வான்டேஜ் FA கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றில் சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழகத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கில் போராடி வெற்றிபெற்ற சிறைச்சாலை விளையாட்டுக் கழகம் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது
FA கிண்ண சுற்றுத்தொடரின் காலிறுதிப்போட்டிக்கான இறுதி அணியினை தெரிவு செய்வதற்கான இன்றைய போட்டி துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தது.
வாய்ப்புக்கள் வீணாக சமநிலையில் நிறைவுற்ற சுபர் சன் – புளு ஸ்டார் மோதல்
சென். நீக்கிலஸ் முதற்பதினொருவர் அணி
ஜெயராஜ், அமிலன், றதீஸ்(அணித்தலைவர்), றேம்சன், அன்ரன் பிலிப்ராஜ், அஜந்தன், ஜெயப்பிரகாஷ், றொக்சன், றொக்ஷன், பெனோஜன், விக்னேஷ்
சிறைச்சாலை முதற்பதினொருவர் அணி
சம்பத், ஜெயசிறி(அணித்தலைவர்,கோல்காப்பாளர்), ஹெட்டியாராச்சி, பெரேரா, அத்தநாயக்க, இசடீன், கஜகோபன், கனிஸ்ரன், வினோத் வின்சன் குமார், தினேஷ், சத்துரங்க
மத்தியஸ்தர் றிகாசின் முதலாவது விசிலிருந்து போட்டி ஆக்ரோசமானதாக ஆரம்பமானது. ஆரம்ப நிமிடங்களிலேயே அடுத்தடுத்த முறையற்ற ஆட்டங்களை நடுவர் எச்சரித்தார்.
முதலாவது முயற்சியாக சிறைச்சாலை அணியின் கனிஸ்ரன் உட்செலுத்திய பந்து கோல் கம்பத்திற்கு அகலமாக வெளியேறியது.
8ஆவது நிமிடத்தில் மைதானத்தில் இடது பக்கத்திலிருந்து அன்ரன் பிலிப்ராஜ் பந்தினை கோலிற்கு எதிரே இருந்த இளைய வீரர் விக்னேஷை நோக்கி எறிந்தார். பந்தினை பெற்ற விக்னேஷால் சாதகமாக நிறைவு செய்ய முடியாது போனது.
நான்கு நிமிடங்களில் மீண்டும் சிறைச்சாலை அணியினரின் கோல்பரப்பினை ஆக்கிரமித்த பிலிப்ராஜ், விக்னேஷை நோக்கி பந்தினை மீண்டும் உட்செலுத்தினர். இறுதியில் கொழும்பு தரப்பினர் பந்தினை தடுத்து வெளியேற்றினர்.
சிறைச்சாலை அணியின் வின்சன் விவேகமாக கோலை நோக்கி நகர்ந்த போதும், பந்தை யாழ் தரப்பினர் போராடி வெளியேற்றினர்.
18ஆவது நிமிடத்தில் வலது பக்கத்திலிருந்து றேம்சன் உள்ளனுப்பிய பந்தை கோல்காப்பாளர் ஜெயசிறி நேர்த்தியாக சேகரிக்க தவற பந்தை மீண்டும் பெற்ற நீக்கிலஸ் வீரர்கள், இரு முனையிலிருந்தும் கோலிற்குள் செலுத்திய போதும், சாதகமாக நிறைவு செய்ய முடியவில்லை. இறுதியில் பின்கள வீரர் டினேஷ் பந்தை வெளியேற்றினார்.
கொழும்பு தரப்பினரின் முன்கள வீரர் பெரேரா கோலை நோக்கி நகர றொக்ஷன் அம்முயற்சியை முறியடித்தார்.
22ஆவது நிமிடத்தில் நீக்கிலஸின் அஜந்தன் முறையற்ற ஆட்டத்திற்கு நடுவரால் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டார். மீண்டும் 29ஆவது நிமிடத்தில் றதீஸ் மஞ்சள் அட்டை மூலம் எச்சரிக்கப்பட்டார். பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே கிடைத்த ப்ரீ கிக்கினை இஸடீன் கோலாக மாற்றினார்.
32ஆவது நிமிடத்தில் வலது பக்கத்திலிருந்து இஸடீன் உள்ளனுப்பிய பந்தை சம்பத் கம்பத்திற்கு மேலால் உதைந்து வீணடித்தார்.
பந்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நீக்கிலஸ் கழகம் தொடர்ந்தும் உள்ளும் வெளியுமாக ஆடிக்கொண்டிருந்தனர். முதல் பாதி நிறைவடைய இரண்டு நிமிடங்களிருக்கையில் யாழ் தரப்பிற்கு கிடைத்த ப்ரீ கிக் பின்கள வீரர்களில் பட்டு திரும்ப, பந்தை அன்ரன் பிலிப்ராஜ் கோலிற்கு உதைந்த போதும் பந்து கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.
