2024 இல் இலங்கையின் விளையாட்டுத்துறையில்  நடந்தவை!

Sri Lanka's Sports Review - 2024

111

2024 ஆம் ஆண்டு இலங்கை விளையாட்டுத் துறையில் பல முக்கிய மைல்கற்களை நிர்ணயித்த ஆண்டாக கருதப்படுகிறது. நமது நாட்டின் விளையாட்டின் இதயமாக விளங்கும் கிரிக்கெட் விளையாட்டிற்கான சர்வதேச தடையுடன் தொடங்கிய 2024 ஆம் ஆண்டு, கிரிக்கெட், கால்பந்து, மெய்வல்லுனர், கேரம் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் தீர்க்கமான வெற்றிகளுடன் முடிவடைய உள்ளது.  

2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியின் கடைசி நாளில் 24 மணித்தியாலங்கள் மட்டுமே ஏங்சியிருக்கும் இந்த தருணத்தில், கடந்த பன்னிரண்டு மாதங்களை திரும்பிப் பார்க்கும்போது, இலங்கை விளையாட்டுத்துறைக்கு இது ஒருநல்ல ஆண்டுஎன்பது தெரிகிறது. இந்த சிறப்புப் பார்வை 2024 ஆம் ஆண்டில் இலங்கை விளையாட்டு மற்றும் உலக விளையாட்டில் நடந்த சில முக்கிய மைல்கற்களைப் பற்றியது 

ஜனவரி 

  • 23 ஆண்டுகளுக்குப் பிறகு நித்தவெலாவில் கண்டி அணியை தோற்கடித்து கழகங்களுக்கிடையிலான ரக்பி தொடரில் சுஹிரு அந்தோனியின் தலைமையிலான CR&FC அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
  • சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2023ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டதுடன், 2023ஆம் ஆண்டின் T20I மற்றும் ஒருநாள் உலக அணிகளின் தலைவியாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
  • சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் அணியின் உறுப்பினராக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன தேர்வு செய்யப்பட்டார்.
  • 2023 நவம்பர் 10ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபை மீது விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்தது. 

பெப்ரவரி 

  • ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியுடன் நடைபெற்ற ஒற்றை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியுடன், உலகில் டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் எதிராக டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றியைப் பதிவு செய்த முதல் அணியாக இலங்கை வரலாற்றில் இடம்பிடித்தது.
  • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகெல மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்ததன் மூலம், இலங்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெதும் நிஸ்ஸங்க பெற்றுக் கொண்டார்
  • துபாயில் நடைபெற்ற கிராண்ட் பிரிக் சர்வதேச பாரா மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குகொண்ட நுவன் இந்திக, T44 பிரிவில் ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், F46 பிரிவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தினேஷ் ப்ரியந்த தங்கப் பதக்கம் வென்றார்.
  • 26 ஆண்டுகளுக்குப் பிறகு கழகங்களுக்கிடையிலான ரக்பி தொடரின் சம்பியன் பட்டத்தை வென்று CR&FC அணி சாதனை படைத்தது. 

மார்ச் 

  • இலங்கையின் பிரதான கழகங்களுக்கிடையில் நடைபெற்றகிளிஃபோர்ட் கிண்ண ரக்பி தொடரின் சம்பியன் பட்டத்தை 33 ஆண்டுகளுக்குப் பிறகு பொலிஸ் ரக்பி அணி வென்றது.
  • பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்ற T20I போட்டியில் நுவன் துஷார ஹெட்ரிக் விக்கெட் எடுத்தார்.
  • கொழும்பு குதிரைப் பந்தையதிடல் மைதானத்தில் பூட்டானுக்கு எதிரான கால்பந்து போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கால்பந்து போட்டியொன்றில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியுடன் இலங்கையின் நட்சத்திர கால்பந்து வீரர் மொஹமட் பஸால் கால்பந்து அரங்கிலிருந்து விடை பெற்றார் 

