ஆசிய விளையாட்டு விழாவில் 185 இலங்கை வீர, வீராங்கனைகள்

242

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலும், பாலெம்பாங்கிலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டெம்பர் 02ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 28 விளையாட்டு போட்டிகளுக்காக 185 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு நேற்று (04) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

45 ஆசிய நாடுகளின் பங்குபற்றலுடன், 40 விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக நடைபெறும் இம்முறை போட்டிகளில் 138 வீரர்களும், 47 வீராங்கனைகளும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ளனர். அத்துடன், பயிற்சியார்கள், முகாமையாளர், வைத்தியர்கள் என 60 அதிகாரிகளும் இவ்விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு மேலும் அறிவித்துள்ளது.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்கு இரண்டாவது இடம்

இதேநேரம், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல், மெய்வல்லுனர், நீர்நிலைப் போட்டிகள் மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களில் இலங்கை அணி அதிக பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிலும், மெய்வல்லுனர் போட்டிகளுக்காகவே அதிக வீரர்கள் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதன்படி, நீச்சல், அம்பெய்தல் (வில்லாளர்), மெய்வல்லுனர், பூப்பந்தாட்டம், பேஸ்போல், கூடைப்பந்தாட்டம், குத்துச்சண்டை, துடுப்புப் படகோட்டம், கோல்வ், உடற்கலை சாகசம், ஹொக்கி, ஜுஜோ, கபடி, கராத்தே, கட்டுமரப் படகோட்டம், பாய் மரப் படகோட்டம், அணிக்கு எழுவர் றக்பி, ரோலர் ஸ்போர்ட், ஸ்குவாஷ், மேசைப்பந்தாட்டம், டயக் வொண்டோ, டென்னிஸ், ட்ரைஅத்லன், கரப்பந்தாட்டம் (உள்ளக மற்றும் கடற்கரை), பளுதூக்கல், மல்யுத்தம், வூஷு ஆகிய விளையாட்டுகளில் இலங்கை பங்குபற்றவுள்ளது.

இந்நிலையில், பெண்களுக்கான கபடியில் இலங்கை அணி முதற்தடவையாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஆசிய விளையாட்டு விழாவுக்கக தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர் பட்டியல்கள் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

 

இலங்கையிலுள்ள வீரர்களுக்கு ஆசிய நாடுகளுடன் போட்டியிட்டு திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் அதிகளவான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுத்ததாக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையிலிருந்து இரு வீரர்கள் தெரிவு

”இம்முறை ஆசிய விளையாட்டு விழாவுக்காக வரலாற்றில் முதற்தடவையாக அதிகளவான வீரர்களை அனுப்பவுள்ளோம். அதிலும், அணி நிலை விளையாட்டு மற்றும் வீரர்களின் தனிப்பட்ட திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது” என்றும் அவர் மலும் தெரிவித்தார்.

முன்னதாக 2014இல் தென்கொரியாவின் இன்ச்சொனில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 80 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விளையாட்டு விழாவில் டி-20 கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது. இதில் இலங்கை கிரிக்கெட் ஆண்கள் அணி, ஆப்கானிஸ்தான் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தையும், இலங்கை பெண்கள் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். ஆனால் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

 காணொளிகளைப் பார்வையிட…