முற்றிலும் எதிர்பாராத வகையில் பலம் மிக்க இசிபதன கல்லூரி அணியை 19 – 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்ட புனித ஜோசப் கல்லூரி அணி, தனது முதலாவது இறுதி ஆட்ட முயற்சியிலேயே மைலோ ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்து பாடசாலைகள் ரக்பியில் புதிய வரலாறு படைத்துள்ளது.
கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்ற இந்த மோதலில் நடப்பு சம்பியனாக இறுதிப் போட்டியை எதிர்கொண்ட இஸிபதன அணி, எட்டாவது முறையாக சம்பியனாகும் குறிக்கோளுடன் களம் இறங்கியது.
>> இனிதே நிறைவுற்ற இவ்வருடத்திற்கான ஒலிம்பிக் தின நிகழ்வுகள்
மறுபுறத்தில் மைலோ ஜனாதிபதி கிண்ண 25 வருட வரலாற்றில் முதல் தடவையாக இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்ற புனித ஜோசப், என்ன செய்தாவது கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற கங்கணத்துடன் இறுதிப் போட்டியை எதிர்கொண்டது.
அதற்கேற்றாற்போல் முதலாவது நிமிடத்திலேயே பெனால்டி ஒன்றைப் பெற்ற புனித ஜோசப் அடுத்த நிமிடமே சத்துர செனவிரட்ன மூலம் அலாதியான ட்ரை வைத்து முன்னிலை அடைந்தது. சத்துர பந்தை காலால் தட்டி 5 மீற்றர் தூரம் ஆக்ரோஷமாக ஓடி ட்ரை வைத்தார்.
போட்டியின் 6வது நிமிடத்திலிருந்து அடுத்தடுத்து மூன்று தவறுகளை இழைத்த புனித ஜோசப் தொடர்ச்சியாக பெனால்டிகளைக் கொடுத்தது. ஆனால் அவற்றால் இசிபதனவுக்கு பலன் கிட்டவில்லை.
எவ்வாறாயினும் போட்டியின் 17ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற 5 மீற்றர் லைன் அவுட்டைக் கொண்டு டெவின் குணரட்ன பந்துடன் ஓடி புனித ஜோசப் வீரர்கள இருவரின் எதிர்ப்பை முறியடித்து ட்ரை வைத்து புள்ளிகள் நிலையை 5 – 5 என சமனாக்கினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் மாறி மாறி தவறுகளை இழைத்த வண்ணம் இருந்தனர்.
போட்டியின் 30வது நிமிடத்தில் இசிபதன வீரர் சமோத் பெர்னாண்டோ, எதிரணி வீரர் டிலான் கவிந்தவின் கழுத்துப்பகுதியைப் பிடித்து கீழே வீழ்த்தியதால் மத்தியஸ்தர் இர்ஷாத் காதரின் மஞ்சள் அட்டைக்கு இலக்காகி சின் பின்னுக்கு சென்றார்.
31ஆவது நிமிடத்தில் இசிபதனவுக்கு கிடைத்த பெனாடியை அஞ்சன தவறவிட்டார்.
>> ஜனாதிபதிக் கிண்ண இறுதிப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரியுடன் மோதவுள்ள இசிபதன
மேலும் 3 நிமிடங்கள் கழித்து புனித ஜோசப் வீரர் கிஹான் பெரேரா சின் பின்னுக்கு அனுப்பப்பட இரண்டு அணிகளும் தலா 14 வீரர்களுடன் விளையாடின.
போட்டி இடைவேளையை நெருங்கிய போது புனித ஜோசப் அணிக்கு கிடைத்த 52 மீட்டர் தூர பெனால்டியை சத்துர செனவிரட்ன அபாரமாக கோல் கம்பங்களுக்கு இடையே புகுத்தினார்.