ஏப்ரல் 

  • இலங்கை அணிக்கும் பங்களாதே{க்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 531 ஓட்டங்கள் எடுத்தது, இது உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சதமின்றி ஒரு அணி எடுத்த அதிக ஓட்டங்கள் கொண்ட இன்னிங்ஸ் என்ற சாதனையில் இடம்பெற்றது.
  • இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20I தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி T20I போட்டியில் 156 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை துரத்தியடித்து வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20I தொடர் வெற்றியை பதிவு செய்தது.
  • சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மார்ச் மாதத்திற்கான அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருதை கமிந்து மெண்டிஸ் பெற்றுக்கொண்டார்.
  • மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிகூடிய வெற்றியிலக்கை துரத்தியடித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 302 ஓட்டங்களை துரத்தியடித்து இலங்கை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதில் இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைக் குவித்தார்.
  • பாடசாலைகளுக்கிடையிலனான அகில இலங்கை அணிக்கு எழுவர் ரக்பி தொடரின் சம்பியன் பட்டத்தை பம்பலப்பிட்டி புனித. பீட்டர்ஸ் கல்லூரி அணி வென்றது.
  • சர்வதேச கிரிக்கெட் தரவரிசையின்படி இரண்டாவது முறையாக உலகின் நம்பர் ஒன் ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனையாக சமரி அத்தபத்து இடம்பிடித்தார் 

மே 

  • துபாயில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பயின்ஷியப் போட்டியில் ஆண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியை 39.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த இலங்கை அஞ்சலோட்ட அணி, புதிய கனிஷ்ட சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
  • கொழும்பு குதிரைப்பந்தயதிடல் மைதானத்தில் கஸகஸ்தான் அணியுடன் நடைபெற்ற ஆசிய ரக்பி சம்பியன்ஷிப்பின் முதல் பிரிவுக்கான சம்பியன் பட்டத்தை இலங்கை ரக்பி அணி வென்றது.
  • மத்திய ஆசிய கரப்பந்தாட்டத் தொடரில் உலக கரப்பந்தாட்ட தரவரிசையில் 15ஆவது இடத்தில் உள்ள ஈரானை வீழ்த்தி, உலக தரவரிசையில் 60ஆவது இடத்தில் உள்ள இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்தது.
  • ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் F64 பிரிவு ஈட்டி எறிதலில் பங்குகொண்ட இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.
  • சீனாவில் நடைபெற்றபெல்ட் அண்ட் ரோட்அழைப்பு மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 400 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன, 45.48 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து முதலிடம் பிடித்தார்.
  • சர்வதேச கிரிக்கெட் பேரiவியனால் வெளியிடப்பட்ட புதிய T20I தரவரிசையின்படி உலகின் நம்பர் ஒன் சகலதுறை வீரராக வனிந்து ஹஸரங்க தேர்வு செய்யப்பட்டார். 

ஜுன் 

  • சீன தாய்ப்பே பகிரங்க மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட இலங்கை நட்சத்திர வீராங்கனை தருஷி கருணாரத்ன, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 5.74 செக்கன்களில் நிறைவுசெய்து போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
  • தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய எறிதல் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட ருமேஷ் தரங்க, 85.45 மீட்டர் தூரம் எறிந்து ஆசிய சம்பியன்ஷிப் சாதனை மற்றும் புதிய இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
  • 16 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி மற்றும் 9 ஆண்டுகளுக்குப் பிறகு T20I போட்டி வெற்றியை இலங்கை மகளிர் அணி பதிவு செய்தது.இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர்வுட் இராஜினாமாச் செய்தார் 

ஜுலை 

  • தருஷி கருணாரத்ன, நதீஷா லேகம்கே, விரேன் நெத்தசிங்க, கைல் அபேசிங்க, கங்கா செனவிரத்ன மற்றும் அருண தர்ஷன ஆகிய 6 வீரர்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கினர்.
  • இலங்கை T20I மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டார்.
  • லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி சம்பியனாகத் தெரிவாகியது.
  • 20 வயதுக்குட்பட்டோருக்கான மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் 2ஆவது இடத்தை இலங்கை அணி பிடித்தது.
  • மகளிருக்கான ஆசியக் கிண்ண T20I தொடரில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. 

