இலங்கை பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கொத்மலே கிண்ண தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணியை 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் தோற்கடித்து புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி வெற்றி கொண்டுள்ளது.
இந்தப் போட்டி யாழ்ப்பாணம் துறையப்பா மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெற்றது. ஆரம்பத்தில் சற்று தடுமாறிய போதிலும் ஹென்ரியரசர் கல்லூரி அணியின் S. ரூபன்ராஜ் பெற்றுக்கொடுத்த கோலின் மூலம் முதல் பாதியில் அவ்வணி 1-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் 2ஆவது பாதியில் 54ஆம் மற்றும் 79ஆம் நிமிடங்களில் முறையே ஞானேஸ்வரன் அண்டனிராஜ் மற்றும் அன்டனி ரமேஷ் பெற்றுக் கொடுத்த கோல்களுடன் அவ்வணி தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது.
கடந்த வருடம் சுற்றுப்போட்டியின் சம்பியனாக முடிசூடிக்கொண்ட புனித ஹென்ரியரசர் கல்லூரி, இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணியுடனான அரையிறுதிப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.