மட்டக்களப்பு கூடைப்பந்து சம்மேளனம் (BDBA) இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் விதமாக நாடளாவிய ரீதியில் உள்ள 14 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை அணிகள் இடையே ஒழுங்கு செய்திருந்த அழைப்பு கூடைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணி திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியை 56-35 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை (2) மட்டக்களப்பின் மியானி கூடைப்பந்து அரங்கு, சிவானந்தா கூடைப்பந்து அரங்கு மற்றும் புனித மைக்கல் கல்லூரி கூடைப்பந்து அரங்கு ஆகியவற்றில் ஆரம்பமாகியிருந்த இந்த கூடைப்பந்து தொடரில் நாடு பூராகவும் இருந்து 12 பாடசாலை அணிகள் பங்குபற்றியிருந்தன.
காலிறுதிப் போட்டியில் புனித மைக்கல் கல்லூரி கூடைப்பந்து அணி அபாரம்
இதில் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணி, காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினை 78-09 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக தோற்கடித்தும் அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியினரை 61-27 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.
மறுமுனையில் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி அணி, காலிறுதியில் கொழும்பு வெஸ்லி கல்லூரி அணியினை 42-33 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தும் அரையிறுதியில் மட்டக்களப்பு புனித ஜோசப் கல்லூரி அணியினை 67-35 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.
மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கில் திங்கட்கிழமை (4) ஆரம்பமாகிய இறுதிப் போட்டியில் இரண்டு இளம் அணிகளும் ஆரம்பம் தொடக்கம் உற்சாகத்துடன் ஆடின.
எனினும் போட்டியின் முதல் கால்பகுதியினை புனித மைக்கல் கல்லூரி அணியின் இளம் வீரர்கள் 12-08 என்ற புள்ளிகள் கணக்கில் தமக்கு சொந்தமாக்கினர்.
பின்னர் தொடர்ந்து முன்னேறிய போட்டியின் இரண்டாம் கால்பகுதியில் புனித மைக்கல் கல்லூரி அணி 11 புள்ளிகளை எடுத்துக் கொண்டது. ஆனால், இந்த கால்பகுதியில் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி அணி 09 புள்ளிகளை மட்டுமே எடுத்தது.
இதன்படி போட்டியின் முதல் அரைப்பகுதி நிறைவுக்கு வரும் போது மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணி 23-17 என்ற புள்ளிகள் கணக்கில் ஆட்டத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகித்தது.
இதன் பின்னர் போட்டியின் மூன்றாம் கால்பகுதியில் புனித மைக்கல் கல்லூரி அணி வீரர்கள் கொஞ்சம் வேகம் இழந்து ஆடினர். அதனால், இந்த கால்பகுதியில் அவர்களுக்கு 09 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. மறுமுனையில், புனித ஜோசப் கல்லூரி அணியும் 09 புள்ளிகள் பெற இறுதிப் போட்டியின் மூன்றாம் கால்பகுதியினை இரண்டு அணிகளும் சமநிலையில் முடித்தன.
போட்டியின் மூன்றாம் கால்பகுதி நிறைவுக்கு வரும் போது 32-26 என சிறிய புள்ளிகள் வித்தியாசத்திலேயே புனித மைக்கல் கல்லூரி முன்னிலை பெற்றிருந்த காரணத்தினால் இறுதிக் கால்பகுதி விறுவிறுப்பான முறையில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும், போட்டியின் இறுதிக் கால்பகுதியில் அதிக உத்வேகத்தோடு ஆடிய மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணியினர் 24 புள்ளிகளை இந்த கால்பகுதியில் எடுத்தனர். எனினும், ஜோசப் கல்லூரி அணி இந்தக் கால்பகுதியிலும் 09 புள்ளிகளை மட்டுமே பெற்று மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணியிடம் 56-35 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியினை தழுவியது.
மூன்றாம் இடத்திற்கான போட்டி
அழைப்பு கூடைப்பந்து தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியினை தழுவிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியும் மட்டக்களப்பு புனித ஜோசப் கல்லூரி அணியும் மோதின.
இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட…
போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டி வந்த யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணி, போட்டியின் நான்கு கால்பகுதிகளையும் முறையே 19-05, 16-09, 11-01, 12-04 எனக் கைப்பற்றி கடைசியில் 58-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 3 ஆவது இடத்தினைப் பெற்ற அணியாக மாறியது.