கடந்த 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் பற்றி முன்வைக்கப்பட்டிருந்த ஆட்டநிர்ணயக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட அதிகாரி SSP ஜகத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
SSP ஜகத் பொன்சேக்கா, விசாரணைகளின் போது கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பற்றி மூன்று கிரிக்கெட் வீரர்களும் வழங்கிய வாக்குமூலங்கள் உண்மைத் தன்மையுடன் இருப்பதாக தெரிவித்திருந்ததோடு, அது அணியில் மாற்றங்கள் ஏற்பட்டதற்கான இயல்புக் காரணத்தினையும் வெளிப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த ஜூன் மாதம் இந்திய – இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச்சாட்டின் பின்னர் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சு இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விஷேட விசாரணைப் பிரிவு ஒன்றினை அமைத்திருந்த நிலையில், குறித்த விசாரணைப் பிரிவின் விசாரணைகளே தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இதேநேரம், இந்த இந்த விசாரணைப் பிரிவு மூலம் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா மற்றும் உபுல் தரங்க ஆகிய வீரர்கள் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் SSP ஜகத் பொன்சேக்கா குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட SSP ஜகத் பொன்சேக்கா, இந்த விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் விளையாட்டுத்துறை அமைச்சின் விஷேட விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாக இருக்கும் உயர் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்னும் SSP ஜகத் பொன்சேக்கா விசாரணைகளுக்கு என பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் அழைக்கப்பட்டது நாட்டில் ஒரு குழப்ப நிலையினை ஏற்படுத்தியிருந்தமையை சுட்டிக்காட்டி, அது இன்னும் பாரதூரமான நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
”இதுவரை பதிவு செய்யப்பட்ட மூன்று வாக்குமூலங்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே வைத்த 14 குற்றச்சாட்டுக்களையும் உண்மைப்படுத்தும் விதமாக இருக்கவில்லை. இதேநேரம், சர்வதேச கிரிக்கெட் வாரியமும் இது தொடர்பில் எந்தவித பதில்களையும் வழங்கியிருக்கவில்லை” என SSP ஜகத் பொன்சேக்கா லங்காதீப பத்திரிகையிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விசாரணைகளின் நிறைவு ஒரு பக்கமிருக்க, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக இருக்கும் அலெக்ஸ் மார்ஷல் இந்த விடயம் தொடர்பில் வெளியிட்ட கருத்து இவ்வாறு அமைந்திருந்தது.
”ஐ.சி.சி. இன் உண்மைகளை உறுதி செய்யும் பிரிவு ஆடவருக்கான 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆய்வு செய்துள்ளது. தற்போது ஐ.சி.சி. இன் விதிமுறைகளுக்கு மாற்றமாக (இந்த உலகக் கிண்ணத்தில்) குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றது என்பதை உறுதி செய்வதற்கான அல்லது விசாரணை ஒன்றினை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதேநேரம், விசாரணை ஒன்றை ஆரம்பிக்க இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் அப்போது இது தொடர்பில் ஐ.சி.சி. இற்கோ அதன் வேலையாட்களுக்கோ கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்த பதிவுகளும் காணப்படவில்லை. எனவே, நாங்கள் 2011ஆம் ஆண்டுக்கான ஆடவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகிக்க காரணங்கள் எதுவும் இல்லை.”
”நாங்கள் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எடுத்துக் கொள்வதோடு, குற்றச்சாட்டுக்களை ஆதாரங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் அது எங்களது நிலைப்பாட்டில் மாற்றத்தினைக் கொண்டு வரும்.”
”யாராவது இப்போட்டி தொடர்பிலோ வேறு ஆட்டநிர்ணய விடயங்கள் தொடர்பிலோ ஆதாரங்களைக் கொண்டிருந்தால் அவர்களை நாங்கள் ஐ.சி.சி. இன் உண்மைகளை உறுதி செய்யும் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.”
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…