இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த அஜந்த மெண்டிஸ் கடந்த 4 ஆண்டுகளாக எவ்விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்துவந்த நிலையில் இன்று (28) தான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மொரட்டுவ பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட அஜந்த மெண்டிஸ் 1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி பிறந்தார். ஆரம்ப காலத்தில் தனது தொழிலுக்காக இலங்கையின் பாதுகாப்பு படையில் ஒரு படை வீரராக இணைந்த இவர், அங்கு காணப்படுகின்ற விளையாட்டு கழகத்தில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்தினார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மே.தீவுகள் குழாம் அறிவிப்பு
இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது….
இலங்கை இராணுவ கழகத்தில் கிரிக்கெட் விளையாட்டை தொடர்ந்த மெண்டிஸ் வித்தியாசமான சுழல் பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரர்களை இலகுவாக ஆட்டமிழக்கச்செய்து வந்தார். இராணுவ விளையாட்டு கழகத்திற்காக 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முதலாக A தர போட்டியின் ஊடாக கிரிக்கெட் வாழ்க்கைக்குள் தடம்பதித்தார்.
அதனை தொடர்ந்து அதே தொடரில் முதல்தர போட்டியிலும் தடம்பதித்தார். பின்னர் டி20 கிரிக்கெட், உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டி20 கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். தனது மாயாஜால சுழல் மூலம் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அசத்திவந்த அஜந்த மெண்டிசுக்கு இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு உருவானது.
2008 ஆம் ஆண்டு இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் அஜந்த மெண்டிஸ் எனும் சுழல் பந்துவீச்சாளர் முதல் முறையாக கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார். 2008 ஏப்ரல் 10 ஆம் திகதி இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய மெண்டிஸ் கன்னி ஒருநாள் போட்டியிலேயே 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தனது மாயாஜால சுழல் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகில் அசத்திவந்த மெண்டிஸுக்கு 2008 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அறிமுகம் கிடைத்தது. தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய மெண்டிஸ் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கள் என தனது கன்னி டெஸ்ட் போட்டியிலேயே 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி தான் ஒரு சுழல் மன்னன் என்பதை நிரூபித்தார்.
இலங்கை வளர்ந்து வரும் அணியை சரிவிலிருந்து மீட்ட அஷேன், மதுவந்த
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ்….
டெஸ்ட் அறிமுகத்தையும் தொடர்ந்து 2008 ஒக்டோபர் 10 ஆம் திகதி கனடாவில் வைத்து ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை அணி மோதிய டி20 சர்வதேச போட்டியில் டி20 சர்வதேச அறிமுகமும் அஜந்த மெண்டிஸுக்கு கிடைத்தது. ஒருநாள் மற்றும் டெஸ்ட்டில் அசத்தியதை போன்று கன்னி டி20 சர்வதேச போட்டியிலும் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியது மாத்திரமல்லாமல், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.
டி20 போட்டிகளில் விசேடமாக கலக்கி வந்த மெண்டிஸ் 2011 ஆகஸ்ட் 8 ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரராக சாதனை படைத்தார்.
அதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கிண்ண தொடரின் இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகள் மோதிய போட்டியில் வெறும் 8 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி இதுவரையில் டி20 சர்வதேச கிரிக்கெட் உலகில் 6 விக்கெட்டுக்களை இரண்டு தடவைகள் வீழ்த்திய ஒரேயொரு சாதனை வீரராக காணப்படுகின்றார். மேலும் குறித்த போட்டியில் நிகழ்த்திய சாதனையே இன்றுவரையில் சிறந்த பந்துவீச்சு பிரதியாக காணப்படுகின்றது.
இவ்வாறு பல அதிசய சாதனைகளை நிகழ்த்திவந்த மெண்டிஸின் பந்துவீச்சு பாணியை துடுப்பாட்டு வீரர்கள் கண்டுகொண்டனர். அதன் காரணமாக ஆரம்பத்தில் விக்கெட்டுக்கள் வீழ்த்தியதை போன்று பின்னர் வீழ்த்த முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அரைப்பகுதியில் மெண்டிஸுக்கு பாரிய உபாதை ஒன்று ஏற்பட்டது.
இளையோர் ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 தொடக்கம்….
அதனை தொடர்ந்து நீண்ட ஓய்வில் இருந்த மெண்டிஸுக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் குழாமில் இடம்பெற்ற இவருக்கு முதலாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஆரம்பத்தில் காணப்பட்ட சுழல் வேகமும், பந்துவீசும் தொழிநுட்பமும் இழக்கப்பட்டிருந்த நிலையில் ஓட்டங்களை வாரி வழங்கினார்.
இதன் காரணமாக தொடர்ச்சியாக அஜந்த மெண்டிசுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக டெஸ்ட் போட்டியில் 2014 ஆம் ஆண்டு ஜுலை மாதம் விளையாடியிருந்ததுடன், டி20 போட்டியிலும் அதே ஆண்டு மார்ச் மாதம் விளையாடியிருந்தார். இறுதியாக ஒருநாள் சர்வதேச போட்டியில் 2015 டிசம்பரில் விளையாடியிருந்தார்.
இலங்கை அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகளில் 4 தடவைகள் 5 விக்கெட்டுக்களுடன் மொத்தமாக 70 விக்கெட்டுக்களையும், 87 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 3 தடவைகள் 5 விக்கெட்டுக்களுடன் மொத்தமாக 152 விக்கெட்டுக்களையும், 39 டி20 சர்வதேச போட்டிகளில் 2 தடவைகள் 5 விக்கெட்டுக்களுடன் மொத்தமாக 66 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.
2015 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் விளையாடிவந்த மெண்டிஸ் இறுதியாக இவ்வருடம் (2019) மே மாதம் முதல் தர போட்டியொன்றில் விளையாடியிருந்தார். இந்நிலையில் தற்போது 34 வயதாகும் அஜந்த மெண்டிஸ் முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்துள்ளார்.
பாக். அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர….
2008ஆம் ஆண்டு டுபாயில் நடைபெற்ற ஐ.சி.சி விருதுவழங்கும் விழாவில் வைத்து அஜந்த மெண்டிஸுக்கு ‘வருடத்தின் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருது’ வழங்கி வைக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் மார்ச் மாதம் 3ஆம் திகதி லாஹுர் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்கு வைத்து தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அஜந்த மெண்டிஸும் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க