இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், ஐ.சி.சியினால் அணிகள் மற்றும் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் நேற்று(18) வெளியிடப்பட்டது.
இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், உபுல் தரங்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் சுரங்க லக்மால் உள்ளிட்டோர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இலங்கை அணி இந்த வருடத்தின் இறுதி சவாலை எப்படி சமாளிக்கும்?
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம்…
இதன்படி, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இத்தொடரில் 2 சதங்களைக் குவித்து அசத்திய அஞ்செலோ மெதிவ்ஸ், 2 இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அத்துடன், இவ்வருடத்தில் ஒரு நாள் அரங்கில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 3ஆவது வீரராக மாறிய உபுல் தரங்க, 15 இடங்கள் முன்னேறி 36ஆவது இடத்துக்கும், அதிரடி வீரர் நிரோஷன் திக்வெல்ல 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு 37ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஒரு நாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 876 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ் (872 புள்ளிகள்) 2ஆவது இடத்திலும், அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் (865 புள்ளிகள்) 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (846 புள்ளிகள்) 4ஆவது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் தனது 3ஆவது இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை படைத்த இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா (816 புள்ளிகள்) 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஒரு நாள் போட்டித் தரவரிசை 800 புள்ளியை ரோஹித் சர்மா கடந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி கொக் (808 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 6ஆவது இடத்தையும், இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் ஒரு இடம் சறுக்கி 7ஆவது இடத்தையும் (802 புள்ளிகள்) பெற்றுள்ளனர். தென்னாபிரிக்க அணி வீரர்களான டூ ப்ளெசிஸ் (773 புள்ளிகள்), ஹசிம் அம்லா (766 புள்ளிகள்), நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (760 புள்ளிகள்) ஆகியோர் முறையே 8 முதல் 10 இடங்களில் நீடிக்கின்றனர்.
T-10 கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பறிகொடுத்த இலங்கை வீரர்கள்
எனினும், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஒரு இடம் ஏற்றம் கண்டு 14ஆவது இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பந்துவீச்சாளருக்கான பட்டியலில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் 14 இடங்கள் முன்னேறி 22ஆவது இடத்தையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 9 இடங்கள் முன்னேறி 45ஆவது இடத்தையும், 11 இடங்கள் முன்னேறிய நுவன் பிரதீப் 63ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சஹால் இலங்கை அணிக்கெதிரான தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்மூலம் 28ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், குல்தீப் யாதவ் 56ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
புதிய பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி (759 புள்ளிகள்), தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர் (743 புள்ளிகள்), இந்திய வீரர் ஜஸ்பிரிட் பும்ரா (729 புள்ளிகள்), அவுஸ்திரேலியாவின் ஹசல்வுட் (714 புள்ளிகள்), தென்னாபிரிக்காவின் ரபாடா (708 புள்ளிகள்) அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (684 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட் (671 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 7 இடங்களில் தொடருகின்றனர்.
இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு
இலங்கை மற்றும் பங்களாதேஷ் …
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (649 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்தையும், மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரைன் (646 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் லயெம் பிளங்கெட் (646 புள்ளிகள்) ஆகியோர் ஒரு இடம் முன்னேறி இணைந்து 9ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.
அதேபோல சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் 3 இடங்கள் முன்னேறிய மெதிவ்ஸ், 321 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் (352 புள்ளிகள்), பங்களாதேஷ் வீரர் சகிப் அல்-ஹசன் (346 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 2 இடங்களில் தொடருகின்றனர்.
இதேவேளை, ஒரு நாள் அணிகளுக்கான புதிய தரவரிசையில், 84 புள்ளிகளுடன் இலங்கை அணி 8ஆவது இடத்திலும், 92 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் 7ஆவது இடத்திலும் உள்ளது. எனினும், 121 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா முதலிடத்திலும், 119 புள்ளிகளுடன் இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் வருமாறு:
- தென்னாபிரிக்கா (121 புள்ளிகள்)
- இந்தியா (119)
- அவுஸ்திரேலியா (114)
- இங்கிலாந்து (114)
- நியூசிலாந்து (111)
- பாகிஸ்தான் (99)
- பங்களாதேஷ் (92)
- இலங்கை (84)
- மேற்கிந்திய தீவுகள் (77)
- ஆப்கானிஸ்தான் (54)
- ஜிம்பாப்வே (52)
- அயர்லாந்து (41)