இந்த வாரத்தில் 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையிலான கொத்மலே கிண்ணத்திற்கான இறுதிக் கட்டப் போட்டிகளும், 15 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான சமபோஷ கிண்ணத்திற்கான தேசிய மட்டப் போட்டிகளும் என இரண்டு முக்கிய சுற்றுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதில், கொத்மலே கிண்ணத்திற்கான போட்டிகள் எதிர்வரும் 3ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும், 15 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான சமபோஷ கிண்ண தேசிய மட்டப் போட்டிகள் எதிர்வரும் 4ஆம், 5ஆம், 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் வென்னப்புவயிலும் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், இவ்வாறு ஒரே நேரத்தில் இந்த இரு போட்டிகளும் இடம்பெறுகின்றமை தமக்கு பாரிய பாதிப்பாக இருப்பதாக இலங்கையின் பிரபல கால்பந்து அணிகளைக் கொண்ட யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி கூறி, இது தொடர்பிலான தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற சமபோஷ கிண்ணத்திற்கான யாழ் மாவட்ட இறுதிப் போட்டியில் ஹென்ரியரசர் கல்லூரியின் 15 வயதின் கீழ்ப்பட்ட கால்பந்து அணி, யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி அணியை வெற்றிகொண்டு தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியது.
அதேபோன்று, செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கொத்மலே கிண்ணத்திற்கான காலிறுதிப் போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை வீழ்த்திய ஹென்ரியரசர் கல்லூரியின் 19 வயதின் கீழ்ப்பட்ட அணி அரையிறுதிக்குத் தெரிவாகியது.
பின்னர், கொத்மலே கிண்ண அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறுவது தொடர்பான இறுதி அறிவிப்பு ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. எனினும், சமபோஷ கிண்ண தேசிய மட்டப் போட்டிகள் இடம்பெறும் தினம் குறித்த தகவல் ஒக்டோபர் மாத இறுதியிலேயே வெளியிடப்பட்டது.
கொத்மலே சம்பியன்சிப் கால்பந்து சுற்றின் இறுதிக் கட்டப் போட்டிகள் யாழில்
மேலும், சமபோஷ தேசிய மட்டப் போட்டிகளுக்காக இம்மாதம் 3ஆம் திகதியே வென்னப்புவயில் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கும் ஹென்ரியரசர் கல்லூரி உள்ளாகியுள்ளது. எனவே, இரு போட்டிகளும் ஒரே சமயத்தில் இடம்பெறுகின்றமை தமக்கு மிகப் பெரிய பாதிப்பாகவும், இது ஒரு அநீதியான செயல் என்றும் ஹென்ரியரசர் கல்லூரி குற்றம் சுமத்துகின்றது.
இது குறித்து ஹென்ரியரசர் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் டனிஸ்டன் விஜயகுமார் thepapare.com இடம் கருத்து தெரிவிக்கையில், ”எமக்கு ஏற்கனவே, கொத்மலே கிண்ணத்திற்கான அறிவிப்பு வந்திருந்தது. எனினும் கடந்த மாத இறுதியிலேயே (ஒக்டோபர்) சமபோஷ கிண்ண தேசிய மட்ட போட்டிகள் குறித்த அறிவிப்பை நாம் பெற்றோம்.
ஒரே சமயத்தில் இரு பொட்டிகளிலும் கலந்துகொள்வது அணியின் பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை நிருவாகம், மற்றும் அணியின் ஆதரவாளர்களுக்கு முடியாத ஒரு விடயம். இது எமக்கு செய்யப்பட்டுள்ள ஒரு அநீதியான செயல்.
குறிப்பாக, கொத்மலே கிண்ண போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றமையானது, எமது 15 வயதின் கீழ்பட்ட அணி வீரர்களுக்கு அதனைப் பார்வையிட்டு, அதன்மூலம் அனுபவத்தைப் பெறுவதற்கு சிறந்த வாய்ப்பாக இருந்தது. எனினும் தற்பொழுது அந்த சந்தர்ப்பம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதற்கு எதிரான நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ”சமபோஷ கிண்ணத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், அது குறித்து அறிந்துகொண்டே இந்த போட்டியையும் குறித்த தினங்களில் ஒழுங்கு செய்துள்ளனர்.
