நெதர்லாந்தின் நடைபெற்ற இந்தோவன் (EINDHOVEN) சர்வதேச குத்துச்சண்டைப் போட்டித் தொடரில் கலந்துகொண்ட இலங்கை அணி 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
நெதர்லாந்து குத்துச்சண்டை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டித் தொடரில் 15 நாடுகளைச் சேர்ந்த 135இற்கும் அதிகமான வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் இலங்கை சார்பாக 7 வீரர்களும், 6 வீராங்கனைகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களை இப்போட்டித் தொடரில் கலந்துகொள்ளச் செய்வதற்கு இலங்கை குத்துச்சண்டை சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
கொழும்பு மரதனில் அசத்திய இலங்கை – வெனிசுவேலா ஜோடியின் ஒலிம்பிக் கனவு
கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன் அமைப்பு ஏற்பாடு செய்த 17ஆவது சர்வதேச கொழும்பு மரதன் ஓட்டப் …
இந்நிலையில், ஆண்களுக்கான 49 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட க்ளோனின் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த திவங்க ரணசிங்க பிரான்ஸ் நாட்டு வீரரையும், ஆண்களுக்கான 64 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட ஸ்லிம்லைன் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த தினிது சபரமாது பெல்ஜியம் நாட்டு வீரரையும் வீழ்த்தி இலங்கைக்காக தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்தனர்.
இதேவேளை, ஆண்களுக்கான 52 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எம்.வீ பண்டார, ஸ்கொட்லாந்து வீரருடன் இறுதிப் போட்டியில் மோதி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அத்துடன், யுனிசெலா விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கோஷலா நில்மினி மற்றும் கேஷானி ஹங்சிகா ஆகிய வீராங்கனைகள் முறையே 48 மற்றும் 57 கிலோ கிராம் எடைப்பிரிவுகளில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர். எனினும், குறித்த போட்டியில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளிடம் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
இதனையடுத்து பெண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான இலங்கை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஷிரோமாலா வீரரத்ன, 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நெதர்லாந்து வீராங்கனையுடன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியதுடன், வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இப்போட்டித் தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களாக டயன் கோமஸ், ஹர்ஷ குமார, அமில அரவிந்த மற்றும் ஆர். அளுத்கம உள்ளிட்டோர் செயற்பட்டதுடன், ஹேமன்த வீரசிங்க முகாமையாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.