இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றது என்றால் அங்கே விறுவிறுப்பிற்கும், சுவாரஷ்யங்களிற்கும் எந்தவித பஞ்சமும் காணப்படாது.
அந்த வகையில், இந்த இரண்டு ஆசிய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்குமிடையில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளும் கொண்ட தொடர், கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின்னர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகின்றது.
விருந்தாளியாக இலங்கைக்கு வந்துள்ள இந்தியா, தமது சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடாத்தவுள்ளது.
சகல துறையிலும் சிறப்பித்த இந்திய அணி : பயிற்சிப் போட்டி சமநிலையில் நிறைவு
சகல துறையிலும் சிறப்பித்த இந்திய அணி : பயிற்சிப் போட்டி சமநிலையில் நிறைவு
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மற்றும் இலங்கை…
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியினை கடந்த காலங்களில் இலங்கை அணியானது தமது சொந்த மண்ணில் வைத்து நெருக்கடிக்கு உள்ளாக்கி பல நினைவுகூறத்தக்க டெஸ்ட் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
அவ்வாறான வெற்றிகளை எமது இணையதள இரசிகர்கள் அறிந்துகொள்ள வரலாற்றினை நாம் ஒரு தடவை புரட்டிப் பார்க்கவுள்ளோம்.
இலங்கை எதிர் இந்தியா (இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்பு – செப்டம்பர் 6-11, 1985)
போட்டி முடிவு – இலங்கை அணி 149 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை அணிக்குகு 1982 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றிருந்த போதும், அப்போதைய சவால்மிக்க அணிகளினை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியினை சுவைப்பது என்பது இலங்கை வீரர்களுக்கு குதிரை கொம்பாக காணப்பட்டிருந்தது.
இவ்வாறனதொரு நிலையிலேயே, இந்திய அணி இலங்கைக்கான தமது சுற்றுப்பயணம் மூலம் முதல் தடவையாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் தமது துணைக்கண்ட அணியுடன் விளையாட விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது.
தொடரின் முதல் போட்டி, சமநிலையில் நிறைவுற கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் தொடங்கியிருந்த இரண்டாவது போட்டியில் துலீப் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி, நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அமல் சில்வா பெற்ற சதத்துடன் இலங்கை அணி வலுவான நிலை ஒன்றினை அடைந்து கொண்டது. (இலங்கை – 385/10 – 156.3 ஓவர்கள்) பதிலுக்கு ஆடிய இந்தியா சவால் தரும் விதமாகவே தமது முதல் இன்னிங்சினை முடித்திருந்தது (இந்தியா 244/10 – 95.1 ஓவர்கள்). இரண்டாவது, இன்னிங்சில், மீண்டும் சிறப்பு துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை அணி 348 ஓட்டங்களினை இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
கடின வெற்றி இலக்கினை பெறுவதற்கு பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சினை தொடங்கியிருந்த இந்திய அணிக்கு, இலங்கையின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான ருமேஷ் ரத்னாயக்க நெருக்கடி தர முடிவில், 198 ஓட்டங்களுடன் இந்திய அணி சுருண்டு கொண்டது.
இதன் மூலம் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணியானது வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்து கொண்டது. அதோடு, தொடரின் மூன்றாவது போட்டி சமநிலை அடைய 1-0 என தொடரினைக் கைப்பற்றிய இலங்கை அணி, அதன் மூலம் வரலாற்றில் முதற்தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றினையும் கைப்பற்றியிருந்தது.
இலங்கை எதிர் இந்தியா (முதலாவது டெஸ்ட் போட்டி, காலி – ஒகஸ்ட் 14-17, 2001)
போட்டி முடிவு – இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி
இந்திய அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி பெற்ற தமது முதல் வெற்றியினைத் தொடர்ந்து, பல டெஸ்ட் போட்டிகளில் அவ்வணியுடன் மோதியிருந்த போதிலும் ஒன்றிலும் கூட மீண்டும் வெற்றி பெற்றிருக்கவில்லை.
இலங்கை அணிக்கு மிகவும் தேவையாகக் காணப்பட்டிருந்த இந்த டெஸ்ட் வெற்றியினை காலியில் ஆரம்பமாகியிருந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம், அப்போதைய இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய பெற்றுத்தந்தார்.
