இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான டிவிஷன் 1 பாடசாலைகள் கால்பந்து சம்பின்ஷிப் போட்டியின் முதல் போட்டியில், நடப்பு சம்பியன் புனித ஜோசப் கல்லூரி அணி கோல் மழை பொழிந்து புனித பெனடிக்ட் கல்லூரி அணியை இலகுவாக வீழ்த்தியது.
சுகததாச அரங்கில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற போட்டியில் புனித ஜோசப் கல்லூரி 6-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த முதலாவது போட்டி அருட்தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த கிண்ணமாகவும் இடம்பெற்றதால் புனித ஜோசப் கல்லூரி அந்த கிண்ணத்தை சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி ஆரம்பமான விரைவிலேயே நடப்பு சம்பியன் புனித ஜோசப் கல்லூரி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 4ஆவது நிமிடத்தில் புனித ஜோசப் கல்லூரி வீரர் அசேல மதுசங்க எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமித்தபோதும் புனித பெனடிக்ட் பின்கள வீரர்கள் அரணாக செயற்பட்டு கோல் போடுவதை தடுத்தனர்.
எனினும் அடுத்த நிமிடமே செயற்பட்ட பிரதன்த புனித பெனடிக்ட் கல்லூரி வீரர்களை முறியடித்து புனித ஜோசப் கல்லூரிக்காக முதலாவது கோலை பதிவு செய்தார். எதிரணியின் தற்காப்பு அரணில் இருந்து பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில் அவரால் இலகுவாக அந்த கோலை போட முடிந்தது.
போட்டியின் எட்டாவது நிமிடத்தில் அணித் தலைவர் ஜேசன் பெர்னாண்டோ கொண்டுவந்த பந்தை சமத் ரஷ்மித்திடம் வழங்கியபோது அவர் புனித ஜோசப் கல்லூரிக்காக அதனை கோலாக மாற்றினார். இதனால் முதல் 10 நிமிடங்களுக்குள்ளேயே புனித ஜோசப் கல்லூரி 2-0 என்ற கோல்களால் முன்னிலை பெறமுடிந்தது.
சொந்த மண்ணில் கிறிஸ்டல் பெலஸ் அணியிடம் வீழ்ந்த ஜாவா லேன்
சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த FA கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய…
குறிப்பாக 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை தேசிய அணி வீரரான அசேல மதுசான் புனித பெனடிக்ட் கோல் எல்லையை தொடர்ச்சியான இடைவெளிகளில் ஆக்கிரமித்தபோதும் எதிரணியிடம் இருந்து தற்காப்பு ஆட்டத்தை காண முடியாமல் இருந்தது. மதுசானுக்கு சுதந்திரமாக பந்தை எடுத்துச் செல்ல புனித பெனடிக்ட் கல்லூரி அணியினர் வழிவகுத்தனர்.
புனித ஜோசப் கல்லூரி ஆதிக்கம் செலுத்த போட்டியின் முதல் பாதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் அந்த அணியால் முன்னிலை பெறமுடிந்தது.
முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 2 – 0 புனித பெனடிக்ட் கல்லூரி
போட்டியின் இரண்டாவது பாதியின் முதல் இரு நிமிடங்களுக்குள் புனித பெனடிக்ட் கல்லூரி கோல் பெறும் பொன்னான வாய்ப்பொன்றை தவறவிட்டது.
எனினும் அசேல மதுசானின் ஆக்கிரமிப்பு ஆட்டம் தொடர்ந்தது. 47ஆவது நிமிடத்தில் மதுசான் வேகமாக அடித்த பந்தை புனித பெனடிக்ட் கல்லூரி கோல் காப்பாளர் திறமையான முறையில் தட்டிவிட்டார். இதன்போது நடுவர் ஓப்சைட் சைகை காண்பித்தார்.
இரண்டு நிமிடங்கள் கழித்து மதுசான் எதிரணியின் பின்கள வீரர்களை முறியடித்து பந்தை கோல் எல்லை வரை நெருங்கி இலகுவாக கோல் ஒன்றை புனித ஜோசப் கல்லூரிக்குப் பெற்றுத்தந்தார். தொடர்ந்து 53, 58ஆவது நிமிடங்களில் மதுசானின் கோல் பெறும் வாய்ப்புகள் மயிரிழையில் தவறின.
இந்நிலையில் இரண்டாவது பாதியின் நடுப்பகுயில் புனித பெனடிக்ட் கல்லூரி நடப்பு சம்பயனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. 60ஆவது நிமிடத்தில் அந்த கல்லூரி வீரர் பெனால்டி எல்லைக்கு அப்பால் இருந்து உதைத்த பந்து புனித ஜோசப் கல்லூரி கோல் காப்பாளரால் தடுக்க முடியாமல் கோலுக்குள் சென்றது.
தொடர்ந்து 63ஆவது நிமிடத்தில் புனித பெனடிக்ட் கல்லூரி மற்றொரு கோலை பெற அந்த அணிக்கு 3-2 என புனித ஜோசப் கல்லூரியை நெருங்க முடிந்தது.
எவ்வாறாயினும் புனித ஜோசப் கல்லூரி போட்டியின் கடைசி நிமிடங்களில் தனது ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிக்காட்டியது. 73ஆவது நிமிடத்தில் அந்த அணிக்காக பிரவன்த கோல் ஒன்றை போட்டார். பின்னர் மூன்று நிமிடங்கள் கழித்து மதுசான் எதிரணி பின்கள வீரர்களின் பலவீனத்தை பயன்படுத்தி கோல் ஒன்றைப் போட்டார். மேலதிக நேரத்தில் வைத்து அசேல மதுசான் மற்றொரு கோலை அடித்து புனித ஜோசப் கல்லூரியின் வெற்றியை உறுதி செய்தார்.
முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 6 – 2 புனித பெனடிக்ட் கல்லூரி