எனினும் இது தொடர்பில் அறியக்கிடைத்ததும் நாம் யாழ் மாவட்ட கால்பந்து ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு எமது நிலைப்பாட்டை தெரிவித்தோம். எனினும் தானும் உரிய தரப்பினரிடம் கதைத்தும், எந்தவித மாற்றமும் செய்ய முடியாது என்று தெரிவித்ததாக அவரும் கூறினார்.
எனினும் ஒக்டோபர் 31ஆம் திகதி எழுத்து மூலமான கடிதம் எமக்கு கிடைத்ததும் நாம் அதற்கான பதில் கடிதத்தை உரிய தரப்பினருக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.
இது குறித்து thepapare.com யாழ் மாவட்ட கால்பந்து ஒருங்கிணைப்பாளரிடம் வினவியபோது, ”உண்மையிலேயே இது ஹென்ரியரசர் கல்லூரிக்கு ஒரு பாதிப்பாக இருக்கின்றது. ஏற்கனவே ஒரு போட்டி இடம்பெறுவது தெரிந்த நிலையிலேயே இதனையும் குறித்த காலப்பகுதியில் ஏற்பாடு செய்துள்ளனர்.
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்திடம் நாம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்த பொழுதும் அவர்கள் போட்டி இடம்பெறும் தினத்தை மாற்ற முடியாது என்று தெரிவித்தனர்” எனத் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் இந்த செயற்பாட்டினால் ஹென்ரியரசர் கல்லூரியின் 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இரு அணிகளையும் வழிநடாத்தும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள் ஒரு குழப்ப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் யாழ் கால்பந்து வரலாற்றில் நிகழும் ஒரு முக்கிய நிகழ்வாகவே கொத்மலே கிண்ண இறுதிக் கட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. எனவே, அதனை நேரில் பார்வையிடும் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு ஹென்ரியரசர் கல்லூரியின் இளம் வீரர்கள் முகம்கொடுத்துள்ளனர்.
எனவே, இந்த விடயம் குறித்து இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தின் செயலாளர் நாலக திஸ்ஸாநாயக்கவிடம் வினவினோம். அவர் thepapare.com இடம் கருத்து தெரிவிக்கும்பொழுது,
”சமபோஷ கிண்ண தேசிய மட்ட போட்டிகளை குறித்த திகதிகளில் நடாத்துவதில் நாம் உறுதியாக உள்ளோம். கொத்மலே கிண்ண போட்டிகளை நடாத்தும் இலங்கை கால்பந்து சம்மேளனம், போட்டித் திகதிகளை ஒழுங்கு செய்யும்போது எம்முடன் தொடர்புகொள்ளவில்லை.
அதேபோன்று, இந்தப் போட்டிகள் இருவேறு வயதெல்லையைக் கொண்ட பிரிவினருக்கான போட்டிகள் என்பதனால் எந்த வீரர்களும் இதனால் பாதிப்படைவதில்லை” என்றார்.
ஏனைய எந்த ஒரு பாடசாலையின் இரு அணிகளும் இந்த இரு போட்டிகளுக்கும் தெரிவாகாத நிலையில் ஹென்ரியரசர் கல்லூரி அணிகளின் இந்த தெரிவு, தாம் தேசிய ரீதியில் அனைத்து பிரிவிலும் திறமையான கால்பந்து அணிகளை வைத்துள்ள கல்லூரி என்பதை நிரூபித்துள்ளது.
எனினும், அவ்வாறான ஒரு திறமையான கல்லூரிக்கு தேசிய ரீதியிலான முக்கிய இரு சுற்றுகள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றமை பாதிப்பாக அமையும் என்ற வாதத்தில் நியாயம் இருக்கலாம்.
எனவே, பாடசாலை கால்பந்து போட்டிகளை ஏற்பாடு செய்யும் இரு வெவ்வேறு தரப்பினர் உரிய முறையில் தொடர்பாடல்களை மேற்கொள்ளாமையினால் ஏற்படும் இவ்வாறான பாதிப்புக்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பது அனைத்து தரப்பினருக்கும் சிறந்தது.
இரு தரப்பினருக்கு இடையில் உரிய முறையில் தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்படாமையினால் அண்மைக் காலங்களில்கூட இலங்கையின் முக்கிய கால்பந்து சுற்றுப்போட்டிகளில் குழப்ப நிலை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.