முதலில் துடுப்பாடியிருந்த இந்திய அணி, தில்ஹார பெர்னாந்துவின் வேகத்திற்கு இரையாகி முதல் இன்னிங்ஸில் 187 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் சந்திமால்
ஜூலை 26ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய அணிக்கெதிரான முதலாவது …
பதிலுக்கு தமது முதல் இன்னிங்சில் ஆடியிருந்த இலங்கை அணியானது, குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட கன்னி சதம் மற்றும் அணித் தலைவர் சனத்தின் அபார சதம் என்பவற்றின் உதவியுடனும் வலுவான நிலையொன்றினை அடைந்து தமது முதல் இன்னிங்சினை முடித்துக்கொண்டது. (இலங்கை 362/10 – 107.5 ஓவர்கள்)
மீண்டும், தமது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய இந்திய அணியினை இம்முறை தனது மாயசுழலினால், முத்தையா முரளிதரன் கட்டுக்குள் கொண்டுவர (இந்தியா 180/10 – 74.5 ஓவர்கள்) வெற்றி இலக்காக இலங்கை அணியிக்கு வெறும் 6 ஓட்டங்கள் மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டது.
இலகு வெற்றி இலக்கினை போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே பெற்றுக்கொண்ட இலங்கை அணியினர் 10 விக்கெட்டுக்களால் இந்திய அணிக்கெதிரான தமது அபார வெற்றியினை பதிவு செய்து கொண்டனர்.
இலங்கை எதிர் இந்தியா (மூன்றாவது டெஸ்ட் போட்டி, கொழும்பு – ஓகஸ்ட் 29-செப்டெம்பர் 2, 2001)
போட்டி முடிவு – இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 77 ஓட்டங்களால் வெற்றி
மூன்று போட்டிகள் கொண்ட, தொடரின் முதல் போட்டியினை இலங்கை அணி வெற்றிகொண்டதற்கு பகரமாக இந்திய அணி இரண்டாவது போட்டியினை தமதாக்கி தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியிருந்தது.
இவ்வாறானதொரு தருணத்தில், தொடரின் வெற்றியாளர் யார் எனத் தீர்மானிக்கப்போகும் இறுதிப் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் தொடங்கியிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் செளரவ் கங்குலி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
ஆரம்பம் முதலே இந்திய அணியினருக்கு தனது அபார சுழல் மூலம் நெருக்கடி தந்த முத்தையா முரளிதரன் வெறும் 87 ஓட்டங்களிற்கு சாய்த்த 8 விக்கெட்டுக்களின் காரணமாக, இந்திய அணியானது முதல் இன்னிங்சில் 234 ஓட்டங்களிற்குள் மடக்கப்பட்டிருந்தது.
போட்டியின் முதல் இன்னிங்சிற்காக, துடுப்பாடியிருந்த இலங்கை தமது துடுப்பாட்ட வீரர்களான மஹேல ஜயவர்தன, மார்வன் அத்தபத்து, ஹஸான் திலகரத்ன மற்றும் திலான் சமரவீர ஆகியோர் பெற்றுக்கொண்ட சதங்களின் உதவியுடன் அப்போதைய காலத்தில், டெஸ்ட் போட்டிகளில் தாம் ஒரு இன்னிங்சுக்காக பெற்ற இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையினை ( இலங்கை 610 – 171 ஓவர்கள்) பதிவு செய்து கொண்டது.
175 பந்துகளிற்கு 103 ஓட்டங்களினை பெற்றிருந்த திலான் சமரவீர தான் விளையாடிய கன்னி டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த மூன்றாவது இலங்கையராக சாதனை ஒன்றினையும் இப்போட்டியில் நிலைநாட்டியிருந்தார்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சில் இலங்கை அணி முன்னிலை பெற்றிருந்த 376 ஓட்டங்களினை தாண்டுவதற்காக இந்திய அணி, நல்லதொரு ஆரம்பத்தினை காட்டியிருந்தது. எனினும், மீண்டும் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்திய முரளிதரன் காரணமாக, இந்தியாவிற்கு இலங்கை அணியுடன் முதல்தடவையாக வரலாற்றில் டெஸ்ட் போட்டியொன்றில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவ வேண்டி ஏற்பட்டது. (இந்தியா 299/10 – 124.5 ஓவர்கள்)
இதனால், மீண்டும் ஒரு தடவை இலங்கை அணியானது இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் ஒன்றினை (2-1 என) கைப்பற்றியிருந்தது.
