ஈரானின் தெப்ரிஸ் நகரில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் முதல் சுற்றில் ஹெட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த இலங்கை அணி, இரண்டாவது சுற்று மற்றும் நிரல்படுத்தல் போட்டிகளில் தோல்வியைத் தழுவி ஒன்பதாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
ஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடரில் இலங்கைக்கு தொடர் வெற்றி
ஈரானின் தெப்ரிஸ் நகரில் நடைபெற்று வருகின்ற 18…
இம்முறை போட்டிகளில் சி குழுவில் இடம்பெற்ற இலங்கை அணி ஹொங்கொங், அவுஸ்திரேலியா மற்றும் கட்டார் ஆகிய அணிகளுடன் குழு நிலை ஆட்டங்களில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றது.
அதன் பின்னர் இரண்டாம் சுற்றில் ஈரானிடமும், நிரல்படுத்தல் சுற்றில் சீனாவிடமும் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி 9ஆம், 10ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் மலேஷியாவை எதிர்த்தாடியது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் (25-22, 25-14, 24-26, 25-23) இலங்கை அணி வெற்றி பெற்று 9ஆவது இடத்தை உறுதி செய்தது.
முன்னதாக ஈரான் அணியுடன் நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில் 25-21, 25-17, 25-13 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, அதனைத்தொடர்ந்து சீனாவுடன் நடைபெற்ற நிரல்படுத்தல் போட்டியிலும் முதல் 3 செட்களில் (25-22, 25-18, 25-19) தோல்வியைத் தழுவியது.
இதேநேரம், இம்முறை போட்டிகளில் சம்பியன் அணியைத் தீர்மானிக்கும் போட்டியில் நடப்புச் சம்பியனான ஜப்பான் மற்றும் கொரிய அணிகள் மோதின. இதில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்ற ஜப்பான் அணி தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்றது.
SABA சம்பியன்ஷிப் வெற்றியாளர் மகுடத்துடன் நாடு திரும்பிய இலங்கை அணி
டாக்காவில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கூடைப்பந்து..
இதேநேரம் 3ஆவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் வரவேற்பு நாடான ஈரான் மற்றும் சீன தாய்ப்பே ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஈரான் அணி, 3-1 என்ற செட் கணக்கில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இதன்படி, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு ஜப்பான், கொரியா, ஈரான் மற்றும் சீன தாய்ப்பே ஆகிய நான்கு அணிகளும் தகுதியினைப் பெற்றுக்கொண்டன.
கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகிய இம்முறை போட்டித் தொடரில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியா, சீன தாய்ப்பே, கஸகஸ்தான், இந்தியா, ஈரான், அவுஸ்திரேலியா, ஹொங்கொங், உஸ்பெகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட 18 ஆசிய நாடுகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை தொடரில் அணிகளின் தரப்படுத்தல்
1.ஜப்பான்
2.தென் கொரியா
3.ஈரான்
4.சீன தாய்ப்பே
5.தாய்லாந்து
6.சீனா
7.இந்தியா
8.அவுஸ்திரேலியா
9.இலங்கை
10.மலேஷியா
11.பாகிஸ்தான்
12.கஸகஸ்தான்
13.ஓமான்
14.நியூசிலாந்து
15.துர்க்மெனிஸ்தான்
16.கட்டார்
17.ஹொங்கொங்
18.உஸ்பெகிஸ்தான்
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<