முதல் பாதி:புனித ஜோசப் கல்லூரி 08 – 05 இஸிபத்தன கல்லூரி
இடைவேளை முடிந்து போட்டி தொடர்ந்த முதலாவது நிமிடத்திலேயே கிடைக்கப்பெற்ற பெனால்டியை இசிபதன சிறந்த முறையில் பயன்படுத்தத் தவறியது.
இரண்டு நிமிடங்கள் கழித்து புனித ஜோசப் அணிக்கு ட்ரை வைப்பதற்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பும் தவறவிடப்பட்டது. புனித ஜோசப் வீரர் ஒருவர் கோல் கம்பங்களுக்கு இடையில் பந்துடன் நகர்ந்தபோதிலும் பந்தை முன்னோக்கி தவறவிட்டதால் (நொக் ஒன்) ட்ரை வாய்ப்பு அற்றுப்போனது.
47வது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற 22 மீற்றர் தூர பெனால்டியை சமோத் பெர்னாண்டோ இலகுவாக கோல்கம்பங்களுக்குள் புகுத்தி புள்ளிகள் நிலையை 8 – 8 என சமப்படுத்தினார்.
அதன் பின்னர் இரண்டு அணியினரும் கடுமையாக விளையாடி போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தி இரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தினர்.
64வது நிமிடத்தில் தரிந்து டி அல்விஸ் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து எதிரணி வீரர்களை பின்தள்ளியவாறு பந்துடன் நகர்ந்து ட்ரை வைத்து புனித ஜோசப் அணியை மேலும் முன்னிலையடையச் செய்தார்.
சற்று நேரத்தில் இசிபதன வீரர் சமோத் பெர்னாண்டோ வைத்த ட்ரை மத்திஸ்தரினால் மறுக்கப்பட்டது. இசிபதன வீரர் ஒருவர் பந்தை முன்னோக்கி (போர்வர்ட் பாஸ்) பரிமாற்றியதாலேயே ட்ரை மறுக்கப்பட்டது. இது புனித ஜோசப் அணிக்கு நிம்மதியையும் திருப்தியையும் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து இசிபதன வீரர்கள் தொடர்ச்சியாக தவறுகளை இழைக்க 73வது, 76வது நிமிடங்களில் கிடைக்கப்பெற்ற இரண்டு இலகுவான பெனால்டிகளின் மூலம் 6 புள்ளிகளை சத்துர செனவிரட்ன பெற்றுக்கொடுத்தார்.
அதன் பின்னர் புனித ஜோசப் அணியினர் உற்சாகத்துடன் காணப்பட்டதுடன் வெற்றி நிச்சயம் என்ற களிப்பில் மிதந்த வண்ணம் இருந்தனர்.
எனினும் கடைசி நிமிடத்தில் இசிபதன வீரர் எஸ். வீ. கே. சபாநாயக்க ஆறுதல் ட்ரை ஒன்றை வைத்தார். ஆனால் அதற்கான கொன்வேர்ஷன் பூர்த்தி செய்யப்படுவதற்குள் போட்டியும் நிறைவுக்கு வர புனித ஜோசப் வீரர்கள் மாத்திரமன்றி பழைய மாணவர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உட்பட இரசிகர்கள் அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர்.
புனித ஜோசப் 2 ட்ரைகள், 3 பெனால்டிகள் மூலமும் இசிபதன 2 ட்ரைகள், 1 பெனால்டி மூலமும் புள்ளிகளைப் பெற்றன.
ஆட்ட நாயகன் விருது – சத்துர செனவிரட்ன (புனித ஜோசப் கல்லூரி)
உணர்ச்சிபூர்வமாக விளையாடியமைக்கான மைலோ க்றீன் கார்ட் விருது – தரிந்து டி சில்வா
போட்யின் பின்னர் மைலோ ஜனாதிபதி கிண்ணத்தை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடமிருந்து புனித ஜோசப் கல்லூரி அணித் தலைவர் வினுல் பெர்னாண்டோ பெற்றுக்கொண்டார்.