பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையிலான 15 வயதிற்குக் கீழ்ப்பட்ட அகில இலங்கை ரீதியிலான சமபோஷா கிண்ணத்திற்கான சுற்றின், முதல் கட்டப் போட்டிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. முதல்கட்டப் போட்டிகளில் வெற்றி பெறும் பாடசாலை அணிகள் அகில இலங்கை ரீதியிலான போட்டிகளுக்கு தெரிவாsகும்.
இதில், மாவனல்லை வலயத்திற்கான போட்டிகளில் மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் 15 வயதிற்கு உட்பட்ட அணி வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவாகியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டிகள் லீக் அடிப்படையில் இடம்பெற்றன. இதில், பதுரியா மத்திய கல்லூரி, தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி கொண்டது.
இதன் மூலம் மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பெற்றது. தொடரில் பதுரியா மத்திய கல்லூரி அணி மொத்தமாக 13 கோல்களைப் பெற்றுக்கொண்டதுடன், இவ்வணிக்கு எதிராக எந்த ஒரு எதிரணியும் ஒரு கொலையேனும் பெறவில்லை என்பது முக்கிய விடயமாகும்.
இத்தொடரின் அடுத்த கட்டமாக மாவனல்லையில் சம்பியனாகத் தெரிவாகிய பதுரியா மத்திய கல்லுரி அணி, கேகாலை என்.எம் பெரேரா கல்லூரி அணியுடன் மோதவுள்ளது.
மாவனல்லை வலயத்திற்கான 17 வயதின் கீழ்ப்பட்டோருக்கான போட்டியிலும் பதுரியா மத்திய கல்லூரி அணி சம்பியனாகியது. இந்த அணியும் தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பதுரியா மத்திய கல்லூரி அணியினர்
ஏனைய இடங்களில் நடைபெற்ற போட்டி விபரங்கள்:
யாழ்ப்பாணம்
தாம்தான் வட மாகாணத்தின் கால்பந்து ஜாம்பவான் என மீண்டுமொருமுறை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி நிரூபித்தது. யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை வெற்றி கொண்டதன் மூலம் யாழ் மாவட்ட சம்பியனாக புனித ஹென்றியரசர் கல்லூரி அணி தெரிவாகியது.
மேலும் பெண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி அணி சம்பியனாகத் தெரிவாகி, இறுதிச்சுற்றுத் தொடரிற்கு முன்னேறியுள்ளது.
அநுராதபுரம்
அநுராதபுரத்தில் நடந்த போட்டிகளில் அநுராதபுரம் புனித ஜோசப் கல்லூரி அணி அரையிறுதிப் போட்டியில் தேவநம்பிய திஸ்ஸ மகா வித்தியாலயத்தை 4-0 எனவும், இறுதிப் போட்டியில் குடா நெலும் வெவ கெமுனு மகா வித்தியாலயத்தை 2-0 எனவும் வீழ்த்தி சம்பியனாகத் தெரிவாகியது. இதன்மூலம் அவ்வணி இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அநுராதபுரத்தில் பெண்கள் பிரிவில் யக்கலை மெகொடவெவ மகா வித்தியாலயம் சம்பியாகி இறுதி சுற்றுப் போட்டிக்குத் தெரிவாகியது.
புனித ஜோசப் கல்லூரி அணியினர்
கம்பஹா
கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற போட்டித்தொடரில் மினுவாங்கொடை நாலந்த கல்லூரியை வீழ்த்தி, உடுகம்பொல புனித பேதுரு கல்லூரி வெற்றி பெற்றது. இரு அணிகளும் பெனால்டி உதைகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் பிரிவில் ரன்பொகுணுகம மகா வித்தியாலயம் சித்தார்த்த கல்லூரியை வீழ்த்தி சம்பியாகி, இறுதிச்சுற்றுப் போட்டிக்குள் நுழைந்தது.
வத்தளை/ களனி
இலங்கை கால்பந்தாட்ட அரங்கில் பிரசித்தி பெற்ற டி மெசனொட் கல்லூரி, தூடேல்ல கிறிஸ்தவ அரசர் கல்லூரியை இலகுவாக வீழ்த்தி வத்தளை/களனிக்கான சம்பியனாகியது.
இப்பகுதிக்கான பெண்கள் தரப்பில் விகாரமகாதேவி பெண்கள் வித்தியாலயம் போட்டியின்றி இறுதிச் சுற்றுப் போட்டிக்குள் நுழைந்தது.
மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு