ஜப்பானின் கிபு நகரின் நகரகவா விளையாட்டரங்கில் இன்று (07) ஆரம்பமாகிய 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுவட்டு, மைதான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அருண தர்ஷன, பசிந்து கொடிகார, டில்ஷி ஷியாமலி குமாரசிங்க, அமாஷா டி சில்வா ஆகியோர் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் இலங்கை அணியின் முகாமையாளர் பதவிநீக்கம்
ஜப்பானின் கிபு நகரில் இம்மாதம்…
இதன்படி, நாளை (08) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிகளில் இந்த நான்கு வீரர்களும் இலங்கைக்காக குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தினையாவது பெற்றுக்கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 437 வீர, வீராங்கனைகள் பங்குபற்றும் 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று காலை ஜப்பானின் கிபு நகரில் மிகவும் எளிமையான தொடக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியது.
இதனைத்தொடர்ந்து மைதான மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி இதில் முதலாவது தங்கப் பதக்கத்தை பெண்களுக்கான வேகநடைப் போட்டியில் கலந்துகொண்ட சீனாவின் லீ மா பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியை அவர் 45 நிமிடங்கள் 20.47செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட வலள ஏ ரத்னாயக்க கல்லூரி மாணவி டில்ஷி ஷியாமலி குமாரசிங்க, போட்டியை 54.82 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, நாளை (08) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடன் அவர் களமிறங்கவுள்ளார். எனினும், முதல் தகுதிச் சுற்றில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இந்திய வீராங்கனை ஜிஸ்னா மெதிவ் இறுதிப் போட்டியில் டில்ஷிக்கு பலத்த போட்டியை கொடுப்பார் எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக, கடந்த மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய டில்ஷி குமாரசிங்க (54.47 செக்.) புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டமை நினைவுகூறத்தக்கது.
இதேவேளை, டில்ஷியுடன் இப்போட்டியில் பங்குபற்றிய ஜப்பான் வீராங்கனை யுரி ஒக்குமுரா (56.03 செக்.) மற்றும் கஸகஸ்தான் வீராங்கனை அலெக்ஸான்ட்ரா (57.38 செக்.) ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அமாஷாவின் சிறந்த நேரப்பதிவு
தெற்காசியாவின் அதிவேக கனிஷ்ட வீராங்கனையான அமாஷா டி சில்வா, இன்று மதியம் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
குறித்த போட்டியை 11.80 செக்கன்களில் நிறைவுசெய்த அமாஷா, தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவுசெய்தார்.
கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.92 செக்கன்களில் நிறைவு செய்த அமாஷா, புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமாஷாவுடன் தகுதிச் சுற்றில் போட்டியிட்ட ஹொங்கொங்கின் சான் புய் கேய் (12.09 செக்.) இரண்டாவது இடத்தையும், ஜப்பானின் சய்ட்டோ எமி (12.17 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.
400 மீற்றர் இறுதிப் போட்டியில் அருண, பசிந்து
இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கு 400 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்கின்ற முக்கிய வீரர்களுள் ஒருவராக கருதப்படும் இலங்கை அணியின் தலைவர் அருண தர்ஷன, இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டியை 46.89 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
கண்டியில் முதல் தடவையாக நடைபெறவுள்ள ஒலிம்பியன்ஸ் ஓட்டம்
சர்வதேச ஒலிம்பிக் தினத்தை…
கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றரில் ஓட்டப் போட்டியில் (46.55 செக்), புதிய போட்டி சாதனையுடன் அருண தர்ஷன தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதேநேரம், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதலாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட இலங்கையின் மற்றுமொரு வீரரான பசிந்து கொடிகார, போட்டியை 47.94 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இவரும், கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 46.99 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, நாளை நடைபெறவுள்ள ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டிக்கு அருண தர்ஷன மற்றும் பசிந்து கொடிகார ஆகியோர் தகுதியினைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எனினும், இரண்டாவது தகுதிச்சுற்றில் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட ஜப்பான் நாட்டு வீரர் சுஜி மொரி, இலங்கை வீரர்களுக்கு பலத்த போட்டியினைக் கொடுக்கலாம் என நம்பப்படுகின்றது.
இலங்கை வீரர்களின் போட்டி நேரங்கள் (08-06-2018)
- டில்ஷி ஷியாமலி குமாரசிங்க – மதியம் 12.00 மணிக்கு
- அருண தர்ஷன மற்றும் பசிந்து கொடிகார – மதியம் 12.10க்கு
- அமாஷா டி சில்வா – மதியம் 01.55 மணிக்கு