ஒரு காலத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கொடிக்கட்டிப் பறந்த இலங்கை அணி, கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுடனும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தடுமாறி வருகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மண்ணில் நடைபெறவுள்ளன. எனவே அதில் இலங்கை அணியினர் எவ்வாறு களமிறங்குவார்கள்?, எதனை சாதிப்பார்கள் என்ற ஒரு சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
சனத் ஜெயசூரிய, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் TM டில்ஷான் ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த வேளையில் இலங்கை அணி மலை போல் ஓட்டங்களை குவித்தது. வெற்றிகளையும் பெற்றது. அதே நேரம், முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், அஜெந்த மென்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளார் லசித் மலிங்க ஆகியோரும் தமது காலப்பகுதியில் தமது பந்து வீச்சில் எதிரணியை கலங்க வைத்தனர்.
1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு பின்னர் இலங்கை அணி இறுதியாக 2007ஆம் மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் உலக கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதுபோன்று, 2014ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது. அத்துடன், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான தொடர்களில் வெற்றி பெற்று கடந்த ஒரு தசாப்த காலமாக ஒரு நாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய அணியாக வலம் வந்தது.
எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், குறித்த காலப்பகுதியில் அதிகமான ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்று வீழ்ச்சி கண்டது.
ஆறுதல் அளித்த 2௦15ஆம் ஆண்டு
இலங்கை அணி 2௦15ஆம் ஆண்டில் 25 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 12 போட்டிகளில் வெற்றி பெற்றும், 12 போட்டிகளில் தோல்வியடைந்தும், ஒரு முடிவற்ற போட்டியுடனும் தனது முடிவுகளை வெளிக்காட்டியிருந்தது. இதன்படி, அனைத்து டெஸ்ட் அந்தஸ்து கொண்ட அணிகளுக்கெதிரான வெற்றி, தோல்வி 5௦ சதவிகிதத்தில் காணப்பட்டது.
இலங்கை அணியை விட பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோசமான தோல்வி விகிதத்தினைக் கொண்டிருந்தது.
2௦15 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டி முடிவுகள்
அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவற்ற போட்டி | % |
அவுஸ்திரேலியா | 19 | 15 | 3 | 0 | 1 | 83.33 |
பங்களாதேஷ் | 18 | 13 | 5 | 0 | 0 | 72.22 |
இங்கிலாந்து | 26 | 12 | 13 | 0 | 1 | 48.00 |
இந்தியா | 23 | 13 | 9 | 0 | 1 | 59.09 |
நியூசிலாந்து | 32 | 21 | 10 | 0 | 1 | 67.74 |
பாகிஸ்தான் | 27 | 12 | 14 | 0 | 1 | 46.15 |
தென்ஆபிரிக்கா | 24 | 15 | 9 | 0 | 0 | 62.50 |
இலங்கை | 25 | 12 | 12 | 0 | 1 | 50.00 |
மேற்கிந்திய தீவுகள் | 15 | 4 | 11 | 0 | 0 | 26.66 |
ஜிம்பாப்வே | 31 | 7 | 23 | 0 | 1 | 23.33 |
2௦16ஆம் ஆண்டு மேலும் விழ்ச்சியடைந்த இலங்கை அணி
தொடர்ந்து, இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் இறுதியாக மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டி வரை மொத்தமாக 16 போட்டிகளில் பங்கு பற்றி வெறும் நான்கு போட்டிகளில் மாத்திரமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அயர்லாந்து அணியுடன் 2 போட்டிகள், ஜிம்பாப்வே அணியுடன் 1 போட்டி மற்றும் வலிமைமிக்க அவுஸ்திரேலிய அணியுடன் ஒரு போட்டி என்பவற்றிலேயே இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கிறது. சமநிலை பெற்ற ஒரு போட்டி மற்றும் முடிவற்ற இரண்டு போட்டிகள் தவிர்ந்த ஏனைய ஒன்பது போட்டிகளில் இலங்கை அணி தோல்வியையே சந்தித்துள்ளது.
2௦16ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி வரை நடைபெற்ற ஒருநாள் போட்டி முடிவுகள்
அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவற்ற போட்டி | % |
அவுஸ்திரேலியா | 26 | 14 | 11 | 0 | 1 | 56.00 |
பங்களாதேஷ் | 6 | 3 | 3 | 0 | 0 | 50.00 |
இங்கிலாந்து | 18 | 11 | 5 | 1 | 1 | 67.64 |
இந்தியா | 13 | 7 | 6 | 0 | 0 | 53.84 |
நியூசிலாந்து | 12 | 7 | 4 | 0 | 1 | 63.63 |
பாகிஸ்தான் | 11 | 5 | 6 | 0 | 0 | 45.45 |
தென்ஆபிரிக்கா | 17 | 11 | 5 | 0 | 1 | 68.75 |
இலங்கை | 16 | 4 | 9 | 1 | 2 | 32.14 |
மேற்கிந்திய தீவுகள் | 11 | 4 | 7 | 0 | 0 | 36.36 |
ஜிம்பாப்வே | 7 | 2 | 5 | 0 | 0 | 28.57 |
கிரிக்கெட் போட்டிகளில் அணிகள் சீரான வேகத்தில் அதிகளவான ஓட்டங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் சபை போட்டி விதிகளில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியது. அவ்வாறிருந்தும் இலங்கை அணி அதன் முழுமையான பயன்களை பெறத் தவறியது.
