டினோஷன், அபிஷேக்கின் சிறப்பாட்டத்தால் சென். ஜோன்ஸ் இலகு வெற்றி

416
St. John's College Jaffna vs Karandeniya Central College

இலங்கையின் 19  வயதுக்குட்பட்ட  பிரிவு II (டிவிஷன் – II) பாடசாலைகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் ஒருநாள் தொடரின் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, கரன்தெனிய மத்திய கல்லூரி அணிக்கு எதிராக 246 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு இலகு வெற்றி

இன்று (7) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவர் தெய்வேந்திரம் டினோஷன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக பெற்றுக் கொண்டார்.

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் தொடக்கத்தில் தடுமாற்றம் ஒன்றினைக் காட்டிய போதும் அணித்தலைவர் டினோஷனின் அபார சத உதவியோடு 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 351 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர்.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் வெறும் 118 பந்துகளுக்கு 12 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 13 பெளண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 186 ஓட்டங்களை் டினோஷன் பெற்றுக் கொண்டார். அதேநேரம் சபேஷனும் 44 ஓட்டங்களை தனது தரப்பிற்காக பெற்றுக் கொடுத்திருந்தார்.

>> இலங்கை தேசிய அணியுடன் மோதும் லெஜண்ட்ஸ் அணி ;  திகதி அறிவிப்பு

இதேநேரம், கரன்தெனிய மத்திய கல்லூரியின் பந்துவீச்சு சார்பில் லக்ஷான் 3 விக்கெட்டுக்களையும், சமித் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 352 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கரன்தெனிய மத்திய கல்லூரி அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் படுதோல்வியினை தழுவியது.

கரன்தெனிய மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் நந்திக யசோத் 53 ஓட்டங்களைப் பெற்றதே வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களாக மாறியது. வேறு எந்தவொரு வீரரும் 10 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை. 

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் இளம் வீரர் அன்டன் அபிஷேக் வெறும் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க சங்கீர்தனன் மற்றும் அன்டண் சரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

>> ஹட்ரிக் சம்பியன் பட்டம் வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

இதேநேரம், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இந்தப் பருவகாலத்திற்கான பிரிவு-II பாடசாலை கிரிக்கெட் தொடரில் 3 வெற்றிகளையும்  தோல்விகளையும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது..

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி – 351/7 (50) தெய்வேந்திரம் டினோஷன் 186*, சபேஷன் 44, லக்ஷான் 49/3, சமித் 32/2

கரன்தெனிய மத்திய கல்லூரி – 105 (32.2) நந்திக யசோத் 53, அன்டன் அபிஷேக் 5/30, சங்கீர்தனன் 9/2, அண்டன் சரண் 27/2

முடிவு – சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 246 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<