இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பேர்க்கில் நடைபெற்று வருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றுள்ள இலங்கை அணிக்கு இதுவரை எந்தவொரு பதக்கமும் கிடைக்கில்லை.
அதிலும் குறிப்பாக, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் குறைந்தபட்சம் இரண்டு பதக்கங்களையாவது வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றியிருந்த நான்கு வீரர்களும் எந்தவொரு வெற்றியும் இன்றி நாடு திரும்பவுள்ளனர்.
ஆசியாவில் ஆறாவது இடத்துடன், பதக்க வாய்ப்பை தவறவிட்ட மெத்யூ
ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாவது …
இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை தேசிய கொடியை ஏந்திச் சென்றவரும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான பளுதூக்கலில் வெண்கலப் பதக்கத்தை வென்றவருமான தினூஷா கோமஸ், கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தார்.
ஜகார்த்தாவில் உள்ள ஜே.ஐ எக்ஸ்போ அரங்கில் நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் 48 கிலோ கிராம் எடைப் பிரிவில் கலந்துகொண்ட தினூஷா, மூன்று தடவைகள் ஸ்னெச் முறையில் 67 கிலோ கிராம் எடையைத் தூக்கத் தவறியதால் முதல் சுற்றுடன் வெளியேறினார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட தினூஷா கோமஸ், ஸ்னெச் முறையில் 70 கிலோ கிராம் மற்றும் கிளீன் என்ட் ஜேர்க் முறையில் 85 கிலோ கிராம் உள்ளடங்கலாக 155 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், நேற்று (21) நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்கலில் 62 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் திலங்க விராஜ் பலகசிங்க, ஸ்னெச் முறையில் முறையே 122, 122 மற்றும் 125 கிலோ கிராம் எடைகளை தூக்குவதற்கு மேற்கொண்ட 3 முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஒரு வெற்றியுடன் ஆசிய விளையாட்டு விழாவை முடிக்கும் இலங்கை ஆடவர் கபடி அணி
தற்பொழுது இந்தோனேஷியாவின் …
இவ்விருவரும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 62 கிலோ கிராம் பளுதூக்கலில் போட்டியிட்டிருந்தனர். அந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக 279 (124 – 155) கிலோ எடையை தூக்கிய திலங்க, புதிய தேசிய சாதனை படைத்திருந்தாலும், 4 கிலோ கிராம் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக வெண்கலப் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கலில் 53 கிலோ கிராம் எடைப் பிரிவிற்காக ஏ குழுவில் போட்டியிட்ட சமரி வர்ணகுலசூரிய, ஒட்டுமொத்தமாக 169 கிலோ கிராம் எடையைத் தூக்கி 10ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த போட்டியில், ஸ்னெச் முறையில் 73 கிலோ கிராம் எடையைத் தூக்கிய அவர், கிளீன் அன்ட் ஜேர்க் முறையில் முதல் முயற்சியில் 96 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார்.
எனினும், கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் அதே எடைப் பிரிவில் போட்டியிட்ட சமரி வர்ணகுலசூரிய, 172 கிலோ கிராம் எடையைத் தூக்கி தேசிய சாதனை படைத்தாலும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இறுதி நேரத்தில் துரதிஷ்டவசமாக தவறவிட்டார்.
குறித்த போட்டியில், ஸ்னெச் முறையில் 78 கிலோ கிராம் எடையைத் தூக்கிய அவர், கிளீன் அன்ட் ஜேர்க் முறையில் முதல் முயற்சியில் 94 கிலோ கிராம் எடையைத் தூக்கியிருந்தார்.
இதுஇவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் இலங்கை அணியின் கடைசி எதிர்பார்க்கப்பாக அமைந்த ஆண்களுக்கான 69 கிலோ கிராம் எடைப்பிரிவு பளுதூக்கலில் இலங்கையின் இந்திக சதுரங்க திசாநாயக்க கலந்துகொண்டார்
இப்போட்டியின் பி குழுவில் 8 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் ஸ்னெச் முறையில் தனது முதல் முயற்சியில் 130 கிலோ கிராம் எடையைத் தூக்கிய இந்திக, 2ஆவது மற்றும் 3ஆவது முயற்சிகளில் 134 கிலோ கிராம் எடையைத் தூக்குவதில் தோல்வியடைந்தார். எனினும், ஸ்னெச் பிரிவின் இறுதியில் ஐந்தாவது இடத்தை அவர் பெற்றிருந்தார்.
இதனையடுத்து கிளீன் அன்ட் ஜேர்க் முறையில் முதலிரண்டு முயற்சியிலும் 155 கிலோ கிராம் எடையைத் தூக்குவதில் தோல்வியைத் தழுவிய அவர், இறுதியாக 160 கிலோ கிராம் எடையைத் தூக்குவதிலும் தோல்வி கண்டார். இதன்படி, பி குழுவில் இறுதி இடத்தைப் பெற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 69 கிலோ கிராம் எடைப்பிரிவில் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர்களின் திறமைகள் குறித்து இலங்கை பளுதூக்கல் அணியின் பிரதான பயிற்றுனரும், முகாமையாளருமான பி. விக்ரமசிங்க கருத்து வெளியிடுகையில்,
”பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நிறைவுக்கு வந்து மூன்று மாதங்கள் செல்வதற்கு முன் ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றோம். எமது வீரர்கள் அனைவரும் உடல் பருமனை குறைத்துக் கொண்டுதான் இந்தப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர். எனினும், அவர்களது பருமனை குறைத்துக் கொண்டு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு போதியளவு கால அவகாசம் கிடைக்கவில்லை. உதாரணமாக, 62 கிலோ எடைப்பிரிவில் திலங்க பலகசிங்க ஸ்னெச் முறையில் தோல்வி கண்டாலும், அவர் பயிற்சிகளின் போது 280 – 290 கிலோ எடைகளைத் தூக்கியிருந்தார். ஆனால், அவருக்கு இங்கு சிறப்பாக செயற்பட முடியாமல் போனது.
பதக்க வாய்ப்பை இழந்தது இலங்கை கடற்கரை கரப்பந்து ஜோடி
இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய …
அதேபோல, இலங்கையில் தற்போது பளுதூக்கல் விளையாட்டுக்கு அதிகளவான வீராங்கனைகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். முன்னைய காலங்களைவிட நிறைய வீராங்கனைகள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர். அதுமாத்திரமின்றி, சமரி வர்ணகுலசூரிய, தினூஷா கோமஸ் ஆகிய வீராங்கனைகள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர்.
எனவே, உலகின் இரண்டாவது ஒலிம்பிக் போட்டிகள் என வர்ணிக்கப்படுகின்ற ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கமொன்றை வெல்வதென்பது ஒலிம்பிக் பதக்கமொன்றை பெற்றுக்கொள்வதை ஒத்ததாக கருதப்படும். ஆகவே எமது வீராங்கனைகள் அந்த அடைவுமட்டத்தை தற்போது நெருங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.
எதுஎவ்வாறாயினும், உலகின் இரண்டாவது ஒலிம்பிக் விழா என்பதில் துளி அளவேனும் சந்தேகத்தைப் ஏற்படுத்தாத ஆசிய விளையாட்டு விழாவில் எப்போதும் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படும். அதிலும் குறிப்பாக, பளுதூக்கல் போட்டியில் ஜப்பான், சீனா, தாய்லாந்து, கஸகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தொடர்ச்சியாக பதக்கங்களை வென்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும், கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை பளுதூக்கல் அணி ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது. ஆனால், அதே எதிர்பார்ப்புடன் ஆசிய விளையாட்டு விழாவில் களமிறங்கிய இலங்கை பளுதூக்கல் அணிக்கு ஏமாற்றத்துடன் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…