அதிகளவான அதிரடி துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணி கொண்டிருந்த போதும் ஓரிரு வீரர்களை தவிர்ந்த, ஏனையோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்வதும், சிறந்த இணைப்பாட்டங்கள் காணப்படாமையுமே இலங்கை அணியின் இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணியாக உள்ளது.
அண்மைய காலங்களில் இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் இலங்கை அணிக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகளை தரவில்லை. அத்துடன் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு அதிகளவான வீரர்களின் அதிரடி மாற்றங்கள், வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதைகள் மற்றும் அனுபவ வீரர்களின் ஒருமித்த ஓய்வுகள் என்பனவும் முக்கிய காரணங்களாக அமைந்தன.
கடந்த ஆண்டில் 25 போட்டிகளுக்கு 31 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். எனினும் நடப்பாண்டில் இதுவரை 16 போட்டிகளில் மாத்திரம் 33 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, அணித் தலைவர் உட்பட மற்றும் பலர் காயம் காரணமாக அணியில் உள்ளடங்காமல் வெளியில் உள்ளனர்.
ஆகவே, எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டிகளுக்கு தயார் படுத்தும் வகையில், ஜிம்பாப்வேயில் இடம்பெறும் முத்தரப்பு போட்டித் தொடர் முதல் பங்களாதேஷ் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுடனான ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு நிலையான அணியை பேணி வருவது முக்கியமாகும்.
இது புதிய வீரர்களுக்கு அனுபவத்தை பெற்றுக்கொடுப்பதோடு, தங்களை அணிக்குள் நிலை நிறுத்தவும் அவர்களுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தி தங்கள் அணியின் வெற்றிக்காக வெளிப்படுத்த வேண்டிய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் வாய்ப்பாக அமையும்.
குசல் மென்டிஸ் போன்ற வீரர்கள் தங்களது திறமைகளை சராசரியாக வெளிப்படுத்தி வரும் நேரத்தில் அவர்களை இடைநிறுத்தாமல் அணியில் ஸ்திரப்படுத்துவதே அவரை எதிர்காலத்தில் குமார் சங்கக்கார போன்ற வீரராக உருவாக்குவதற்கு வழி வகுக்கும். அண்மையில் அவுஸ்திரேலிய அணிகெதிராக திறமைகளை வெளிப்படுத்திய அமில அபோன்சு ஜிம்பாப்வே முத்தரப்பு போட்டித் தொடருக்கு உள்வாங்கப்படாமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதுபோன்று, அசேல குணரத்ன மற்றும் நிரோஷன் டிக்வேல்ல போன்ற வளர்ந்து வரும் புதிய வீரர்களுக்கு மேலும் பல வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக ஜிம்பாப்வே முத்தரப்பு தொடருக்கு தெரிவு செய்யப்படவில்லை. எனினும், எதிர்வரும் பங்களாதேஷ் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுடனான ஒருநாள் தொடருக்கு அவரை தெரிவாக வைத்திருக்கலாம்.
முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் இலங்கை அணி, தனது துடுப்பாட்ட வரிசையில் பலவீனங்களை வெளிப்படையாக எடுத்துக் காட்டியது. இலங்கை அணிக்கு கூடிய ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கும் அனுபவம் மிக்க வீரர் மற்றும் கடந்த 13 போட்டிகளில் 656 ஓட்டங்களை பெற்றிருந்தவருமான அணியின் துணைத் தலைவர் தினேஷ் சந்திமல், அத்துடன் 12 ஒருநாள் போட்டிகளில் 52௦ ஓட்டங்களை பெற்ற அணித் தலைவர் அஞ்சேலோ மெதிவ்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறாமை பெரும் இழப்பாகும்.
அதே நேரத்தில் பந்து வீச்சில் இலங்கை அணிக்காக நடப்பாண்டில் 9 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 13 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் சுரங்க லக்மால். அவர் தற்பொழுது பந்து வீச்சாளர்களின் உலக தர வரிசையில் 27ஆம் இடத்தை பிடித்திருக்கின்றார்.
அவருடன் அனுபவ பந்து வீச்சாளர் நுவன் குலசேகர சிறப்பாக பங்களிப்புக்களை வழங்கி வருகிறார். எனினும் காயம் மற்றும் உபாதைகள் காரணமாக சகலதுறை ஆட்டக்காரர்களே பந்து வீச்சாளர்களாக செயற்படுகின்றமை அணிக்கு குறைபாடாக உள்ளது.
எவ்வாறிருப்பினும் நிலையில்லாத இலங்கை அணிக்கு தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு போட்டி, வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு முயற்சிகள் செய்து பார்ப்பதற்கு ஏற்றதாகவும், தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வாய்ப்பானதாகவும் உள்ளது.
உண்மையில், காயம் காரணமாக அஞ்சலோ மெதிவ்ஸ் அணியில் இடம்பெறாத காரணத்தினாலேயே உபுல் தரங்க அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனால், அணித்தலைவர் இல்லாத நிலையில் அனைத்து வீரர்களும் தங்களது முழுமையான பங்களிப்புக்களை ஜிம்பாப்வே முத்தரப்பு போட்டிகளில் வழங்கி வெற்றி பெற்று, இலங்கை அணியை வலிமைமிக்க அணியாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்.