இந்தியாவில் இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய மாநில மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் இன்று (23) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பஞ்சாப் மாநிலம், படியலா நகரில் இம்மாதம் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இந்திய மாநில மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், குறித்த தொடரில் இலங்கை வீரர்களை பங்குபெறச் செய்யுமாறு இந்திய மெய்வல்லுனர் சங்கம் அழைப்பு விடுத்தது.
இந்திய மாநில மெய்வல்லுனர் தொடரில் 12 இலங்கை வீரர்கள் பங்கேற்பு
இதன்படி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்புக்காக காத்திருக்கின்ற முக்கிய 3 வீரர்களை உள்ளடக்கிய 10 வீரர்களைக் கொண்ட அணியொன்றை குறித்த தொடரில் பங்குபெறச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான அடைவுமட்டத்தை நெருங்கியுள்ள நிலானி ரத்நாயக்க பெண்களுக்கான 3,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
அவருடன் நதீஷா ராமநாயக்க (400 மீட்டர்), நிமாலி லியனாஆரச்சி (800 மீட்டர்) மற்றும் பெண்களுக்கான 4X100 அஞ்சலோட்ட அணி (அமாஷா டி சில்வா, ஷெலிண்டா ஜென்சன், சபியா யாமிக், இரேஷா மேதானி ஜயமான்ன, லக்ஷானி சுகன்திகா) இந்தத் தொடரில் பங்குபற்றவுள்ளனர்.
ஒலிம்பிக் வாய்ப்புக்காக காத்திருக்கும் இலங்கை மெய்வல்லுனர்கள்
இதனிடையே, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகேவும், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமேத ரணசிங்கவும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் முகாமையாளராக சுஜித் அபேசேகரவும், பயிற்சியாளராக விமுக்தி சொய்ஸாவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
எனவே, இந்திய மாநில மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்கள், இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை – இந்திய விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதனால் இலங்கை வீரர்கள் கத்தார் சென்று அங்கிருந்து நாளை இந்தியாவை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு இலங்கை மெய்வல்லுனர் பங்குகொள்கின்ற இரண்டாவது சர்வதேச மெய்வல்லுனர் தொடர் இதுவாகும்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<