இந்தப் போட்டியில், மொத்தமாக 11 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த முரளி போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை எதிர் இந்தியா (முதலாவது டெஸ்ட் போட்டி, கொழும்பு, ஜூலை 23-26, 2008)
போட்டி முடிவு – இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 249 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை அணிக்கு மீண்டும் வரப்பிரசாதமாக கிடைத்த சுழல் வீரர்களில் ஒருவரான அஜந்த மெண்டிசின் இந்த அறிமுகப் போட்டியில் இந்திய அணியானது இலங்கையின் சுழலால் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
ஆரம்ப வீரர் மலிந்த வர்ணபுர, அணித் தலைவர் மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர மற்றும் திலகரத்ன தில்ஷான் ஆகியோர் சதம் விளாச 600 ஓட்டங்களினை முதலில் துடுப்பாடிய இலங்கை அணி பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த இந்திய அணியினை முரளிதரன் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தமது சுழல்களின் மூலம் அச்சுறுத்தி 223 ஓட்டங்களுடன் மடக்கினர். மெண்டிஸ் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை பதம்பார்த்ததுடன், முரளி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
முதல் இன்னிங்சில், பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதனால், பலோவ் ஒன் முறையில் துடுப்பாடிய இந்திய அணியானது, மீண்டும் சிறப்பாக செயற்பட்ட முரளி மற்றும் மெண்டிஸ் ஆகியோரின் அபார பந்து வீச்சு ஆற்றலினால் வெறும் 138 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது.
தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் பயணத்தில் கால் பதித்துள்ள வடக்கின் கிரிக்கெட் நட்சத்திரங்கள்
இந்த அணியில், அண்மைக் காலங்களில் வட மாகாணத்தில்….
இம்முறை இந்திய அணியில் பறிபோயிருந்த விக்கெட்டுக்களை முரளிதரன் தனக்கு ஆறு என்ற வகையிலும், மெண்டிஸ் தனக்கு நான்கு என்ற வகையிலும் பங்குபோட்டுக்கொண்டனர்.
இப்போட்டியில் இரு இன்னிங்சுகளினையும் எடுத்து நோக்கும் போது, இந்திய அணியின் 19 விக்கெட்டுக்கள் இலங்கையின் சுழல் வீரர்கள் மூலம் வீழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்று போட்டிகள் கொண்ட குறித்த தொடரினையும் தமது ஒருங்கிணைந்த வீரர்களின் செயற்பாடு காரணமாக இலங்கை அணியானது 2-1 என கைப்பற்றியிருந்தது.
இலங்கை எதிர் இந்தியா (முதலாவது டெஸ்ட் போட்டி, காலி – ஜூலை 18-22, 2010)
போட்டி முடிவு – இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி
இலங்கை தேசம், கிரிக்கெட் உலகிற்கு பரிசாக தந்த சுழல் ஜாம்பவான்களில் ஒருவரான முத்தையா முரளிதரன் தனது பிரியாவிடை டெஸ்ட் ஆட்டத்தில் இப்போட்டியின் மூலம் விளையாடியிருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் இதுவரை யாரும் எட்டாத மைல்கல்லான 800 விக்கெட்டுக்களை பெறுவதற்கு அவருக்கு அப்போது மேலும் எட்டு விக்கெட்டுக்கள் தேவையாக இருந்தது.
குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்து, பின்வரிசையில் அசத்திய ரங்கன ஹேரத் மற்றும் லசித் மாலிங்க ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் துணையுடனும், தரங்க பரணவிதான மற்றும் அணித் தலைவர் சங்கக்கார ஆகியோரின் சதங்களின் துணையுடனும் முதல் இன்னிங்சிற்காக 520 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது.
பதிலுக்கு, தமது துடுப்பாட்டத்தினை தொடங்கிய இந்திய அணியில் விரேந்திர சேவாக் தவிர்ந்த வேறு யாரும் பிரகாசிக்காததால், அவ்வணி 276 ஓட்டங்களுடன் சுருண்டது. இந்த இன்னிங்சில் முரளி ஐந்து விக்கெட்டுக்களை தனது சாதனை விக்கெட்டுக்களுக்காகச் சேர்த்திருந்தார்.
இந்திய அணி பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் மீண்டும் பலோவ் ஒன் முறையில் துடுப்பாட வேண்டிய நிலைக்கு அவ்வணி ஆளாகியிருந்தது.
