கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிப் போயுள்ள அப்பாவி வறிய மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் தசுன் ஷானக ஆகியோர் உலர் உணவுப் பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அன்றாட கூலி தொழிலாளர்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
உதவிக்கரம் நீட்டியிருக்கும் சனத் ஜயசூரிய
கொரோனா வைரஸ் மூலம் வீடுகளுக்குள்ளேயே……
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில், இன்றைய தினம் (05) தனது 22 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய இலங்கை அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ, கம்பஹா பகுதியில் வசிக்கின்ற பொலிஸ் அதிரடிப் படைப் பிரவில் பணிபுரிகின்ற அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அவிஷ்க பெர்னாண்டோ, கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் சதமடித்து அசத்தியதுடன், உலகக் கிண்ணப் போட்டியில் இளம் வயதில் சதமடித்த இலங்கை வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
இந்த நிலையில், இலங்கை அணியின் சகலதுறை வீரரான தசுன் ஷானக, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த வறிய மக்களுக்கும், வேகப் பந்துவீச்சாளரான லஹிரு குமார, மாத்தறை பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் சிரேஷ்ட வீரர்கள் பலர் இவ்வாறு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவியிருக்கும் நிலையில் இளம் வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் தசுன் ஷானக ஆகிய வீரர்களும் இந்த சமூகசேவையில் கைகோர்த்திருப்பது அனைவரது பாராட்டுக்குரிய விடயமாக மாறியுள்ளது.
இலங்கை மக்களுக்கான சேவையில் இணைந்த குசல் மெண்டிஸ்
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ்….
இதேவேளை, கொரோனாவினால் மக்களுக்கு உதவும் வகையில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹாநாம, சமிந்த வாஸ் ஆகியோர் இணைந்து ஆரம்பித்துள்ள திட்டத்தின் இரண்டாவது கட்டம் இன்று (05) முன்னெடுக்கப்பட்டது.
Dr. கிரிஷான் தலகாககே என்பவரின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இன்றைய தினம் ராஜகிரிய பகுதியில் உள்ள 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<