இங்கிலாந்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் அணிக்கும், இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் அணிக்கும் இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டியானது செவ்வாய்க்கிழமை(26) இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் மைதானத்தில் ஆரம்பமானது. முதல் நாள் முடிவின் பொழுது இங்கிலாந்து அணி 355 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்த நிலையில் நேற்றைய 2ஆவது நாளை ஆரம்பித்து 500 எனும் பிரம்மாண்டமான ஓட்ட எண்ணிக்கையை அடைந்தது.
போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை(26) வெஸ்ட்பரி மற்றும் பார்ட்லட்டின் உதவியுடன் 4 விக்கட்டுகளை இழந்து 355 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து அணி, 154 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது காணப்பட்ட வெஸ்ட்பரி மற்றும் 10 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது காணப்பட்ட போப்புடன் இரண்டாவது நாளை ஆரம்பித்தது.
இரண்டாவது நாளில் தமது சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த எண்ணிக் களமிறங்கிய இலங்கை அணிக்கு வெஸ்ட்பரி மற்றும் போப் ஜோடி ஏமாற்றத்தை அளித்தது.
சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி தமக்கிடையே 126 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணி மேலும் வலுவான நிலையை அடைய உதவியது. தனது இரட்டை சதத்திற்கு 4 ஓட்டங்கள் குறைவான நிலையில் வெஸ்ட்பரி, தமித சில்வாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்ததன் பின்னே இலங்கை அணி ஆறுதல் அடைந்தது.
சிறப்பாக விளையாடிய வெஸ்ட்பரி 380 பந்துகளுக்கு முகம்கொடுத்து 16 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்களாக 196 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரராக உருவெடுத்தார்.
வெஸ்ட்பரியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 481 ஓட்டங்களைப் பெற்று இருந்த நிலையில் போப்பும் 78 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் டேனியலின் பந்து வீச்சில் குமாரவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 500 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணி சார்பாக டேனியல் 3 விக்கட்டுகளையும், குமார 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
தான் பந்து வீச்சில் விட்டுக்கொடுத்ததை துடுப்பாட்டத்தில் பிடித்துக்கொள்ளும் நோக்குடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி தனது முதல் விக்கட்டைக் குறைந்த ஓட்டங்களுக்குள் இழந்தது.
5 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் நிசங்க, பானைலின் பந்து வீச்சில் விக்கட் கீப்பர் போப்பிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி 7 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை இழந்து காணப்பட்டது.
தொடர்ந்து ஜோடி சேர்ந்த தலைவர் அசலங்க மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜயலத் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக நிதானமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.
எனினும் இலங்கை அணி 52 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் விர்டியின் பந்து வீச்சில் ஜயலத் 22 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஜயலத் ஆட்டமிழந்ததுடன் இலங்கை அணி 52 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து மீண்டும் இக்கட்டான நிலையை அடைந்தது.
3ஆவது விக்கட்டுக்காகத் தலைவர் அசலங்கவுடன் இணைந்த அவிஷ்க பெர்னாண்டோ நிதானமாக துடுப்பெடுத்தாட, ஆட்ட நேர முடிவின் பொழுது இலங்கை அணி 96 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து காணப்பட்டது.
அவிஷ்க பெர்னாண்டோ 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலும், தலைவர் சரித் அசலங்க 95 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக 55 ஓட்டங்கள் பெற்று அரை சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழக்காமலும் காணப்படுகின்றனர்.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து இளைஞர் அணி (முதல் இன்னிங்ஸ்) – 500/9d (131) வெஸ்ட்பரி 196, பார்ட்லட் 131, போப் 78
லஹிரு குமார 2/104, டேனியல் 3/91
இலங்கை இளைஞர் அணி (முதல் இன்னிங்ஸ்) – 96/2(37) சரித் அசலங்க 55*, ஜயலத் 22, பெர்னாண்டோ 13*
பானைல் 1/30, விர்டி 1/13