கவலைகொள்ளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

391

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தமது சுற்றுப்பயணத்தில் அங்கே முதலாவதாக நடைபெற்று முடிந்திருக்கும் T20 தொடரில் 3-0 என வைட்வொஷ் செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்த தொடரில் மிகவும் மோசமாக செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி, T20 போட்டிகளில் தமது நான்காவது தொடர் தோல்வியினைப் பதிவு செய்த நிலையில், இந்த தோல்விக்காக இலங்கை கிரிக்கெட் அணி மீது கடும் விமர்சனங்களும் எழுந்திருந்தன. 

இரண்டு LPL அணிகளின் உரிமையாளர்கள் விலகல்

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கவலை வெளியிட்டிருக்கின்றனர். 

இதில் இலங்கை கிரிக்கெட் அணி, 1996ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தினை வென்ற போது இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த வீரரும், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவருமான ரொஷான் மஹாநாம தொடர் தோல்விகளுக்கு வீரர்களின் மனநிலையே காரணம் என தனது ட்விட்டர் கணக்கின் மூலம் குறிப்பிட்டிருந்தார்.

”அப்போதைய வீரர்களுக்கும், இப்போதைய வீரர்களுக்கும் பாரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இது வீரர்களின் மனப்பாங்குடன் சம்பந்தப்பட்டிருக்கின்றது. உங்கள் நாட்டுக்காக நீங்கள் ஏதாவது செய்யும் போது, நாட்டின் பெருமையினை கருத்திற்கொள்ளாது செயற்படுவது கவலையினைத் தருகின்றது.”

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண நாயகர்களில் ஒருவரும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் அதிரடி துடுப்பாட்டவீரர்களில் ஒருவருமான சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி தொடர்பில் உடனடி நடவடிக்கைகளினை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருப்பதாக கூறியிருக்கின்றார். 

”இலங்கை கிரிக்கெட்டிற்கு இது மிகவும் சோகமான நாள். நிலைமை மிகவும் மோசமாகியிருக்கின்றது. நாம் (எமது) கிரிக்கெட்டை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”

சனத் ஜயசூரிய ஒரு பக்கம் இருக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஜாம்பவனான குமார் சங்கக்கார இலங்கை கிரிக்கெட் அணி இலக்குகளை அடிப்படையாக வைத்து வீரர்களை தெரிவு செய்ய வேண்டும் என T20 தொடரின் போதான போட்டி வர்ணனையின் போது  சுட்டிக்காட்டியிருந்தார்.

”T20 உலகக் கிண்ணம் எமது அண்மைய இலக்காக இருப்பதனால், அதில் யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டி இருக்கின்றது. இதன் பின்னரே உண்மையில் 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணம். மற்றைய விடயம் என்னவெனில் இவர்கள் தான் சிறந்த வீரர்கள் என்றால்? (சிறந்த வீரர்களுக்குரிய) விளையாட்டையா அவர்கள் விளையாடுகின்றனர்?? இந்த விடயம் அவர்களை சர்வதேச கிரிக்கெட்டில் இருக்க வைத்து மாத்திரம் அல்ல உள்ளூர் முதல்தரப்போட்டிகளில் வைத்தும் மதிப்பிடப்பட வேண்டும்.”

படுதோல்வியுடன் T20 தொடரினை முழுமையாக இழந்த இலங்கை அணி

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஹசான் திலகரட்னவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி தொடர்பில் கவலையடைந்திருப்பதாக தெரிவித்திருந்ததோடு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நுட்பம் சார்ந்த விடயங்களில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.

கடந்த இரவில் நடந்த போட்டியினைப் பார்க்கும் போது எனது இதயம் கணத்துப் போய்விட்டது. ஆனால், இதற்காக வீரர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும், அணி நிர்வாகத்தினையும் குறை கூறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. நாம் கிரிக்கெட்டின் திட்டம் சார்ந்த விடயங்களை தவிர்த்து, நுட்பம் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதன்படி, பயிற்றுவிப்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய தருணமாக இது காணப்படுகின்றது.”

இலங்கை கிரிக்கெட் அணி மோசமான முறையில் ஒருநாள் தொடரினை பறிகொடுத்த இந்த சந்தர்ப்பத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அடுத்த கட்டமாக இலங்கை – இங்கிலாந்து அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் நாளை (29) டர்ஹமில் நடைபெறவிருக்கின்றது. 

மூன்று போட்டிகள் கொண்ட குறித்த ஒருநாள் தொடர், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினுடைய ஒருநாள் சுபர் லீக்கினுள் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…