தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியனான ஹிமாஷா ஏஷானுக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்க இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கை இராணுவ தலைமையகத்தில் வைத்து எடுக்கப்பட்ட ஹிமாஷவின் சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஹிமாஷாவுக்கு எதிராக இந்த ஆண்டு ஜூன் 3ஆம் திகதி அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டதுடன், குறித்த விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
இதன்படி, உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் மற்றும் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் விதிகளின்படி, 2021 அக்டோபர் 26 முதல் 2025 அக்டோபர் 25ஆம் திகதி வரை ஹிமாஷவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நான்கு பதக்கங்களுடன் பொதுநலவாய விளையாட்டு விழாவை நிறைவுசெய்த இலங்கை!
- தெற்காசியாவில் புதிய வரலாறு படைத்த இலங்கையின் யுபுன்
- பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற ஸ்டார்க்கின் மனைவி, சகோதரர்!
எனவே, குறித்த காலப்பகுதியில் மெய்வல்லுனர் தொடர்பான போட்டியிலோ அல்லது பயிற்சியிகளிலோ ஹிமாஷவுக்கு பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய ஹிமாஷா எஷானுக்கு வாய்ப்பு உள்ளது மற்றும் அவர் 14 நாட்களுக்குள் அந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்ய வேண்டும்.
இதேவேளை, 2012ஆம் ஆண்டும் ஹிமாஷ ஏஷான் இவ்வாறு ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகியிருந்தார்.
100 மீற்றர் போட்டியில் தேசிய சம்பியனாக வலம்வந்த ஹிமாஷ, 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் சம்பியனானதோடு, யுபுன் அபேகோனுக்கு முன்னர் தெற்காசிய சாதனையையும் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <