சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இலங்கை ஒருநாள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>அடுத்த ஆசியக் கிண்ணத் தொடர்களுக்கான இடங்கள் அறிவிப்பு
அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை ஒருநாள் குழாத்தில் மிக முக்கிய மாற்றமாக புதிய அணித்தலைவரின் தெரிவு மாறுகின்றது. அதன்படி இலங்கை ஒருநாள் அணியின் புதிய தலைவராக சரித் அசலன்க மாற்றப்பட்டிருக்கின்றார்.
ஏற்கனவே சரித் அசலன்க இலங்கை T20I அணியின் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் தற்போது குசல் மெண்டிஸிற்குப் பதிலாக ஒருநாள் அணியின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதவிர இலங்கை ஒருநாள் அணி இறுதியாக பங்களாதேஷ் விளையாடிய ஒருநாள் தொடரில் உள்வாங்கப்பட்ட பெரும்பாலான வீரர்களுடன் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த வீரர்களில் இலங்கையின் துடுப்பாட்டத்துறைக்கு பலம் கொடுக்கும் வீரர்களாக அணித்தலைவர் சரித் அசலங்கவோடு, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.
அத்துடன் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஜனித் லியனகே மேலதிக துடுப்பாட்டப் பலமாக அமைகின்றார்.
இலங்கையின் பந்துவீச்சு துறையை நோக்கும் போது அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக டில்சான் மதுசங்க, அசித பெர்னாண்டோ ஆகியோரும் பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன ஆகியோர் காணப்படுகின்றனர். அத்துடன் அனுபவ சுழல்வீரரான அகில தனன்ஞயவிற்கும் இலங்கை ஒருநாள் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை – இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் வெள்ளிக்கிழமை (02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஒருநாள் குழாம்
சரித் அசலங்க (தலைவர்), குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், நிஷான் மதுஷ்க, வனிந்து ஹஸரங்க, ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஸன, டில்சான் மதுசங்க, அகில தனன்ஞய. மதீஷ பதிரன, அசித பெர்னாண்டோ