யெமன் அணிக்கு எதிராக இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான AFC கால்பந்து சம்பியன்ஷிப் – 2020 தொடருக்கான தகுதிகாண் சுற்றின் தமது இரண்டாவது மோதலில் இலங்கை வீரர்கள் 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி கண்டு, தமது இரண்டாவது தோல்வியை பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை வீரர்கள், இந்த தகுதிகாண் சுற்றின் B குழுவுக்கான போட்டிகளை நடாத்தும் கட்டார் அணியிடம் 5-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி கண்டிருந்தனர். எனினும், யெமன் அணி, பலம்மிக்க துர்க்மெனிஸ்தான் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட நிலையிலேயே டோஹா விளையாட்டு நகர அஸ்பயர் 4 அரங்கில் இடம்பெற்ற இந்த மோதலில் களம் கண்டது.
துருக்கி கழகத்தை பந்தாடிய ரியல் மெட்ரிட்: சிட்டி, ஜுவன்டஸ், PSG அடுத்த சுற்றில்
ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின்….
ஆட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே இலங்கை வீரர்கள் முதல் கோணர் வாய்ப்பைப் பெற்றனர். எனினும், இதன்போது உள்ளனுப்பப்பட்ட பந்து யெமன் கோல் காப்பாளரின் கைகளுக்கே செல்ல அவர் பந்தை இலகுவாகப் பற்றினார்.
போட்டியின் 12ஆவது நிமிடத்தில் இலங்கை கோல் எல்லையில் இடது பக்கத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை யெமன் வீரர் எமாட் எல்கொடைம கம்பங்களுக்குள் ஹெடர் செய்து முதல் கோலைப் பதிவு செய்தார்.
மேலும் 5 நிமிடங்களில் மைதானத்தின் மத்தியில் இருந்து வழங்கப்பட்ட பந்தை கோல் எல்லைவரை எடுத்துச் சென்ற சக்ர் அல் ஹர்பி இலங்கை கோல் காப்பாளர் முர்ஷித்திற்கு மேலால் செலுத்தி அடுத்த கோலையும் பெற்றார்.
ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியில் பந்தைப் பெற்ற இலங்கை அணித் தலைவர் மொஹமட் சபீர், நீண்ட தூர உதையாக கோல் நோக்கி செலுத்திய பந்தை யெமன் கோல் காப்பாளர் கோலுக்கு அண்மையில் இருந்து தடுத்தார். ஏற்கனவே கட்டார் அணியுடனான போட்டியில் சபீர் நீண்ட தூரத்தில் இருந்து கோல் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அடுத்த நிமிடம் யெமன் அணிக்கான மூன்றாவது கோலை மொஹமட் சாதிக் பெற்றார். கோணர் உதை வாய்பொன்றின்போது உள்வந்த பந்தை யெமன் வீரர் ஒருவர் கோலுக்கு ஹெடர் செய்ய, அதனை முர்ஷித் தட்டி விட்டார். மீண்டும் அங்கு விரைந்து வந்த சாதிக் கோலுக்குள் பந்தை தட்டி விட்டார்.
அதன் பின்னர் முதல் பாதி முடிவுறும்வரையில் எந்த அணிகளாலும் கோல்கள் பெறப்படாவிட்டாலும், யெமன் வீரர்களின் கால்களிலேயே பந்து பரிமாறப்பட்டன.
இலங்கை வீரர்கள் பின்களத்திலும் மத்திய களத்திலும் எதிரணி வீரர்களிடம் இருந்து பந்தைப் பறித்தாலும், அதனை எதிரணியின் திசைக்கு எடுத்துச் செல்லபந்துப் பரிமாற்றம் செய்வதில் கடும் சிரமப்பட்டனர்.
முதல் பாதி: இலங்கை 0 – 3 யெமன்
இரண்டாம் பாதியில் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கை வீரர்கள் தமக்கிடையிலான பந்துப் பரிமாற்றங்கள் சிலவற்றை மேற்கொண்ட போதும், கோலுக்கான சிறந்த நிறைவுகளை மேற்கொள்ளவில்லை.
முதல் பாதி போன்றே இலங்கை வீரர்கள் எதிரணியின் திசைக்கு பந்தை எடுத்துச் செல்வதில் சிரமப்பட்டனர்.
இலங்கை வீரர்கள் நீண்ட தூர உதைகள் மூலம் எதிரணியின் எல்லைக்கு பந்தை அனுப்பினாலும், அவற்றை யெமன் வீரர்கள் நிதானமாகத் தடுத்து பரிமாற்றம் செய்து ஆடினர்.
85ஆவது நிமிடத்தில் யெமன் அணிக்கு மாற்று வீரராக வந்த முன்கள வீரர் தன்னிடம் வந்த பந்தை கோல் நோக்கி ஹெடர் செய்ய, இடது பக்க கம்பத்தை அண்மித்து வெளியே சென்றது.
கட்டாருக்கு எதிராக அபார தடுப்புக்களை மேற்கொண்ட முர்ஷித்
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள……
89ஆவது நிமிடத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது சாஜித் உள்ளனுப்பிய பந்தை, சபீர் கோல் நோக்கி உதைய, பந்து இடது பக்க கம்பத்தில் பட்டு வெளியேறியது. இதனால் இலங்கை அணிக்கு கிடைத்த சிறந்த கோல் வாய்ப்பு கைநழுவியது.
இரண்டாம் பாதியில் எதிரணிக்கு எந்த கோல்களையும் விட்டுக் கொடுக்காத இலங்கை வீரர்கள் முதல் பாதியில் கொடுத்த 3 கோல்களின் காரணமாக ஆட்ட நிறைவில் தமது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தனர்.
முழு நேரம்: இலங்கை 0 – 3 யெமன்
இலங்கை அணி தமது அடுத்த மோதலில் துர்க்மெனிஸ்தான் அணியை எதிர்வரும் 10ஆம் திகதி இதே அரங்கில் எதிர்கொள்ளவுள்ளது.
கோல் பெற்றவர்கள்
யெமன் – எமாட் எல்கொடைம 12’, சக்ர் அல் ஹர்பி 17’, மொஹமட் சாதிக் 36’
மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
இலங்கை – பிரஷான்த் 87’
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<