விஷ்வ, ராஜிதவின் பந்து வீச்சை புகழ்ந்த குயிண்டன் டி கொக்

1655

இலங்கை அணியில் விளையாடும் அறிமுகமற்ற புதிய வேகப்பந்து வீச்சாளர்கள், தங்களுடைய துடுப்பாட்ட வீரர்களை தடுமாற்றத்துக்கு உள்ளாக்கியதாக தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குயிண்டன் டி கொக் தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களால் முதல் நாளில் வலுப்பெற்றுள்ள இலங்கை அணி

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு..

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜிதவின் வேகப்பந்து வீச்சுக்கு தடுமாறிய தென்னாபிரிக்க அணி 235 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 49 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தின் போது அரைச்சதம் (80) கடந்த குயிண்டன் டி கொக் தென்னாபிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தார். இந்த நிலையில், இலங்கை அணியின் அறிமுகமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள், தங்களுடைய அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற்றத்துக்கு உள்ளாக்கியதாக குயிண்டன் டி கொக் ஊடகங்களிடம் நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலங்கை அணியின் சுரங்க லக்மால், மிகச் சிறந்த ஆரம்ப பந்துவீச்சாளர் என்பதை நாம் அறிந்திருந்தோம். அதற்கு ஏற்ப துடுப்பாட்டத்தை தயார்படுத்தியிருந்தோம். ஆனால், எமக்கு பெரிதாக அறிமுகமற்ற விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் சிறப்பாக பந்து வீசி எமது துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தி விட்டனர். இப்போது எமக்கு முன் சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்ட அணி உள்ளது. நாம் அதற்கேற்ப திட்டங்களை அமைக்க வேண்டும்”

இலங்கை அணிக்காக நேற்றைய தினம் அபாரமாக பந்து வீசிய விஷ்வ பெர்னாண்டோ எய்டன் மர்க்ரம் மற்றும் ஹசிம் அம்லா உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மத்திய பந்து ஓவர்களில் கசுன் ராஜித சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இவர்களின் பந்து வீச்சு தென்னாபிரிக்க அணி குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, முக்கிய காரணமாகவும் மாறியிருந்தது.

Photo Album – Sri Lanka vs South Africa 1st Test 2019 | Day 1

“குறித்த இரண்டு பந்து வீச்சாளர்களை நாம் இதற்கு முன் பெரிதாக எதிர்கொண்டு இருக்கவில்லை. ராஜிதவை மாத்திரம் ஒரு போட்டியில் எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், விஷ்வ பெர்னாண்டோவை இதற்கு முன் சந்தித்தது இல்லை. இப்போது நாம் எமது போட்டிக்கான திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். போட்டியில் மாத்திரமின்றி ஆடுகளம் தொடர்பிலும் எமது திட்டத்தை மாற்ற வேண்டும்.

இந்த போட்டியை பொருத்தவரை இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் பந்தை பதித்த இடங்கள் நேர்த்தியாக இருந்தது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாகவும் இருந்தது. நாம் இந்த ஓட்டங்களை குவிக்க கடுமையாக போராடியிருந்தோம். அத்துடன், புதிய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு பாணி மற்றும் அவர்களிடன் உள்ள திறமை எங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இப்போது துடுப்பாட்ட வீரர்களாகிய நாம், புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிறந்த பந்து வீச்சாளர்கள். அவர்களை எதிர்த்தாட திட்டங்களை வகுக்க வேண்டும். அவர்கள் இருவரும் இந்த தொடரின் இறுதிவரை எமக்கு தடுமாற்றத்தை கொடுக்க கூடியவர்கள். அவர்கள் மீது நாம் இப்போது அதிகமான கவனத்தை செலுத்த உள்ளோம்” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<