உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக இலங்கை அணி ஒருமாத திட்டம்

400

மகாவு அணிக்கு எதிரான பிஃபா உலகக் கிண்ணத்திற்கான ஆரம்ப கட்ட தகுதிகாண் போட்டிக்காக இலங்கை தேசிய கால்பந்து அணி ஒரு மாத கால தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மகாவு அணியை எதிர்கொள்வதற்கு முன் இலங்கை அணி கட்டார் மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிற்சிகள் மற்றும் நட்புறவுப் போட்டிகளில் ஆடவுள்ளது.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கான உத்தேச இலங்கைக் குழாம்

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர்….

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண தொடர் ஆகியவற்றுக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியிலேயே இலங்கை கால்பந்து அணி மகாவுவை எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தப் போட்டிகளின் முதல் ஆட்டம் ஜூன் 6 ஆம் திகதி மகாவுவில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் போட்டி வரும் ஜூன் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். இதற்கான 31 வீரர்கள் கொண்ட இலங்கை உத்தேசக் குழாம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால்பந்தில் மிக தீர்க்கமான போட்டியாக உள்ள இந்த தகுதிகாண் ஆட்டத்திற்காக இலங்கை ஏற்பாடுகளை செய்திருப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

ThePapare.com இற்கு அளித்த பிரத்தியேக பேட்டியின்போதே அவர் இதனை தெரிவித்தார். “மகாவுக்கு எதிராக எம்மால் வெற்றி பெற முடியும். அதற்கான திறன், ஏற்பாடுகள் எல்லாம் எம்மிடம் உள்ளது. நாம் மிகவும் சாதகமான நிலையில் உள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்படி அறிவிக்கப்பட்டிருக்கும் 31 வீரர்கள் கொண்ட குழாம் இரண்டு வார பயிற்சிக்காக கட்டாருக்கு பயணிக்கிறது. அங்கிருந்து நேராக இலங்கை தேசிய அணி மேலும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு லாவோஸ் புறப்பட்டுச் செல்லவுள்ளது. 26 வீரர்களுடன் லாவோஸ் செல்லும் இலங்கை அணி அங்கு வரும் மே 28ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் அந்நாட்டு தேசிய அணியுடன் நட்புறவுப் போட்டிகளில் ஆடவுள்ளது.

இலங்கை கால்பந்து அணியின் உதவி பயிற்சியாளராக ஜானக்க சில்வா

இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நேவி சீ ஹொக்ஸ்….

எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கையில் நடத்தப்படவிருந்த நட்புறவுப் போட்டிகளுக்கு பதிலாகவே இலங்கை அணி லாவோஸ் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“லாவோஸ் மற்றும் மகாவு ஆகிய இரு நாடுகளிலும் ஒரே வகையான சூழலே இருக்கிறது. நட்புறவுப் போட்டிகளுக்குப் பின் லாவோஸில் நாம் மேலதிக நாட்கள் தங்கியிருப்போம்” என்று ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

“தயார்படுத்தலுக்காக மூன்று நட்புறவுப் போட்டிகளைக் கொழும்பில் நடத்துவதற்கு நாம் ஏற்பாடு செய்திருந்தோம். பாதுகாப்பு காரணங்களுக்காக திட்டத்தை மாற்றிக்கொண்டோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

முதல் கட்ட தகுதிகாண் போட்டிக்காக 23 வீரர்களே மகாவு செல்லவுள்ளனர். இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கோரப்பட்டுள்ளது.

“போட்டியை நடத்துவது பெரும் விடயமாகும். விளையாட்டு அமைச்சுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். மேலதிக பாதுகாப்பை தரும்படி நாம் பாதுகாப்பு அமைச்சிடமும் கோரினோம். போட்டி நடக்கும் மைதானத்தை சூழ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் போட்டியை நடத்த நாம் முயற்சிக்கிறோம்” என்று ஜஸ்வார் உமர் குறிப்பிட்டார்.  

இலங்கை தேசிய கால்பந்து அணியை மேலும் பலம்படுத்தும் நோக்குடன், தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பக்கீர் அலிக்கு உதவிப் பயிற்றுவிப்பாளராக, நேவி சீ ஹொக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உதவிப் பயிற்சியாளர் ஜானக்க சில்வா அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<