பலமிக்க அணிகளை கொண்டிருந்த போதிலும் இரண்டு போட்டிகளில் தோல்விகளை தழுவியிருந்த புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றியீட்டும் எதிர்பார்ப்புடன் இரு தரப்பும் பிரவேசித்திருந்தன.
அவிஷ்கவின் இறுதி பெனால்டியின் மூலம் ஸாஹிராவை வீழ்த்திய வெஸ்லி கல்லூரி
ஸாஹிரா கல்லூரியுடன் நடைபெற்ற ரக்பி போட்டியில், அவிஷ்க லீவின் இறுதி நேர பெனால்டியின் …
போட்டியின் 65ஆவது நிமிடம் வரை சரிசமமாக இரண்டு அணிகளும் திறமையை வெளிப்படுத்தியிருந்த போதிலும், இறுதி நேர அதிரடியின் காரணமாக புனித ஜோசப் கல்லூரி 24-11 என வெற்றியை சுவீகரித்தது.
கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியை புனித அந்தோனியார் கல்லூரியின் ஜெஹான் சீலகம ஆரம்பித்து வைத்தார். முதல் 20 நிமிடங்களில் புனித அந்தோனியார் கல்லூரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இரண்டு அணிகளினாலும் புள்ளிகளைப் பெற இயலவில்லை.
எனினும் போட்டியின் முதல் புள்ளிகளை 20ஆவது நிமிடத்தில் புனித அந்தோனியார் கல்லூரியின் சேமுவல் மதுவந்த தனது பெனால்டி உதையின் மூலம் பெற்றுக் கொடுத்தார். (புனித ஜோசப் கல்லூரி 00 – 03 புனித அந்தோனியார் கல்லூரி)
சில நிமிடங்களின் பின்னர், தொடர்ந்து வெளிக்காட்டி வந்த சிறப்பாட்டத்தின் பலனாக புனித அந்தோனியார் கல்லூரியின் தலைவரும் சென்டர் நிலை வீரருமான தினுக் அமரசிங்க ட்ரை ஒன்றினை வைத்தார். இலகுவான கன்வெர்ஷன் உதையினை சேமுவல் மதுவந்த தவறவிட்டார். (புனித ஜோசப் கல்லூரி 00 – 08 புனித அந்தோனியார் கல்லூரி)
முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் புனித ஜோசப் கல்லூரி எதிரணியின் பாதிக்குள் தொடர்ந்து அழுத்தத்தை வழங்கியது. முன்கள வீரர்கள் ட்ரை கோட்டினை நோக்கி முன்னேறி, பந்தினை விங் நிலை வீரரான சச்சித் சில்வாவிற்கு கடத்த, அவர் இடது பக்க மூலையில் ட்ரை வைத்து புள்ளி வித்தியாசத்தினை குறைத்தார். கடினமான உதையை சதுர செனவிரத்ன தவறவிட்டார். (புனித ஜோசப் கல்லூரி 05 – 08 புனித அந்தோனியார் கல்லூரி)
முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 05 – 08 புனித அந்தோனியார் கல்லூரி
முதல் பாதியை போன்றே இரண்டாம் பாதியிலும் முதல் புள்ளிகளை புனித அந்தோனியார் கல்லூரி பெற்றுக் கொண்டது. 49m தூரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை கம்பத்தை நோக்கி உதைக்க அவ்வணி முடிவு செய்ததுடன், கடினமான உதையினை சேமுவல் மதுவந்த லாவகமாக உதைத்து மூன்று புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். (புனித ஜோசப் கல்லூரி 05 – 11 புனித அந்தோனியார் கல்லூரி)
பின்னர் 65ஆவது நிமிடம் வரை இரண்டு அணிகளும் சரிசமமாக மோதிக் கொண்டதுடன், புனித அந்தோனியார் கல்லூரி தொடர்ந்து முன்னிலை பெற்றிருந்தது. எனினும் இறுதி 15 நிமிடங்களில் அதிரடியான தாக்குதல் ஆட்டத்தினை வெளிக்காட்டிய புனித ஜோசப் கல்லூரி வீரர்கள், எதிரணியின் தடுப்பினை மீறி ட்ரை ஒன்றினை வைத்தனர். முன்வரிசை வீரர் ஷெஹான் எரங்க ட்ரையினை வைத்ததுடன், கன்வெர்ஷன் உதையை சச்சித் சில்வா வெற்றிகரமாக உதைத்தார். (புனித ஜோசப் கல்லூரி 12 – 11 புனித அந்தோனியார் கல்லூரி)
தமது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ஜோசப் கல்லூரியின் தலைவர் வினுல் பெர்னாண்டோ அபாரமான ஓட்டத்தின் மூலம் எதிரணியின் பல தடுப்பு வீரர்களை கடந்து முன்னேறி பந்தினை சச்சித் சில்வாவிற்கு கடத்த, அவர் தனது இரண்டாவது ட்ரையினை பெற்றுக் கொண்டார். கம்பங்களுக்கு அருகில் கிடைத்த இலகுவான உதையை சதுர செனவிரத்ன புள்ளிகளாக மாற்றினார். (புனித ஜோசப் கல்லூரி 19 – 11 புனித அந்தோனியார் கல்லூரி)
>> கேனோன் ஆர்.எஸ் டி சேரம் கிண்ணத்தை மீண்டும் சொந்தமாக்கிய திரித்துவக் கல்லூரி
எதிரணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியான நிலையில் புனித அந்தோனியார் கல்லூரி மந்தமான போக்கினை வெளிக்காட்ட, இவ்வாய்ப்பினை பயன்படுத்திய புனித ஜோசப் கல்லூரி சதுர செனவிரத்ன ஊடாக மற்றுமொரு ட்ரை வைத்து போனஸ் புள்ளியை பெற்றுக் கொண்டது. அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்தது. (புனித ஜோசப் கல்லூரி 24 – 11 புனித அந்தோனியார் கல்லூரி)
முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 24 – 11 புனித அந்தோனியார் கல்லூரி
ThePapare.com இன் ஆட்டநாயகன் – சதுர செனவிரத்ன (புனித ஜோசப் கல்லூரி)
புள்ளிகளைப் பெற்றோர்
புனித ஜோசப் கல்லூரி – 24
சச்சித் சில்வா (2T 1C)
சதுர செனவிரத்ன (1T 1C)
ஷெஹான் எரங்க (1T)புனித அந்தோனியார் கல்லூரி – 11
தினுக் அமரசிங்க (1T)
சேமுவல் மதுவந்த (2P)