இந்த ஆண்டுக்கான (2023) ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை நேரடித் தகுதியினை இழந்திருக்கும் நிலையில், உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்றுத் தொடரில் விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கு காணப்படுகின்றது.
>> சதங்களில் சாதனை படைத்த விராட் கோஹ்லி
ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுத் தொடர் அடுத்த மாத நடுப்பகுதியில் ஜிம்பாப்வேயில் (ஜூன் 18 தொடக்கம்) நடைபெறுகின்றது. மொத்தம் 10 நாடுகள் பங்கெடுக்கும் இந்த தகுதிகாண் தொடரில், ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கில் இறுதி 5 இடங்களுக்குள் வந்த அணிகளில் ஒன்றாக இலங்கை கிரிக்கெட் அணியும் பங்கெடுக்கின்றது.
இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவுள்ள இந்த தகுதிகாண் தொடரில் எந்த குழுவில் இலங்கை இடம் பெறும் என்பது கேள்விக் குறியாக காணப்பட, இலங்கை குழு B இல் பெயரிடப்பட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி இலங்கையின் குழுவில் அதாவது குழு B இல் இலங்கை, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடம்பெறும் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை குழு A இல் தொடரினை நடாத்தும் ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இடம்பெற முடியும் எனக் கூறப்படுகின்றது.
மறுமுனையில் குழு B அணிகள் மோதுகின்ற போட்டிகள் ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரிலும், குழு A அணிகள் மோதும் போட்டிகள் ஹராரே நகரிலும் நடைபெறலாம் என ICC இன் நம்பத்தகுந்த செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
>> தாய் நாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் மெஹிதி ஹஸன்
ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் இரண்டு குழுக்களில் இருந்தும் முதல் மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு ”சுபர் 6” சுற்று நடைபெறவுள்ளதோடு, இந்த ”சுபர் 6” சுற்றில் இருந்து இரண்டு அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படும். குறித்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் எஞ்சிய இரண்டு அணிகளாக மாறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தில் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ள நிலையில், ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக் மூலமாக தொடரினை நடாத்தும் இந்தியாவுடன் இணைந்து 8 அணிகள் உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதியினைப் பெற்றிருப்பதோடு, உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் எஞ்சிய இரண்டு அணிகளுமே இந்த தகுதிகாண் தொடர் மூலம் தெரிவு செய்யப்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<