திசர பெரேராவை பாராட்டும் இலங்கை அணியின் வீரர்கள்

4144
Sri Lanka's Thisara Perera celebrates scoring a century (100 runs) during the second one-day international cricket match between New Zealand and Sri Lanka at Bay Oval in Mount Maunganui on January 5, 2019. (Photo by MICHAEL BRADLEY / AFP)

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள்  போட்டியில் இலங்கை அணி, துரதிஷ்டவசமாக 21 ஓட்டங்களால் தோல்வியினை தழுவிய போதிலும் குறித்த போட்டியில் இலங்கை அணிக்காக அபார சதம் ஒன்றினை விளாசி போராட்டமான ஆட்டத்தினை காண்பித்திருந்த திசர பெரேரா இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் அனைவரதும் உள்ளங்களை வென்றிருந்தார்.

திசர பெரேரரா நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பெற்றிருந்த சதம், அவரது கன்னி ஒரு நாள் சதமாக அமைந்திருந்ததோடு  குறித்த சதத்துடன் சேர்த்து அவர் நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது போட்டியில் 13 சிக்ஸர்கள், 8 பெளண்டரிகள் அடங்கலாக வெறும் 74 பந்துகளில் 140 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மைதானத்தை சிக்ஸர்களால் அலங்கரித்த திசர பெரேரா ; போராட்டம் வீண்<<

பெரேராவின் இந்த போராட்டகரமான சதம் குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலர் சமூகவலைதளமான டிவிட்டரில் பாராட்டியிருந்தனர்.

இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, நியூசிலாந்து அணியுடன் கடந்த ஒரு நாள் போட்டியிலும் இந்த போட்டியிலும் தனி நபர்களாக குசல் ஜனித் பெரேரா மற்றும் திசர பெரேரா ஆகியோர் செய்த விடயங்கள் திருப்தி தருகின்றது என்று கூறியிருந்ததோடு, அணியாக இலங்கை வீரர்கள் ஒருங்கிணைந்திருக்கவில்லை என தனது கவலையினை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேநேரேம், மஹேல ஜயவர்தன நேர்மறையான (Positive) விடயங்கள் இலங்கை அணியில் அதிகரித்திருப்பதையும், முன்னேற்ற வேண்டிய விடயங்கள் சில இன்னும் இருப்பதனையும் இலங்கை அணி நேரான பாதை ஒன்றிலேயே செல்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் இருந்து காயம் காரணமாக வெளியேறியிருந்த இலங்கை அணியின் சகலதுறை வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ், திசர பெரேராவின் ஆட்டம் குறித்து பேசும் போது  “இலங்கை அணிக்கு துரதிஷ்டம். ஆனால், பெரேராவின் துடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது. அணியினை வெற்றிக்கே கிட்டத்தட்ட எடுத்து சென்றுவிட்டார். சிறந்த இன்னிங்ஸ் மற்றும் சிறந்த வேலை “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, திசர பெரேராவுடன் இலங்கை அணியில் முன்னதாக விளையாடியிருந்த வேகப்பந்து வீச்சாளர் பர்வீஸ் மஹரூபும் தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

“மிகச்சிறந்த ஒரு துடுப்பாட்டம், திசர பெரேரா எங்களை குதூகலமாக வைத்திருந்ததோடு ஆட்டத்தின் இறுதிவரை போராட்டத்தினையும் காண்பித்திருந்தார். பாராட்டுக்கள் ”

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட் திசர பெரேராவின் சதம் பற்றி பேசும் போது, பெரேராவின் துடுப்பாட்டம் இதுவரையில் வந்த அதிரடி ஆட்டங்களில் சிறந்த ஒன்று எனக் குறிப்பிட்டு அதிரடியாக சதம் பெற்றதுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

திசர பெரேரா கல்வி கற்ற கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரும், தற்போதைய இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திமுத் கருணாரத்ன திசரவின் சதம் பற்றி பேசும் இலங்கை அணி பெரேராவின் சதம் மூலம் போட்டியில் வென்றிருக்கும் எனில், அதுவே ஒரு நாள் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸ் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவர்களோடு இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான திலான் சமரவீர, இலங்கை ஒரு நாள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணத்திலக்க, லஹிரு திரிமான்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரும் தங்களது பாராட்டுக்களை திசர பெரேரவிற்கு தெரிவித்திருந்தனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<