தென்னாபிரிக்காவுடனான நேற்றைய ஆட்டமும் இலங்கையின் பதிவுகளும்

1372

பல்லேகலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று (08) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற பரபரப்பு வெற்றியானது இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நான்கு ஆண்டுகளில் 11 போட்டிகளுக்குப் பின்னர் பெறும் முதல் வெற்றியாகப் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கண்டி பல்லேகலை..

கடைசியாக இதே பல்லேகலை மைதானத்தில் 2014 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி தென்னாபிரிக்க அணியை 87 ஓட்டங்களால் இலங்கை அணி வீழ்த்தி இருந்தது. அதேபோன்று, கடந்த 12 மாதங்களில் இலங்கை அணி பெறும் 5 ஆவது வெற்றி இதுவாகும். இந்த காலப்பிரிவில் இலங்கை 22 போட்டிகளில் ஆடி அதில் 17 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளமை கவலையான விடயமாகவே உள்ளது.    

அஞ்செலோ மெதிவ்ஸின் 200 ஆவது போட்டி

மெதிவ்ஸ் இந்த போட்டியில் களமிறங்கியபோது இலங்கை அணிக்காக 200 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடும் 14 ஆவது வீரராக புதிய மைல்கல்லை எட்டினார். இதன்போது, சரியாக 200 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கும் ஹஷான் திலகரத்னவுடன் இலங்கை அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடிய வீரர்கள் வரிசையில் 13 ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் மெதிவ்ஸ்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது கன்னி ஒருநாள் போட்டியிலேயே டக் அவுட் ஆன மெதிவ்ஸ் 200 போட்டிகளை எட்ட கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளார். மெதிவ்ஸ் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் களமிறங்கியது தொடக்கம் இதுவரை இலங்கை 256 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

குசல் பெரேரா 2000 ஓட்டம்

தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த இடதுகை அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, 32 பந்துகளில் 51 ஓட்டங்களை விளாசினார். இதில் அவர் 24 ஓட்டங்களை பெற்றபோது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2000  ஓட்டங்களை பெற்ற 18 ஆவது இலங்கை வீரராக பதிவானார். அவர் 76 போட்டிகளில் ஆடி 73 இன்னிங்ஸ்களிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இலங்கை அணி சார்பில் வேகமாக 2000 ஓட்டங்களை எட்டிய சாதனை தொடர்ந்து உபுல் தரங்கவிடமே உள்ளது. தரங்க 66 இன்னிங்ஸ்களிலேயே 2000 ஒருநாள் ஓட்டங்களை பெற்றார்.   

தென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம்…

தரங்க, குசல் மெண்டிஸ் தடுமாற்றம்

உபுல் தரங்க நேற்றைய போட்டியின் ஆரம்பத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியபோதும் அவர் மீண்டும் ஒருமுறை அரைச்சதத்தை எட்டிப்பிடிக்காமல் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த ஆண்டில் அவர் இதுவரை ஒரே ஒரு ஒருநாள் அரைச்சதத்தை மாத்திரமே பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு 9 போட்டிகளில் ஆடி இருக்கும் தரங்க மொத்தம் 222 ஓட்டங்களையே பெற்றுள்ளார். அவர் சராசரியாக ஒரு போட்டியில் 22 ஓட்டங்கள் வீதமே பெற்றுள்ளார்.

தரங்கவை விடவும் குசல் மெண்டிஸ் 2018 ஆம் ஆண்டில் ஒரு அரைச்சதத்தை கூட பெறாமல் உள்ளார். நேற்றைய போட்டியில் அவரால் 14 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. அவர் இந்த ஆண்டு மொத்தம் 9 போட்டிகளில் ஆடி வெறுமனே 131 ஓட்டங்களையே பெற்றுள்ளார். இதன் ஓட்ட சராசரி 16.37 மாத்திரமே.

திசர, தசுன் சாதனை இணைப்பாட்டம்

இலங்கை அணி 195 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது ஜோடி சேர்ந்த திசர பெரேரா மற்றும் தசுன் ஷானக்க 7 ஆவது விக்கெட்டுக்கு அதிரடியாக ஆடி 67 பந்துகளில் 109 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 7ஆவது விக்கெட்டுக்கு இலங்கை அணி பெற்ற 3ஆவது அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் இதுவென்பதோடு நான்காவது சத இணைப்பாட்டமாகும்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தம்புள்ளையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உபுல் சந்தன மற்றும் மஹேல ஜயவர்தன பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக பெற்ற 126 ஓட்டங்களுமே இதன் முதலிடத்தில் உள்ளது.  

தசுன் ஷானக்கவுக்கு நல்வரவு

தென்னாபிரிக்காவுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் தசுன் ஷானக்க களமிறங்கியது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் இலங்கை ஒருநாள் அணிக்கு ஆடும் முதல் போட்டியாக இருந்தது. கடைசியாக அவர் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜிம்பாப்வேயுக்கு எதிரான போட்டியில் களமிறங்கியபோதும் அந்த ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடாமல், இரண்டு ஓவர்கள் மாத்திரம் பந்து வீசிய நிலையில் மீண்டும் இலங்கை அணிக்கு திரும்ப நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. எனினும், அவர் 65 ஓட்டங்கள் விளாசி ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது முதல் அரைச் சதத்தை பெற்றுக் கொண்டார்.   

இதன்மூலம் திசர பேரேராவைப் போன்றே நம்பிக்கை தரும் மத்திய வரிசை சகலதுறை வீரராக இலங்கை அணிக்கு தன்னை காண்பித்துள்ளார் தசுன்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<