இலங்கை கால்பந்து விளையாட்டில் உருவான அதிசிறந்த கால்பந்து வீரரும், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தொழில்நுட்ப பணிப்பாளருமான PD சிறிசேன தமது 77ஆவது வயதில் நேற்று (18) காலமானார்.
ராஜகிரிய – சங்கராஜா மகா வித்தியாலயம் மற்றும் மருதானை மத்திய கல்லூரியின் ஊடாக இலங்கை தேசிய கால்பந்து அணிக்குத் தெரிவான இவர், சுமார் 15 வருடங்கள் இலங்கை தேசிய அணிக்காக விளையாடியதுடன், இலங்கை அணியின் தலைவராகவும் செயற்பட்டு அணிக்கு பல்வேறு வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். அதுமாத்திரமின்றி, சௌண்டர்ஸ் கழகத்துக்காக (1956 – 1972) விளையாடிய அவர், 21 FA கிண்ணம் மற்றும் சம்பியன் லீக் கால்பந்து கிண்ணங்களையும் அவ்வணி வெற்றிகொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அத்துடன், இலங்கை மற்றும் மாலைதீவுகள் தேசிய அணிகளின் சிறந்த பயிற்றுவிப்பாளராக விளங்கிய அவர், 1976 – 1979 மற்றும் 1980 – 1987 ஆகிய காலப்பகுதியில் இலங்கைக்கும், 1988 இல் மாலைதீவுகள் தேசிய அணி மற்றும் அந்நாட்டின் நியூ ரேடியன்ட் எப்.சி அணிக்கும் பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளார். அதன் பிறகு கால்பந்து ஆலோசகராகவும் பல வருடங்களாக கடமையாற்றியுள்ளார்.
மேலும், ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக கடமையாற்றிய முதல் இலங்கையர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.
ரெட் சன் – நியு ஸ்டார் இடையிலான மோதல் சமநிலையில் நிறைவ
இந்நிலையில், இலங்கையின் கால்பந்து விளையாட்டுக்கு வழங்கிய அன்னாரது சேவையை கௌரவிக்கும் வகையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாஸவின் பிறந்த இடமான மாளிகாவத்தையில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தை, PD சிறிசேன மைதானம் என பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறிசேன மாஸ்டர் மற்றும் கால்பந்து சிறா என கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களினால் செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட அன்னார், இந்நாட்டின் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு சுமார் 70 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றியுள்ளதுடன், தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஐரோப்பிய கழகங்களுக்காகவும், 1970ஆம் ஆண்டுகளில் இலங்கை அணிக்காக விளையாடிய ஒரேயொரு வீரராவார்.
அன்னாரது பூதவுடல் PD அவர் விளையாடிய கழகம் (சௌண்டர்ஸ்) அமைந்துள்ள டாம் வீதியில் இன்று (19) இரவு 10 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொரல்லை ஜயந்த மலர்சாலையில் அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பூரண பங்களிப்புடன் எதிர்வரும் வியாழக்கிழமை மாலை பொரல்லை பொது மயானத்தில் நடைபெறும்.