சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சற்றே ஓய்ந்திருக்கும் வேளையில், கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் 10ஆவது பருவத்துக்கான IPL எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இன்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமாகியது.
குறிப்பாக ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து மே மாதம் இறுதி வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைபெறவுள்ளதால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் முற்று முழுதாக IPL நோக்கி உள்ளது எனலாம். அத்துடன் இலங்கை கிரிக்கட் ரசிகர்களை பொறுத்தமட்டில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியுடனான T20 தொடர் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதியில் நிறைவுற உள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 05) முதல் ஆரம்பமாகும் அதிரடி தொடரான IPL போட்டிகள் தொடர்ந்து மே மாதம் 21ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அதே நேரம் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் தோடர்ந்தும் மே மாதம் வரை நடக்கவுள்ளது. எனினும் இப்போட்டிகளை கண்டுகளிப்பதற்கு குறித்த போட்டிகள் ஒளிப்பரப்பாகும் நேரலை இலங்கை நேரப்படி நள்ளிரவென்பதால் இலங்கை ரசிகர்களின் ஆர்வத்தில் தொய்வினை ஏற்படுத்தலாம்.
எனினும், இலங்கை நேரப்படி மாலை 4.00 மணி மற்றும் 8.00 மணிக்கு ஆரம்பமாகும் IPL போட்டிகளை கண்டுகளிக்க செய்மதி அல்லது டிஷ் தொலைக்காட்சி இணைப்புகளை கொண்ட ரசிகர்களுக்கு வாய்ப்பினை அளிக்கிறது. அத்துடன் இணைய தளத்தினுடாகவும் பார்த்து மகிழலாம்.
இலங்கை ரசிகர்களை பொறுத்த மட்டில் இம்முறை நிச்சியமாக IPL போட்டிகளை பார்த்து ரசிக்க ஆர்வத்துடன் உள்ளார்கள் என்றால் அது மிகையல்ல. ஏனெனில், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று இலங்கையர்கள் பங்குபற்றவுள்ளார்கள். இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களுடன் இந்த பருவகாலத்துக்கான IPL போட்டிகளில் மேலும் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட ரசிகர் கூட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி உள்வாங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் உருவாக்கப்பட்ட முன்னால் இலங்கை அணியின் மிகவும் சிறந்த துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்தனவை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமித்துள்ள அதேவேளை, இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மாவின் தலைமையிலான அணிக்கு அவர் பயிற்சி அளிக்கின்றார்.
IPL ஏலத்தின் போது, அவுஸ்திரேலிய அணியுடனான டி20 போட்டிகளின் போது அதிரடியாக துடுப்பாடியிருந்த அசேல குணரத்னவை மும்பை அணியில் இணைத்து கொள்வதற்கு செல்வாக்கு செலுத்தியிருந்தார். அந்த வகையில், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களும் நிச்சியமாக அசேல குணரத்ன மும்பை அணியில் துடுப்பாடுவதைக் காண ஆவலோடு இருப்பார்கள் என நம்பலாம்.
அதேநேரம் இலங்கையில் தசாப்த காலமாக மிகவும் அதிகமாக பேசப்பட்ட மற்றும் 2014ஆம் ஆண்டு T20 உலக கிண்ண சம்பியன் பட்டத்தினை வெல்லுவதற்கு இலங்கை அணியை வழி நடத்திய லசித் மலிங்க தொடர்ந்து 10ஆவது ஆண்டாகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். ஒரே அணிக்காக தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் விளையாடிய வீரர்களில் லசித் மலிங்க உள்ளிட்ட விராத் கொஹ்லி றோயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும், ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.
அத்துடன் கடந்த லீக் போட்டிகளின் போது லசித மலிங்க ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையிலும் அவருக்கான கொடுப்பனவுகளை செய்தது மாத்திரமின்றி மும்பை அணி அவரை இக்கட்டான சூழநிலையிலும் அணிக்குள் வைத்திருந்தது. ஆகையினால், இம்முறை களத்தில் தன்னுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்த காத்திருக்கின்றார்.
அதேநேரம் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் இம்முறை IPL போட்டிகளில் டெல்லி டெயார்டெவில்ஸ் அணி சார்பாக கலக்க எதிர்பார்த்துள்ளார். எனினும், இவ்வருட ஜனவரி மாத ஆரம்பத்தில் தென் ஆபிரிக்க அணியுடனான சுற்றுப் பயணத்தில் காலில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக இடைநடுவில் இலங்கை திரும்பியிருந்தார்.
அதனை தொடர்ந்து பங்களாதேஷ் அணியுடனான கிரிக்கெட் தொடரில் முழுமையாக விலகியிருந்தார். எதிர்வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்து நாட்டில் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன் போட்டிகளுக்கு முழு உடற்தகுதியை வெளிப்படுத்த வேண்டிய நிலையில், IPL லீக் போட்டிகள் இதற்கு அத்திவாரமாக அமையலாம். நிச்சயமாக அவர் வழமைக்கு திரும்புவார் என நம்பலாம்.
துரதிஷ்டவசமாக சில T20 நிபுணத்துவ வீரர்கள் காயமுற்றதாக அறியக்கிடைத்துள்ளது. அந்த வகையில், குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா மற்றும் சீக்குகே பிரசன்னா ஆகியோருக்கு 2017ஆம் ஆண்டுக்கான IPL போட்டிகளுக்காக பிந்திய அழைப்புகள் வரலாம்.
அதே நேரம் இலங்கை கிரிக்கெட் சபை இதுவரை உள்ளூர் மற்றும் மாகாண போட்டிகள் குறித்து எவ்விதமான தீர்மானங்களையும் முடிவு செய்யவோ அல்லது வெளிப்படுத்தவோ இல்லை. அத்துடன் எதிர்வரும் சம்பியன் கிண்ண போட்டிகள் வரை தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்விதமான போட்டிகளும் இல்லை. மேலும், எதிர்வரும் முக்கியமான சம்பியன் கிண்ண போட்டிகளுக்காக அணியை தயார்படுத்தும் முடிவு இலங்கை கிரிக்கெட் சபையிடமே உள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் கிரகாம் போர்ட் (Graham Ford) மீண்டும் உள்ளூர் T20 லீக் போட்டிகளை நடாத்துமாறு வேண்டியிருந்தார். துரதிஷ்டவசமாக இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாமல் போனது. அத்துடன், கருத்து தெரிவித்திருந்த கிரகாம் போர்ட், சவால் மிக்க மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் போட்டியிடும் போது சிறந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பாகவும் எமது வீரர்களுக்கு அது ஒரு நல்ல சந்தர்ப்பமாகவும் அமையும் என்று தெரிவித்தார்.
எது எவ்வாறெனினும், இந்திய பிரிமியர் லீக் போட்டிகள் 10ஆவது அகவையில் காலடி வைத்துள்ள நிலையில், அதனை முன்மாதிரியாக கொண்டு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், இலங்கையில், வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலோடு சாவால் மிக்க உள்ளூர் T20 போட்டியொன்றை நடாத்த வழி காணவேண்டும்,