போராட்டத்தின் பின்னர் இலங்கை மகளிர் அணியை வீழ்த்திய இந்தியா

269

கட்டுநாயக்கவில் உள்ள சிலாபம் மேரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில், இலங்கை மகளிர் அணி போராடி, தோல்வியடைந்தது.

இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி, நிர்ணயித்திருந்த 167 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

>> இந்திய மகளிர் அணிக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்து, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கினார். இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணி முதல் பந்து ஓவரிலேயே தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

இந்திய அணியின் நம்பிக்கைக்குறிய ஸ்ம்ரிட் மந்தனாவின் விக்கெட்டை, முதல் பந்து ஓவரின் இரண்டாவது பந்தில், உதேசிகா பிரபோதனி வீழ்த்தி, இலங்கை அணிக்கு நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுத் தந்தார்.

எனினும், அடுத்து களமிறங்கிய இளம் வீராங்கனை ஜெமிமாஹ் ரொட்ரிகஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஓட்டங்களை குவித்தார். வேகமாக இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முற்பட்ட இவர், 15 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரொட்ரிகஸின் பின்னணியில் ஓட்டங்களை குவித்த தனியா பஹடியா, ஆனுஜா படில் மற்றும் வெதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை 20 ஓவர்களில் 166/8 ஆக உயர்த்த உதவினர். தனியா பஹடியா அதிகபட்சமாக 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பட்லி 36 ஓட்டங்களையும், வெதா 21 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பாக சஷிகலா சிறிவர்தன மற்றும் உதேஷிகா பிரபோதனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

>> இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள்

பின்னர், துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, யசோதா மெண்டிஸின் அதிரடி துடுப்பாட்டத்துடன் வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை பதம்பார்த்த யசோதா 12 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களை விளாசி அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

இவர் ஆட்டமிழந்த பின்னரும் இலங்கை அணி நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடியது. அணி சிறப்பான வேகத்தில் ஓட்டங்களை பெறத்தொடங்கிய போதிலும், குறைந்த ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுக்கத்திருந்தது. முதல் பத்து ஓவர்களில் இலங்கை அணி 10 இற்கும் அதிகமான ஓட்டவேகத்துடன் துடுப்பெடுத்தாடியிருந்தது. எனினும், இறுதிக்கட்டத்தில் வெற்றியினை நெருங்கிய இலங்கை அணி, துரதிஷ்டவசமாக 155 (19.3) ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, 13 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இலங்கை அணிக்கு நம்பிக்கைக் கொடுத்திருந்த அணித் தலைவி சமரி அதபத்து 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, போட்டியின் இறுதிக்கட்டம் வரை போராடிய ஏசானி லொகுசூரியகே 45 ஓட்டங்களை அதிகபட்சமாக விளாசியிருந்தார். இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசியிருந்த பூனம் யாதவ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய முதல் T20 போட்டியின் வெற்றியின் அடிப்படையில், இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என முன்னிலையை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்