இலங்கையுடன் போராடுவது சவாலானது என்கிறார் விராத் கோலி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலிடத்தில் …
மீண்டும் ஆடிய இந்தியா, வலுவான ஓட்டங்களினை சேர்ப்பதற்கு ராகுல் ட்ராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் இணைந்து முயற்சி செய்திருந்த போதும், லசித் மாலிங்கவின் பந்து வீச்சினால் அம்முயற்சிகள் வீணாக்கப்பட்டிருந்தன. இது ஒரு புறமிருக்க, முரளியும் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி வரலாற்று சிறப்பு மிக்க பதிவு ஒன்றிற்கு (800 விக்கெட்டிற்கு) மேலதிகமாக ஒரு விக்கெட் தேவையான நிலையில் அழுத்தங்களுடன் காணப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் இறுதி விக்கெட்டை கைப்பற்றப்படுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்பட்டது. போட்டியின் 116 ஆவது ஓவரில் முரளி தன்னுடைய நான்காவது பந்தினை பிரக்யன் ஓஹ்ஜாவினை நோக்கி வீச அது அடிக்கப்பட்டு மஹேல
ஜயவர்தனவினால் பிடியெடுக்கப்பட்டது. அந்த பிடியெடுப்புடன் வரலாற்றில், முதற்தடவையாக டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் 800 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சும் 338 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.
வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 95 ஓட்டங்களினை இலங்கை அணி, எந்தவொரு விக்கெட் இழப்புமின்றி பெற்றுக்கொண்டு முரளியின் சாதனையோடு போட்டியினை முடித்துக் கொண்டது. இப்போட்டியில், ஒரு அரைச் சதத்துடன் மொத்தமாக 7 விக்கெட்டுக்களை வீழ்த்திய லசித் மாலிங்க ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை எதிர் இந்தியா (முதலாவது டெஸ்ட் போட்டி, காலி – ஓகஸ்ட் 12-15, 2015)
போட்டி முடிவு – இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை அணி இறுதியாக இந்தியாவினை டெஸ்ட் ஆட்டமொன்றில், இந்த போட்டியின் மூலம் வீழ்த்தியிருந்தது. இறுதியாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக இந்திய அணி 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை தரப்பு சொந்த மைதான நிலைமைகளினை கருதி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தது.
எனினும், ரவிச்சந்திரன் அஷ்வினின் சுழலினை எதிர்கொள்ள தடுமாறிய இலங்கை வீரர்களுக்கு 183 இற்கு மேலாக தமது முதல் இன்னிங்சில் பெற முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து, தமது முதல் இன்னிங்சினை தொடங்கியிருந்த இந்திய அணி, சிக்கர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சதங்களுடன், 375 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது. தொடர்ந்தும் இரண்டாவது இன்னிங்சினையும், மோசமான துடுப்பாட்டத்துடன் மைதான சொந்தக்காரர்கள் ஆரம்பித்திருப்பினும், தினேஷ் சந்திமாலின் அபார சதத்தின் (167) பேருதவியுடன் இலங்கை அணி 367 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.
இதனால், இந்திய அணிக்கு இலகு வெற்றி இலக்காக 176 ஓட்டங்களினையே இலங்கையினால் வழங்க முடிந்தது. வெற்றி இலக்கு சவால் குறைந்தது என்பதால் போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
எனினும், அப்போதைய இலங்கை அணியின் பிரதான சுழல் வீரராக காணப்பட்டிருந்த ரங்கன ஹேரத் தனது அபார பந்துவீச்சினை வெளிக்கொணர்ந்து, இந்திய அணியின் ஒவ்வொரு வீரரையும் குறைவான ஓட்டங்களிற்குள் வீழ்த்தி ஓய்வறை அனுப்பினார். இதனால், வெறும் 112 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்ட இந்திய அணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வெற்றியினை இலங்கை அணியிடம் பறிகொடுத்து படுதோல்வியடைந்தது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விக்கெட்டுக்கள் எதனையும் பெறாத ஹேரத், இந்த இன்னிங்சில் மொத்தமாக 48 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். அதோடு, போட்டியின் ஆட்ட நாயகனாக தனது பொறுப்பான துடுப்பாட்டத்திற்காக இந்திய அணிக்கெதிராக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் சதமொன்றினை பெற்ற தினேஷ் சந்திமால் தெரிவாகியிருந்தார்.
இந்திய அணி இப்போட்டியின் தோல்வியின் மூலம், அப்போதைய அவ்வணியின் டெஸ்ட் வரலாற்றில், இரண்டாவது தடவையாக 200 இற்கு குறைவான ஓட்டங்களினை வெற்றி இலக்காக எட்ட முடியாமல் போனதற்கான பதிவையும் பதித்திருந்தது.
இந்திய அணியுடனான இந்த தொடரிலேயே இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினையும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.