இங்கிலாந்தில் நடைபெற்று வரும், மகளிர் உலகக் கிண்ணத்தில் இன்றைய போட்டியொன்றில், இலங்கை மகளிர் அணியினை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்கா அணி, புள்ளிகள் வரிசைப்பட்டியலின் அடிப்படையில் முதல் அணியாக தொடரில் முன்னேறுகின்றது.
மகளிர் உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியான தோல்விகளை சந்திக்கும் இலங்கை
இங்கிலாந்தில் நடைபெற்று வரும், மகளிர் உலகக் கிண்ணத்தில் இன்று (9)..
முன்னதாக, டான்டன் கவுண்டி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை மகளிர் அணித் தலைவி இனோக்கா ரணவீர முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்து கொண்டார்.
இதன்படி, இத்தொடரில் எந்தவொரு வெற்றியினையும் பெற்றிராத இலங்கை மங்கைகள் தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம், தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்தனர்.
போட்டியினை ஆரம்பித்த இலங்கை மகளிர் அணிக்கு, தென்னாபிரிக்காவின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான மேரிஷான்னே காப், போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட் ஒன்றினை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். இதனால், ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக வந்திருந்த சாமரி அத்தபத்து வெறும் ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை திரும்பினார்.
இதனால், ஆரம்பத்திலேயே சரிவினை சந்தித்துக்கொண்ட இலங்கை மகளிர் அணி தொடர்ந்தும் தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தினை வெளிக்காட்டத் தொடங்கியதுடன், மந்த கதியில் ஓட்டங்களும் சேர்க்கப்பட தொடங்கியது.
தமது அபார பந்து வீச்சுத் திறமையினால் இலங்கை மகளிர் அணியினை கட்டுக்குள் கொண்டு வந்த தென்னாபிரிக்கா, துடுப்பாட வந்த வீராங்கனைகளை தமது சிறந்த களத்தடுப்பு மூலமும் பந்து வீச்சின் மூலமும் குறுகிய ஓட்டங்களிற்குள் வீழ்த்தியது.
இலங்கை மகளிர் அணி சார்பாக, எந்தவொரு வீராங்கனையினாலும் தென்னாபிரிக்காவின் பந்து வீச்சினை சமாளித்து, 30 ஓட்டங்களிற்கு மேல் பெற முடியவில்லை.
முடிவில், 40.3 ஓவர்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை மகளிர் அணி, 101 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று சுருண்டது.
இலங்கை தரப்பில், அதிகபட்சமாக சாமரி பொல்கம்பொல மற்றும் திலானி மனோதரா ஆகியோர் தலா 25 ஓட்டங்கள் வீதம் தங்களிடையே பகிர்ந்திருந்தனர்.
இத்தொடரில், இப்போட்டி மூலம் சிறப்பான பந்து வீச்சு ஒன்றினை வெளிக்காட்டியிருந்த தென்னாபிரிக்க மகளிர் அணியில், அணித் தலைவி டேன் வேன் நியெக்கெர்க் தனது சுழல் மூலம் வெறும் 24 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்ததோடு, சப்னிம் இஸ்மாயில் மூன்று விக்கெட்டுக்களை சுருட்டி இருந்தார்.
தொடர்ந்து, 50 ஓவர்களில் 102 ஓட்டங்களினைப் பெற்றால் வெற்றி என பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி, குறுகிய ஓட்டங்களிற்குள் இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்திருப்பினும் ஆரம்ப வீராங்கனை லோரா வோல்ட்வார்ட் மற்றும் மிக்னோன் டி பீரிஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்துடன் (78) மேலதிக விக்கெட் இழப்பின்றி 23.4 ஓவர்களில் 104 ஓட்டங்களை அடைந்தது வெற்றி பெற்றது.
அதில் ஆட்டமிழக்காமல் நின்றிருந்த லோரா வோல்ட்வார்ட் 7 பௌண்டரிகள் அடங்கலாக, 48 ஓட்டங்களினையும் மிக்னோன் டி பீரிஸ் 38 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர்.
இலங்கை மகளிர் அணியில், பறிபோயிருந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஆளுக்கு ஒவ்வொன்றாக, அணித் தலைவி இனோக்கா ரணவீர மற்றும் சிறிபாலி வீரக்கொடி ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.
மகளிர் உலகக் கிண்ணத்தில் அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே பறிகொடுத்த இலங்கை மகளிர் அணி பெற்றுக்கொண்ட ஆறாவது தொடர் தோல்வி இதுவாகும். இலங்கை அணி, இத்தொடரில் ஆறுதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம், சனிக்கிழமை (15) பாகிஸ்தான் மகளிர் அணியுடனான போட்டியில் மோதுகின்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை மகளிர் அணி – 101 (40.3) சாமரி பொல்கம்பொல 25(61), திலானி மனோதரா 25(49), டானே வான் நியெக்கெர்க் 24/4 (8), சப்னிம் இஸ்மாயில் 14/3 (7.3)
தென்னாபிரிக்கா மகளிர் அணி – 104/2 (23.1) லோரா வோல்ட்வார்ட் 48(66)*, மிக்னோன் டி பீரிஸ் 38(53), இனோக்கா ரணவீர 20/1 (6)
போட்டி முடிவு – தென்னாபிரிக்க மகளிர் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி