இலங்கை பயிற்சியாளரின் ஆளுகையில் T20 உலகக் கிண்ணத்தில் கனடா

ICC T20 World Cup 2024

174
ICC T20 World Cup 2024

2024ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய கனடா குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, T20 உலகக் கிண்ணத் தொடரில் கனடா அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த புபுது தசாநாயக்க செயற்படவிருக்கின்றார்.

>>T20 உலகக் கிண்ணத்திலிருந்து ஜேசன் ஹோல்டர் திடீர் விலகல்

கனடா அணி T20 உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சி போட்டிகள் வரை புபுது தசநாயக்க  கனடா அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்படுவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கனடா கிரிக்கெட் சபை (CA) ஏற்பாடு செய்த கூட்டத் தொடர் ஒன்றினை அடுத்து இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளதோடு T20 உலகக் கிண்ணத் தொடரிலும், புபுது தசநாயக்கவே கனடா அணியின் பயிற்சியாளராக செயற்படவிருக்கின்றார்.

இதேநேரம் T20 உலகக் கிண்ணத்திற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் கனடா அணியில் சுழல் பந்துவீச்சாளரான நிகில் தட்டா இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ரிசிவ் ஜோசியும் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

எனினும் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர் கன்வர்பால் தாக்தர் மற்றும் சுழல்பந்துசகலதுறை வீரர் ஹார்ஷ் தாக்கேர்  ஆகியோருக்கு கனடாவின் T20 குழாத்தில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் தாக்கேரிற்கு அவரது உபாதை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

T20 உலகக் கிண்ணத்திற்கான கனடா அணி நேபாளம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளதோடு குறிப்பிட்ட போட்டிகள் அமெரிக்காவின் டல்லஸ் நகரில் இடம்பெறவிருக்கின்றன.

அதேநேரம் T20 உலகக் கிண்ண குழு A இல் பெயரிடப்பட்டிருக்கும் கனடா அணியானது தமது முதல் போட்டியில் தொடரினை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவுடன் ஜூன் மாதம் 01ஆம் திகதி விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடா அணி

 

சாட் பின் ஷபார் (தலைவர்), ஆரோன் ஜோன்சன், ரவீந்தர்பால் சிங், நவ்னீட் தலிவால், நிகோலஸ் கிர்டன், ஸ்ரேயாஸ் மொவ்வா, நிகில் தட்டா, பர்காத் சிங், ரய்யான்கான் பதான், டில்பீரிட் பஜ்வா, டிலோன் ஹெய்லிகேர், ஜூனைட் சித்திக்கி, ஜெரேமி கோர்டன், கலீம் சனா, ரிசிவ் ஜோசி

 

தலைமைப் பயிற்சியாளர் புபுது தசநாயக்க

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<