காலி மைதானத்தில் சாதனைகளை குவித்த இலங்கை அணி

Ireland tour of Sri Lanka 2023

1495

அயர்லாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பல சாதனைகளை இலங்கை அணி பதிவுசெய்துள்ளது.

இதில் தன்னுடைய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிசான் மதுஷ்க, தன்னுடைய நான்காவது டெஸ்ட் இன்னிங்ஸில் இரட்டைச்சதத்தை பதிவுசெய்துள்ளார்.

IPL தொடரிலிருந்து வெளியேறும் வொசிங்டன் சுந்தர்!

இதற்கு முதல் இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் பிரெண்டன் குருப்பு தன்னுடைய முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் இரட்டைச்சதத்தை பதிவுசெய்திருந்தார். 1987ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரட்டைச்சதத்தை பதிவுசெய்திருந்தார்.

பிரெண்டன் குருப்புக்கு அடுத்தப்படியாக முதல் டெஸ்ட் சதத்தை இரட்டைச்சதமாக மாற்றிய இலங்கை வீரர் என்ற பெருமையை நிசான் மதுஷ்க பெற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய 3வது டெஸ்ட் போட்டியில் (4வது இன்னிங்ஸ்) இந்த சாதனையை பதிவுசெய்துள்ளதுடன், 339 பந்துகளில் 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அதேநேரம் மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் இந்தப்போட்டியில் தன்னுடைய கன்னி இரட்டைச்சதத்தை பதிவுசெய்ததுடன், (245 ஓட்டங்கள்) இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற சாதனையை பதிவுசெய்துக்கொண்டார்.

குமார் சங்கக்கார கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8 சிக்ஸர்களை விளாசியிருந்தார். குசல் மெண்டிஸ் அயர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 11 சிக்ஸர்களை விளாசியிருந்தார். சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் வசீம் அக்ரம் 12 சிக்ஸர்களை விளாசி இந்த வரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

அதுமாத்திரமின்றி இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரே இன்னிங்ஸில் இரண்டு வீரர்கள் இரட்டைச்சதங்களை கடந்த ஐந்தாவது சந்தர்ப்பமாக குசல் மெண்டிஸ் மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோரது இரட்டைச்சதங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கு முதல் 1997ம் ஆண்டு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சனத் ஜயசூரிய மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோர் இரட்டைச்சதங்களை பதிவுசெய்திருந்தனர். அத்துடன் 2004ம் ஆண்டு குமார் சங்கக்கார மற்றும் மாவன் அதபத்து (எதிர் ஜிம்பாப்வே), 2006ம் ஆண்டு குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன (எதிர் தென்னாபிரிக்கா), 2009ம் ஆண்டு மஹேல ஜயவர்தன மற்றும் திலான் சமரவீர (எதிர் பாகிஸ்தான்) ஆகியோர் ஒரே இன்னிங்ஸில் இரட்டைச்சதங்களை பதிவுசெய்திருந்தனர்.

இதேவேளை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான சில சாதனைகளும் இந்தப்போட்டியில் இலங்கை அணியால் இன்றைய தினம் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களை குசல் மெண்டிஸ் பெற்றுக்கொண்டார். தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 2004ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மஹேல ஜயவர்தன 237 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், குசல் மெண்டிஸ் இந்தப் போட்டியில் 291 பந்துகளில் 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களையும் இலங்கை அணி பதிவுசெய்திருக்கிறது. பங்களாதேஷ் அணி 2013ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்த மைதானத்தில் 638 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி இந்தப் போட்டியில் 704/3d ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<