முதல் பாதி: சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம் 0-1 சிறைச்சாலை விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதியின் மூன்றாவது நிமிடத்தில் மைதானத்தின் இடது பக்கத்தின் மத்திய கோட்டிற்கருகில் கிடைத்த ப்ரீ கிக்கை நேரடியாக கோலினை நோக்கி செலுத்த பந்தை சிறைச்சாலை வீரர்கள் வெளியேற்ற முயற்சிக்க, றேம்சன் தலையால் முட்ட பந்தைப் பெற்ற றொக்சன் கோலாக மாற்றினார்.
சுப்பர் சன்னை கோல் வெள்ளத்தில் மூழ்கடித்த கொழும்பு கால்பந்து கழகம்
இரண்டாவது பாதியாட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் றொக்சன் மீண்டும் கோல்பரப்பினை ஆக்கிரமிக்க வின்சன் பந்தை வெளியேற்றினார்.
றேம்சன் இடது பக்கத்திலிருந்து உள்ளனுப்பிய பந்தினை இளைய வீரர் விக்னேஷ் லாவகமாக கோலிற்குள் செலுத்தினார். எனினும் பந்து கோலிற்கு அருகால் வெளியேறியது.
இரண்டாவது பாதியாட்டத்தில் முதல் முயற்சியாக 22ஆவது நிமிடத்தில் பந்தை சிறச்சாலை வீரர்கள் நீக்கிலஸின் கழகத்தின் கோல்பரப்பிற்குள் எடுத்துச்சென்றனர். சிறைச்சாலை வீரர் முறையற்றவாறு வீழ்த்தப்பட பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே கொழும்பு தரப்பிற்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. ப்ரீ கிக்கினை மைதானத்திற்கு நன்கு பரீட்சியமான றோயல் அணி வீரர் கஜகோபன் உதைந்தார். துரதிஷ்டவசமாக பந்து கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியேறியது.
73ஆவது நிமிடத்தில் றொக்சன் இடது பக்கத்திலிருந்து சிறப்பாக பந்தை பரிமாறிய போதும், விக்னேஷ் பந்தை விரைவாக சேகரிக்க தவறினார்.
விக்னேஷ் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியிலிருந்து பந்தினை கோலினை நோக்கி உட்செலுத்தினார், எனினும் கோல்காப்பாளர் ஜெயசிறி பந்தை நேர்த்தியாக பற்றினார்.
சிறைச்சாலை அணிக்கு கிடைக்கப்பெற்ற கோணர் கிக் நேர்த்தியாக கோல் கம்பத்தினை நோக்கி உட்செலுத்தப்பட டினேஷ் தலையால் முட்டி கோலாக்கினார்.
போட்டி நிறைவடைவதற்கு 7 நிமிடங்கள் இருக்கையில் றேம்சன் உள்ளனுப்பிய பந்தை கோல்காப்பாளர் தடுத்தார், மீண்டும் அவர் உதைந்த பந்து கோல்கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.
போட்டியின் இறுதி நிமிடத்தில் றொக்ஷன் வலது பக்கத்திலிருந்து கோல் கம்பத்திற்கு எதிரே உதைந்த பந்தினை, விக்னேஷ் பந்து வந்த திசையிலேயே விரைவாக உட்செலுத்தினார், பந்து மயிரிழையில் வெளியேறியது.
மிக வேகமாக இடம்பெற்ற முதல் பாதி, சிறைச்சாலை அணியின் முன்னிலையில் நிறைவடைந்த போதும், இரண்டாவது பாதியாட்டத்தில் பந்தினை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த நீக்கிலஸ் வீரர்களால் துரதிஷ்டவசமாக முன்னிலை பெற முடியாது போக, தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை சாதகமாக்கிய சிறைச்சாலை அணியினர் போட்டியில் வெற்றிபெற்றனர்.
தொடரிலிருந்து சென். நீக்கிலஸ் அணியும் வெளியேற இம்முறை, எப்.ஏ கிண்ண காலிறுதிப்போட்டிகள் எந்தவொரு வடக்கு, கிழக்கு அணியுமின்றி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை சிறைச்சாலை விளையாட்டுக் கழகம் எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள மூன்றாவது காலிறுதிப்போட்டியில் சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து போட்டியிடவுள்ளது.
முழு நேரம்: சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம் 1-2 சிறைச்சாலை விளையாட்டுக் கழகம்
Thepapare.com இன் ஆட்டநாயகன் – டினேஷ் (இலங்கை சிறைச்சாலை வி.க)
இரண்டாம் பாதியை ஆகிரோசமாக்கிய டிபெண்டர்ஸ், கிறிஸ்டல் பெலஸ் வீரர்கள்
கோல் பெற்றவர்கள்
சிறைச்சாலை விளையாட்டுக் கழகம் – இஸடீன் 30′, டினேஷ் 80’
சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம் – றொக்சன் 48′
மஞ்சள் அட்டைகள்
சென். நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம் – அஜந்தன் 23’, றதீஸ் 29’, றொக்சன் 34’
சிறைச்சாலை விளையாட்டுக் கழகம் – பெரேரா 40’, சம்பத் 82’, டினேஷ் 89’
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<