பாகிஸ்தானின், லாஹூர் கடாபி மைதானத்தில் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள பாகிஸ்தானுடனான T20 போட்டிக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான தனது விருப்பத்தை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உறுதி செய்துள்ளது.
இலங்கை அரசு, பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் சுயாதீன பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் கடந்த இரண்டு மாதங்களாக இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை மதீப்பீடுகளை மேற்கொண்டிருந்தது.
குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட ஸாஹிரா எதிரணிக்கு சவால்
இந்நிலையில் லாஹூரில் உலக பதினொருவர் அணியுடன் போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்தியதன் பின்னர், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி முழுத் திருப்தி வெளியிடப்பட்டதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் பரிந்துரைகள் தொடர்பிலும் திங்கட்கிழமை (ஒக்டோபர் 16) கூடிய நிறைவேற்று குழுவில் பரிசீலிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி லாஹூரில் 3ஆவது T20 போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நிறைவேற்று குழு ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கான 22 பேர் கொண்ட இலங்கை குழாம் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி தேர்வு செய்யப்பட்டு 15 பேர் கொண்ட குழாம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி அறிவிக்க இலங்கை கிரிக்கெட் சபை தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் கௌரவ திலங்க சுமதிபால மற்றும் அவரது சபை உறுப்பினர்கள் அணியுடன் இணைந்து லாஹூர் செல்கின்றனர். இதன்போது பாகிஸ்தானுக்கு இரு தரப்பு கிரிக்கெட் போட்டியை மீண்டும் கொண்டுவரும் இந்த வரலாற்று சந்தர்ப்பத்திற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவருக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவிக்கவுள்ளார்.