2021இல் இலங்கை விளையாட்டுத்துறையில் நடந்தவை

Sri Lanka's Sports Review - 2021

806
Sri Lanka's Sports Review of 2021

கடந்த 2020ஆம் ஆண்டில் விளையாட்டு உலகிற்கு ஓய்வு கிடைத்த பிறகு, 2021ஆம் ஆண்டானது உலக அரங்கைப் போல, இலங்கைக்கும் ஒப்பீட்டளவில் சிறந்த ஆண்டாக அமைந்தது. அதில் சில மறக்கமுடியாத தருணங்களும் எமது மனதில் இடம்பிடித்தன.

குறிப்பாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் சீற்றத்துடன் இருக்கும் அதே வேளையில், 2021ஆம் ஆண்டைப் பொருத்தவரை இலங்கையின் விளையாட்டுத் துறையானது கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

இதில், கொரோனா வைரஸின் 3ஆவது அலை காரணமாக சில மாதங்களாக நாடு முழுவதும் முடக்க நிலைமை இருந்ததுடன். விளையாட்டு உள்ளிட்ட முக்கியமான பல அம்சங்கள் இதனால் தடைப்பட்டன.

கால்பந்தில் எழுச்சி கண்ட 2021ஆம் ஆண்டு

எவ்வாறாயினும், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், சுகாதார அமைச்சின் அனுமதியுடன் ஒருசில விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.

எனவே, நிறைவு பெற்றுள்ள 2021 ஆண்டு இலங்கையின் விளையாட்டுத்துறையில் ஓரளவு முன்னேற்றத்தையும், வெற்றியையும் கொடுத்த ஆண்டாக விளங்கியது.

இதில் லசித் மாலிங்க, திசர பெரேரா, இசுரு உதான போன்ற வீரர்களின் ஓய்வு, யுபுன் அபேகோன், உஷான் திவங்க ஆகியோரது மெய்வல்லுனர் சாதனைகள், தினேஷ் பிரியன்த ஹேரத் பாராலிம்பிக் தங்கப் பதக்கம், சர்வதேச கால்பந்து சம்மேளளத்தின் தலைவரின் இலங்கை வருகை, இலங்கை கால்பந்து அணியின் அசுர முன்னேற்றம், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் பதவிக்கால நிறைவு மற்றும் மைதானம் நிறைந்த ரசிர்களுடன் அரங்கேறிய LPL தொடர் உள்ளிட்ட விடயங்கள் முக்கிய இடம் பிடித்தன.

ஆகவே, 2021இல் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளும், அதன் முக்கிய தருணங்களையும் இந்த சிறப்புக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஜனவரி

* இலங்கை அணியை வீழ்த்தி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

* நாட்டில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதால் 2020 இற்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ரத்து செய்ய தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கை எடுத்தது.

* இலங்கை தேசிய அணியில் விளையாடிய சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய, இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

* சிரேஷ்ட வீர வீராங்கனைகளுக்கான 40ஆவது தேசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் பிரிவில் ரவிந்து லக்சிறியும், மகளிர் பிரிவில் பெதும் சாலிஹா இஸ்ஸடீனும் சம்பியனாக மகுடம் சூடினர்.

* இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான அசன்த டி மெல் தனது பதவியினை இராஜினாமா செய்தார்.

பெப்ரவரி

* ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் பொலன்னறுவையில் நடாத்தப்பட்ட தேசிய பளுதூக்கல் தகுதிகாண் போட்டியில் ஏழு இலங்கை வீரர்களால் 16 இலங்கை சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

* இலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் இயக்குனராக, முன்னாள் அவுஸ்திரேலிய வீரரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான டொம் மூடி நியமிக்கப்பட்டார்.

* பெண்களுக்கான பளுதூக்கலில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆஷிகா விஜயபாஸ்கர் தேசிய பளுதூக்கல் தகுதிகாண் போட்டியில் 71 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கி தனது இரண்டு தேசிய சாதனைகளை முறியடித்தார்.

* இலங்கை கிரிக்கெட்டை வளப்படுத்தும் முகமாக அரவிந்த டி சில்வா தலைமையிலான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

* இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உபுல் தரங்க, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

WATCH – LPL 2021: விருதுகளை அள்ளிய நட்சத்திரங்கள்!

மார்ச்

* ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் டங்கன் வைட் 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில், வெள்ளிப் பதக்கத்தை வென்ற நாளான ஜூலை மாதம் 31ஆம் திகதியை, தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

* அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற டெக்சாஸ் ரிலேஸ் சம்பியன்ஷிப் தொடரில் உயரம் பாய்தலில் பங்குகொண்ட இலங்கையைச் சேர்ந்த உஷான் திவங்க பெரேரா, 2.28 மீட்டர் உயரம் தாவி இலங்கையின் பதினேழு வருடங்கள் பழமையான உயரம் பாய்தல் சாதனையை முறியடித்தார்.

