இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
T20 உலகக் கிண்ணம் நிறைவடைந்த உடன் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் மற்றும் T20i தொடரில் விளையாடியது இதனையடுத்து இந்திய அணி தற்போது பங்களாதேஷ் சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளும் முடிவடைந்துவிட்டன. இதனையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 14ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகும். இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த பிறகு இந்தியா திரும்பும் இந்திய அணி, இலங்கை அணியுடன் T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.
இதன்படி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி ஜனவரி 3ஆம் திகதி முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை இன்று (08) பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதில் முதல் ஜனவரி 3 முதல் ஜனவரி 7 ஆம் திகதி வரை மும்பை, புனே, ராஜ்கோட்டில் T20i போட்டிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து ஜனவரி 10 முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை குவஹாத்தி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
- பங்களாதேஷ் தொடரில் இருந்து மொஹமட் ஷமி திடீர் விலகல்
- IPL ஏலத்தில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு 2 கோடி!
- ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இலங்கை இளம் வீரர்
இந்த நிலையில், இலங்கையுடனான தொடர் நிறைவடைந்த பிறகு நியூசிலாந்து அணியும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 T20i போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 18 ஆம் திகதி முதல் ஜனவரி 24ஆம் திகதி வரை ஹைதராபாத், ராய்பூர், ராஞ்சியில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. மேலும், ஜனவரி 27ஆம் திகதி முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை ராஞ்சி, லக்னோ மற்றும் அகமதாபாதில் T20i போட்டிகள் நடைபெறுகிறது.
இதனையடுத்து போர்டர் – கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடருக்காக அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியா வரவிருக்கிறது. இதில் மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நாக்பூரில் நடைபெறுகிறது. 2ஆவது டெஸ்ட் பெப்ரவரி 17 முதல் 21 வரை டெல்லியில் நடைபெறுகிறது.
3ஆவது டெஸ்ட் மார்ச் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதி வரை தரம்சாலாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் கடைசிப் போட்டி மார்ச் 9 முதல் 13ஆம் திகதி வரை அகமதாபாதில் நடைபெறுகிறது. மேலும் மார்ச் 17 முதல் 22ஆம் திகதி வரை மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது.
இந்தியா- இலங்கை தொடர் அட்டவணை:
- முதல் T20i போட்டி – ஜனவரி 3 – மும்பை
- 2வது T20i போட்டி – ஜனவரி 5 – புனே
- 3வது T20i போட்டி – ஜனவரி 7 – ராஜ்கோட்
- முதல் ஒருநாள் போட்டி – ஜனவரி 10 – குவஹாத்தி
- 2வது ஒருநாள் போட்டி – ஜனவரி 12 – கொல்கத்தா
- 3வது ஒருநாள் போட்டி – ஜனவரி 15 – திருவனந்தபுரம்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<