இந்த ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்த யுபுன் அபேகோன்

312

இத்தாலியில் நடைபெற்ற Firenze Sprint Festival 2023 இல் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற குறித்த போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 20.60 செக்கன்களில் ஓடி முடித்த யுபுன் அபேகோன், 2023 மெய்வல்லுனர் பருவகாலத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற 12ஆவது கெஸ்டிக்லியோன் சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் பங்குபற்றிய யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 20.37 செக்கன்களில் ஓடிமுடித்து இலங்கை சாதனையையும், தெற்காசிய சாதனையையும் முறியடித்தார்.

ஆண்களுக்கான 60 மீட்டர் (6.59 செக்.), ஆண்களுக்கான 100 மீட்டர் (10.15 செக்.), ஆண்களுக்கான 200 மீட்டர் (20.37 செக்.) மற்றும் ஆண்களுக்கான 150 மீட்டர் (15.16 செக்) ஓட்டப் போட்டிகளில் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளுக்கு சொந்தக்காரராக யுபுன் அபேகோன் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, யுபுன் பங்குபற்றிய 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இத்தாலியின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர்களான மார்கோ ரிச்சி (20.88 செக்.) மற்றும் ப்ரான்சிஸ்கோ ரிபேரா (21.08 செக்.) முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பிடித்தனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<