்டி 1