டி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்குத் தலைவராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடாத்தும் எஞ்சலோ மெதிவ்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மலிங்க தான் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக கூறியமைக்கு அடுத்தே எஞ்சலோ மெதிவ்ஸ் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளுக்காக இந்தியா செல்லும் இலங்கை அணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அணியின் உப தலைவராக விக்கட் காப்பாளர் தினேஷ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு கூறியுள்ளது.
மேலும், இந்தத் தொடரில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோருக்குப் பதிலாக வேகபந்து வீச்சாளர் சுரங்க லக்மால் மற்றும் இலங்கை அணியின் மத்திய தர வரிசை பலம் பெற இடது கை துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்ன ஆகியோர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
15 பேர் கொண்ட இலங்கை அணி விபரம்
1. எஞ்சலோ மெதிவ்ஸ் (தலைவர் )
2. தினேஷ் சந்திமால் (உப தலைவர் )
3. திலகரத்ன டில்ஷான்
4 .லஹிறு திரிமன்ன
5. சாமர கபுகெதர
6. மிலிந்த சிறிவர்த்தன
7. தசுன் சானக்க
8 .ஷேஹான் ஜயசூரிய
9. லசித் மலிங்க
10. திசர பெரேரா
11. துஸ்மந்த சமீர
12. நுவன் குலசேகர
13 .சசித்ர சேனநாயக்க
14. சுரங்க லக்மால்
15. ரங்கன ஹேரத்
பதினாறு அணிகள் பங்கேற்கும் 6வது டி20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கை கிரிக்கட் அணி இன்று (8) இரவு 9.45 மணிக்கு Jet Airways நிறுவனத்திற்கு சொந்தமான 9W 251G என்ற விமானத்தில் இந்தியா நோக்கி செல்கிறது. அதற்கு முன் மாலை 5 மணிக்கு விளையாட்டு அமைச்சில் வீரர்களை வாழ்த்துதல் மற்றும் மதசம்பிரதாய நிகழ்வுகள் நடைபெறும். இதில் இலங்கை ஜனாநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பங்குபற்றுவார்கள் என்று தெரிவிக்கபட்டுள்ளது.