* அமெரிக்காவின் சுவட்டு, மைதான நிகழ்ச்சிகள் மற்றும் நகர்வல ஓட்டங்களின் பயிற்றுவிப்பாளர்கள் சங்கத்தினால் வழங்கப்படுகின்ற உள்ளக மெய்வல்லுனர் இரண்டாம் டிவிஷனின் மைதான நிகழ்ச்சிகளுக்கான சிறந்த வீரர் விருதினை இலங்கையின் இளம் உயரம் பாய்தல் வீரரான உஷான் திவங்க பெரேரா தட்டிச் சென்றார்.

ஏப்ரல்

* இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் 17ஆவது தலைவராக காஞ்சன ஜயரட்ன போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

* இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான ரொஷான் அபேசுந்தர, பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்தார்.

* ஐசிசியின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு, 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

* உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய சிரேஷ்ட பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் டிலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

* 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரில் பங்குகொண்ட மலையக வீரரான குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கம் வென்றார்.

* ஐ.சி.சி.யின் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை மீறிய இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான நுவன் சொய்ஸாவுக்கு 6 வருட தடை விதிக்கப்பட்டது.

* விஸ்டன் இதழினால் 2000ஆம் ஆண்டுகளின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பெயரிடப்பட்டார்.

LPL தொடரில் திறமைகளை உலகறியச்செய்த இளம் வீரர்கள்

மே

* டோக்கியோவில் இவ்வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் முதல் இலங்கையர் என்ற பெருமையை குதிரைச் சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக்கொண்டார்.

* இலங்கையின் கனிஷ்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.

* துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் இலங்கை வீராங்கனை சாரங்கி டி சில்வா, பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.44 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து புதிய இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

* இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறுவதாக அறிவித்தார்.

* இத்தாலியின் சவோனாவில் நடைபெற்ற சர்வதேச சிட்டே டி சவோனா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட இலங்கை வீரர் யுபுன் அபேகோன் 100 மீட்டர் போட்டியை 10.15 செக்கன்களில் கடந்து தனது சொந்த இலங்கை சாதனையை முறியடித்தார்.

* இலங்கையின் உயரம் பாய்தல் வீரரான உஷான் திவங்க பெரேரா, டெக்சாஸில் நடைபெற்ற ஸ்டார் கன்பிரன்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில் 2.30 மீற்றர் உயரத்தைத் தாவி, இலங்கை சாதனையையும் தெற்காசிய சாதனையையும் முறியடித்தார்.

* முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தனவுக்கு எதிராக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை முன்வைத்திருந்த இரண்டு விதமான ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஏகமனதாக நீக்குவதாக ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அறிவித்தது.

* இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா, போட்டியின்றி மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

ஜூன்

* டுபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீராங்கனை நதீக்கா புஷ்பகுமாரி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

* சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண வில்வித்தைப் போட்டியின் ரிகர்வ் பிரிவில் இலங்கை வீரர் ரஜீவ் டி சில்வா தங்கப் பதக்கம் வென்றார். உலகக் கிண்ண வில்வித்தை போட்டியில் தனிநபர் பிரிவில் இலங்கை வென்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

* இந்தியாவின், பாட்டியாலா நகரில் நடைபெற்ற இந்திய மாநிலங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் லக்ஷிகா சுகன்தி, அமாஷா டி சில்வா, நிமாலி லியனா ஆராச்சி மற்றும் காலிங்க குமாரகே ஆகியோர் பதக்கங்களை வென்று அசத்தினர்.

* இந்தியாவின் பாட்டியாலாவில் நடைபெற்ற இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணி, 19 வருடங்களுக்குப் பிறகு 4×100 அஞ்சலோட்டத்தில் அதிசிறந்த காலப்பெறுமதியை பதிவுசெய்தது.

* சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் Hall of Fame விருதுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் உள்வாங்கப்பட்டது.

* இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவாகினார்.

WATCH – LPL தொடரின் மூலம் இலங்கை கிரிக்கெட் பெற்றுக்கொண்டபயன் என்ன?

ஜுலை

* சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபற்ற ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகான் போட்டியில் உஸ்பகிஸ்தானை 3-0 என இலகுவாக வீழ்த்திய இலங்கை குறித்த தொடருக்கு தகுதியினைப் பெற்றுக் கொண்டது.

* இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் முதல் பெண் நடுவராக பணியாற்றும் வாய்ப்பை டி.நெல்கா ஷிரோமலா பெற்றுக்கொண்டார்.

* டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பெட்மிண்டன் முதல் சுற்றில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர வீரர் நிலூக கருணாரத்ன, 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் ஒலிம்பிக் அரங்கிற்கு விடைகொடுத்தார்.

* சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினை பதிவு செய்திருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியது.

* இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

ஆகஸ்ட்

* டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் F46 போட்டியில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கையின் தினேஷ் பிரியன்த ஹேரத் புதிய வரலாறு படைத்தார்.

* டோக்கியோ பாராலிம்பிக் ஆண்களுக்கான F64 ஈட்டி எறிதல் போட்டியில் 65.61 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்த இலங்கை வீரர் சமித்த துலான் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

செப்டெம்பர்

* சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

* இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

* இலங்கை இராணுவப்படை குத்துச்சண்டை வீரரான சஜீவ நுவன், ரஷ்யாவில் நடைபெற்ற 58ஆவது உலக இராணுப்படை குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

* உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், 40ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

* இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், இலங்கையின் முன்னாள் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனையுமான சுசந்திகா ஜயசிங்க கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டார்.

* T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றிற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டார்.

ஒக்டோபர்

* இத்தாலியில் நடைபெற்ற உலகக் கிண்ண சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டித் தொடரில் 6ஆவது இடத்தை இலங்கை சக்கர நாற்காலி டென்னிஸ் அணி பெற்றுக்கொண்டது.

* ஆசிய மேசைப்பந்து சம்பியன்ஷிப் தனிநபர் பிரிவு போட்டி வரலாற்றில் முதல் 16 இடங்களுக்குள் தகுதிபெற்ற முதலாவது இலங்கையர் என்ற சாதனையை முத்துமாலி பிரியதர்ஷனி படைத்தார்.

* ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரங்கனையான சுசந்திகா ஜயசிங்க விளையாட்டுத்துறை அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

* இலங்கையின் ரக்பி விளையாட்டுக்கு அளப்பெரிய சேவையாற்றிய முன்னாள் வீரரும், பயிற்சியாரும், பிரபல ஊடகவியலாளருமான சந்திரஷான் பெரேரா தனது 60 வயதில் காலமானார்.

* 2022இல் நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 23 வயதின் கீழ் ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுத் தொடரில் பங்குகொண்ட இலங்கை அணி, தாம் பங்கேற்ற 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

* கிரிக்கெட்டின் சட்டவிதிமுறைகளை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் இலங்கையின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ரங்கன ஹேரத்துக்கு வாழ்நாள் உறுப்பினர் பதவியை வழங்கியது.

* இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்.

இலங்கை – ஜிம்பாப்வே தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

நவம்பர்

* இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ் நாட்டைச் சேர்ந்த கே.பாஸ்கரன் நியமிக்கப்பட்டார்.

* 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் ஐந்து இலங்கை சாதனைகளும், 3 போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

* 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட வடக்கின் நட்சத்திர வீரரான அருந்தவராசா புவிதரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

* பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை பெனால்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய சீசெல்ஸ் அணி சம்பியனாக மகுடம் சூடியது.

* இலங்கையில் உள்ள பிரதான கழகங்களுக்கிடையில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்தை 36 ஓட்டங்களால் வீழ்த்தி தமிழ் யூனியன் கழகம் சம்பியனாகத் தெரிவாகியது.

* சர்வதேச கால்பந்து சம்மேளளத்தின் தலைவர் ஜியானி இன்பன்டீனோ, இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார்.

டிசம்பர்

* பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் பாரா விளையாட்டு விழாவில் பங்குகொண்ட இலங்கை வீரர்கள் 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் என ஒட்டுமொத்தமாக 12 பதக்கங்களை சுவீகரித்தனர்.

* உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணி 7 பதக்கங்களை வென்று அசத்தியது.

* இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரின், பயிற்றுவிப்பு காலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் நிறைவுக்கு வந்தது.

* சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் புதிய தரவரிசையின்படி, ஆண்களுக்கான பின்நோக்கிய நீச்சல் (Backstroke) போட்டியில் உலகின் முதல் 50 வீரர்களில் இலங்கை நீச்சல் வீரர் அகலங்க பீரிஸ் இடம்பிடித்து அசத்தினார்.

* இலங்கையின் நட்சத்திர மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேயரத்ன, கலிபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு 10ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

* பங்களாதேஷில் இடம்பெற்ற 19 வயதின்கீழ் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ண தொடரில் இலங்கை அணி தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

* லங்கா பிரீமியர் லீக் (LPL) 2021 ஆம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி, தொடரின் சம்பியனாக இரண்டாவது முறையாகவும் நாமம் சூடியிருக்கின்றது.

* இலங்கை கிரிக்கெட் வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

* கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 170 புள்ளிகளைப் பெற்ற கம்பஹா மாவட்டம் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக சம்பியனாக மகுடம் சூடியது.

* ஆசிய பங்கபந்து மத்திய வலய ஆடவர் கரப்பந்தாட்ட கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியை 3-0 என வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க