இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பேர்க்கில் நடைபெற்றுவருகின்ற 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை கோல்ப் அணிக்காக தெரிவு செய்யப்பட்ட நான்கு வீரர்களுள் மூன்று வீரர்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப இலங்கை ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் தொழில்சார் கோல்ப் வீரர்களுக்கும் பங்கேற்பதற்கான அனுமதியை ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் வழங்கியிருந்தது. எனினும், ஜப்பான், சீனா, கொரியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் தமது தொழில்சார் வீரர்களை ஆசிய விளையாட்டு விழாவுக்காக அனுப்பவில்லை.
ஆனால், ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை கோல்ப் அணியில் அனுபவமிக்க தொழில்சார் வீரர்களான அருண ரோஹன, மிதுன் பெரேரா, நடராஜா தங்கராஜா மற்றும் லலித் குமார ஆகிய நான்கு வீரர்களை இணைத்துக்கொள்ள இலங்கை கோல்ப் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் பெறும் வாய்ப்பை மயிரிழையில் இழந்த இலங்கை வீரர்
இது இவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் கோல்ப் போட்டிகளில் பங்கேற்கவிருந்த 25 நாடுகள் ஒன்றிணைந்து தொழில்சார் போட்டிகளில் விளையாடி வருகின்ற இலங்கை வீரர்களை போட்டிகளில் பங்குபற்றச் செய்யக்கூடாது என தெரிவித்து எதிர்ப்பு கடிதமொன்றை போட்டி ஏற்பாட்டுக் குழுவினருக்கு கையளித்துள்ளனர்.
இதனையடுத்து, இலங்கை ஒலிம்பிக் சங்க அதிகாரிகள், ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியின் பிரதானிகள் ஆகியோரது பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று கடந்த சில தினங்களுக்கு முன் ஜகார்த்தாவில் இடம்பெற்றது.
இதன்போது கோல்ப் போட்டியில் பங்குபற்றுகின்ற 25 நாடுகளினதும் ஏகோபித்த முடிவுகளுக்கு மதிப்பளித்து இலங்கை அணியில் உள்ள தொழில்சார் வீரர்கள் மூவரையும் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கும், அவர்களுக்குப் பதிலாக புதிதாக மூன்று வீரர்களை பிரதியீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை கோல்ப் அணியில் இடம்பெற்றிருந்த அருண ரோஹன, மிதுன் பெரேரா மற்றும் நடராஜா தங்கராஜா ஆகிய மூன்று வீரர்களுக்கும் பதிலாக சச்சிந்த சில்வா, சிசிர குமார மற்றும் அம்ரித் சொய்ஸா ஆகிய வீரர்களை இலங்கை கோல்ப் அணியில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் குறித்த மூன்று வீரர்களும் ஜகார்த்தாவை வந்தடைந்ததாக ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியின் உப பிரதானி காமினி ஜயசிங்க தெரிவித்தார்.
எனவே, நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ள கோல்ப் போட்டிகளில் இலங்கை சார்பாக நான்கு வீரர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க