இலங்கை கிரிக்கெட் அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எமது Thepapare.com இணையத்தளத்துக்கு அறியக்கிடைத்துள்ளது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள், நடைபெற்றுவரும் லங்கா ப்ரீமியர் லீக் நிறைவடைந்த இரண்டு நாட்களின் பின்னர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக தென்னாபிரிக்கா செல்லவுள்ளனர்.
எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் 22ம் திகதிவரை பயிற்சிப் போட்டியில் விளையாடவிருந்ததுடன், 26ம் திகதி ஆரம்பிக்கும் பொக்ஸிங் டே டெஸ்ட் மற்றும் ஜனவரி 7ம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.
>> 2021 ஜனவரி ஆரம்பத்தில் ஹம்பாந்தோட்டை வரும் இங்கிலாந்து அணி
இவ்வாறான நிலையில், இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க குழாத்தின் வீரர்கள் சிலருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை வீரர்களை தென்னாபிரிக்க தொடருக்கு அனுப்புவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின், உடற்கூறு நிபுனர் வைத்தியர் தமிந்த அத்தநாயக்க,
“தென்னாபிரிக்காவுக்கு வீரர்களை அழைத்துச்செல்லும் போது, அவர்களில் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று இல்லாமல் நாட்டுக்கு அழைத்துவரவேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதனால், தற்போது லங்கா ப்ரீமியர் லீக்கில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் பாதுகாப்பு வளையம் போன்ற ஒன்றை செயற்படுத்துமாறு கோரியுள்ளோம். எமக்கு மாத்திரமின்றி தென்னாபிரிக்க அணியும் இதேபோன்ற பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டும் என கோரியுள்ளோம்” என்றார்.
தற்போதைய நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை, அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இங்கிலாந்து தொடருக்கான முக்கியத்துவத்தை கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால், எவ்வித ஆபத்தும் நெருங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தை இலங்கை கிரிக்கெட் சபை கொண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை. எனவே, இங்கிலாந்து அணியின் பயணத்துக்கு பின்னர், கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை. எனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடர் கிரிக்கெட் சபையின் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறும் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, குகெண்ரி கொவெண்டர், “நான் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் இன்று (09) கலந்துரையாடினேன். அவர்களின் பங்குதாரர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கேட்கும் விடயங்களை செய்ய நாம் தயாராக இருக்கிறோம்” என்றார்.
கொவிட்-19 வைரஸ் தொற்று தாக்கத்துக்கு பின்னர் இலங்கை தேசிய அணி விளையாடவுள்ள முதல் சர்வதேச தொடராக தென்னாபிரிக்க தொடர் அமையவுள்ளது. இதற்கு முன்னர் பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும், தனிமைப்படுத்தல் விவகாரம் காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<