ஆகஸ்ட் 

  • ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 400 மீற்றர் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் வீரராக அருண தர்ஷன இடம்பிடித்தார்.
  • 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றது.
  • சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கும் ஜுலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை சமரி அத்தபத்து பெற்றார்

செப்டம்பர் 

  • உலக சம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இலங்கையின் நெத்மி அஹிம்சா வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • ஐசிசி இன் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையாக துனித் வெல்லாலகே மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரும் தெரிவாகினர்.
  • பாரிஸ் பாராலிம்பிக்கில் இலங்கையின் சமித்த துலான் ஆண்களுக்கான ஈறிதல் F44 பிரிவில் புதிய உலக சாதனையுடன் F64 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று, பாராலிம்பிக் வரலாற்றில் இலங்கைக்கான முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்து சாதனை படைத்தார்.
  • 10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது.
  • கம்போடியா அணியை வீழ்த்திய இலங்கை கால்பந்து அணி ஆசியக் கிண்ண இறுதி தகுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
  • இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 2ஆவது இடத்தை இலங்கை மெய்வல்லுனர் அணி பெற்றுக்கொண்டது.
  • இலங்கை கிரிக்கெட் அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிராக முழுமையாக டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றது.
  • இலங்கையின் முதல் பெண் விளையாட்டுத்துறை அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பொறுப்பேற்றுக் கொண்டார்.   

ஓக்டோபர் 

  • டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 1000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை சமன் செய்த கமிந்து மெண்டிஸ், அறிமுக டெஸ்ட் போட்டியில் இருந்து தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் 50 ஓட்டங்களைக் கடந்த வீரராகவும் உலக சாதனை படைத்தார்.
  • இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டார்.
  • ஐசிசி இன் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.
  • இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதல் T20I தொடரை வென்றது.
  • ஐசிசி இன் மகளிருக்கான T20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்து அணி வென்றது.
  • ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரிடம் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி 2ஆவது இடத்தைப் பிடித்தது.
  • ஓமானில் நடைபெற்ற வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று 2ஆவது இடத்தை இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி பெற்றுக்கொண்டது.
  • சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு பிரிவின் சுயாதீன தலைவராக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நியமிக்கப்பட்டார் 

நவம்பர் 

  • 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஹொங்காங் சிக்சர்ஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை இலங்கை அணி வென்றது.
  • 2015க்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் வெற்றியையும், 2012க்குப் பிறகு முதல் ஒருநாள் தொடர் வெற்றியையும் இலங்கை அணி பதிவு செய்தது.
  • ஜேக் ஹிங்கர்ட்டின் கோலுடன் யேமன் கால்பந்து அணிக்கு எதிரான முதல் வெற்றியை இலங்கை அணி பதிவு செய்தது.
  • அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக் கிண்ண கேரம் போட்டியில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்தது.
  • புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே மற்றும் பிரதி அமைச்சராக ஒலிம்பிக் வீரர் சுகத் திலகரத்ன நியமிக்கப்பட்டதுடன், நாட்டின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்ற ஒலிம்பிக் வீரராக சுகத் திலகரத்ன வரலாற்றில் இடம்பிடித்தார்.
  • டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் பிரபாத் ஜயசூரிய இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 

டிசம்பர் 

  • தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா உள்ளிட்ட சில அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்காததால், இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு வழங்கப்படுகின்ற அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் இடைநிறுத்த சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்தது.
  • அங்குரார்ப்பண லங்கா T10 சுப்பர் லீக் தொடரில் ஹம்பாந்தோட்டா பங்களா டைகர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
  • ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
  • தாய்லாந்தின் சியாங் மாய் மண்டபத்தில் நடைபெற்ற ஆசிய உயரடுக்கு குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் பசிந்து உமயங்கன மிஹிரன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் குவைத் நகரில் 1987இல் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் பி.எல்.ஜே. ரட்னசிறி வெண்கலப் பதக்கம் வென்று 37 வருடங்களின் பின்னர் ஆசிய குத்துச் சண்டையில் இலங்கைக்கு பதக்கம் கிடைத்தது இதுவே முதல் தடவையாகும்.
  • இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் நேரடியாக பங்குபற்றும் தகுதியை இலங்கை உறுதிசெய்தது.
  • சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான பரிந்துரையில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் இடம்பெற்றிருந்ததோடு, ஆண்டின் சிறந்த T20I வீராங்கனைக்கான பரிந்துரையில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து இடம்பிடித்தார். 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<